மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி, விளையாட்டு, பண்பாட்டுத் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.
அத்துடன், மத்திய கல்வி அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்களும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் ஆளுநரால் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.