← முகப்பு செய்திகள்

‘மனித குலத்தின் மிகப்பெரிய சாதனை’ – சூரியக் குடும்பம் பற்றிய பார்வையை மாற்றிய வாயேஜர் விண்கலம்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
‘மனித குலத்தின் மிகப்பெரிய சாதனை’ – சூரியக் குடும்பம் பற்றிய பார்வையை மாற்றிய வாயேஜர் விண்கலம்

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech

1977-ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இரட்டை விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 1 விண்கலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமியில் இருந்து ஓர் ஒளி நாளைக் கடந்திருக்கும். ஒளி நாள் என்பது ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தூரம், அதாவது கிட்டத்தட்ட 26 பில்லியன் கிலோமீட்டர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை விடவும் நீண்ட தூரத்தை வாயேஜர் 1 கடந்துவிட்டது. அதன் மைலேஜை விடவும் அந்த விண்கலத்தில் இருந்து தற்போதும் நாசாவுக்கு தகவல் வந்து கொண்டிருப்பது தான் அசாத்தியமானதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன.

அவை வானியலாளர்களுக்குப் பிரபஞ்சம் பற்றிய விலைமதிப்பில்லாத தகவல்களை வழங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொன்மையானதாக கருதப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கி வருவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

"உங்கள் காரைத் திறப்பதற்கான ரிமோட் சாவியில் இருக்கின்ற அளவிலான நினைவகம் தான் வாயேஜரில் உள்ள கணினியில் இருக்கின்றன," என்று வாயேஜர் திட்டத்தின் தற்போதைய விஞ்ஞானியான முனைவர் லின்டா ஸ்பில்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அது அக்காலகட்டத்துக்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், AFP via Getty Images

பிரமாண்ட சுற்றுலா

நமது சூரிய குடும்பம் மீதான மனிதர்களின் நவீன தேடலின் பின்னணியில் வாயேஜர்கள் உருவாகின.

அவை விண்ணில் செலுத்தப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மற்ற கிரகத்துக்கான வெற்றிகரமான பயணத்தை நாசா முடித்திருந்தது. 1962-இல் மெரைனர் 2 விண்கலம் வெள்ளி (வீனஸ்) கோள் அருகே சென்ற போது அது நிகழ்ந்தது.

அதற்கு முன்று ஆண்டுகள் கழித்து மெரைனர் 4 விண்கலம் செவ்வாய் (மார்ஸ்) கிரகத்தைக் கடந்து பூமிக்கு அப்பால் ஒரு கிரகத்தின் மிக நெருங்கிய புகைப்படத்தை முதல்முறையாக எடுத்தது.

1970களில் இறுதியில் அமெரிக்க விண்வெளி பொறியாளர் கேரி ஃப்ளான்ட்ரோ வியாழன் (ஜூபிட்டர்), சனி (சேட்டர்ன்), யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களின் அரிதான சீரமைப்பைக் கணித்ததன் பிறகு அந்த நான்கு வெளிப்புற பிரமாண்ட கிரகங்களை அடைவதற்கான திட்டங்கள் தொடங்கின.

இது ஒரு சாத்தியமான விண்கலம் அந்தக் கிரகங்களை எளிதாக அடைவதை அனுமதித்தது. வாழ்நாளில் ஒருமுறை நிகழும் வாய்ப்பான இதனை விஞ்ஞானிகள் 'பிரமாண்ட சுற்றுலா (கிராண்ட் டூர்)' என்று அழைத்தனர்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech

அப்போது இந்தப் பிராந்தியத்தைப் பற்றிய நமது அறிவு மிகவும் அடிப்படையானதாக இருந்தது.

"பண்டைய கிரேக்கர்கள் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அவை வெறும் ஒளிப் புள்ளிகளாக இருந்தன," என்கிறார் எழுத்தாளரும் விண்வெளி ஆய்வாளருமான ஏமி ஷிரா தெய்டெல்.

ஆனால் வாயேஜர் திட்டத்தால் நாம் கிரகங்கள் பற்றி தெளிவற்ற எண்ணத்தில் இருந்து அனைத்து வகுப்பறையில் இருக்கக்கூடிய பரிச்சயமான வரைபடங்கள் என்கிற நிலைக்கு வந்தோம் என்று அவர் தெரிவிக்கிறார்.

வெளிப்புற கிரகங்களுக்கான நாசாவின் முதல் திட்டமான பயோனியர் 10 (Pioneer) 1973-ஆம் ஆண்டு வியாழன் கிரகத்துக்கு அருகே சென்றது. அதன் மூலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் இடையேயான சிறுகோள் பட்டையை வெற்றிகரமாகக் கடந்து மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதன் அடுத்த திட்டமான பயோனியர் 11 ஆறு ஆண்டுகள் கழித்து சனி கிரகம் அருகே சென்றது.

வாயேஜர்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு திட்டமும் மிகவும் எளிமையானவை.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Suzette Cummings/Nasa

1969-இல் நிலவில் தரை இறங்குவதில் சோவியத் யூனியனை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா வெற்றிகரமாக முந்தியதைத் தொடர்ந்து எதிர்கால திட்டங்களுக்கான நிதியுதவி மற்றும் அரசியல் ஆதரவைப் பெறுவதில் நாசா சிறிய பின்னடைவைச் சந்தித்தது.

வாயேஜரின் பிரமாண்ட பயணத்துக்கு மாற்றாக வெளிப்புற கிரகங்களில் இரண்டுக்குச் செல்லும் எளிய திட்டம் முன்வைக்கப்பட்டது.

எனினும் திரை மறைவில் செயல்பட்ட விஞ்ஞானிகள் வாயேஜர்கள் அதனையும் கடந்து செல்வதற்காகத் தயார்படுத்தி வந்தனர்.

"அதிகாரப்பூர்வமாக வியாழன் மற்றும் சனி கிரகத்துக்கான ஐந்து ஆண்டு திட்டமாக வடிவமைத்தோம். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் சிறிது காலம் கூடுதலாக நிலைத்திருக்கும் விதத்தில் அதனை வடிவமைத்தோம்," என ஒப்புக்கொள்கிறார் வாயேஜர் திட்டத்தில் தற்போதும் பணியாற்றும் வானியற்பியலாளரான முனைவர் ஆலன் கம்மிங்ஸ்.

ஒரே மாதிரியான விண்கலங்களாக தயாரிக்கப்பட்ட இவற்றில் வாயேஜர் 2 ஆகஸ்ட் 1977-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இரு வெவ்வேறு பாதைகளில் அந்த விண்கலங்கள் சென்றன, வாயேஜர் 1 அதன் இரட்டை விண்கலத்தை அந்த ஆண்டின் இறுதியில் முந்தியது.

புதிய உலகங்களைக் காண்பித்த வாயேஜர்

இறுதியில் இந்தத் திட்டங்களே அதன் மதிப்பை எழுத ஆரம்பித்தன. நமது சுற்றத்தைப் பற்றி தங்களுக்கு தெரிந்தது என வானியற்பியலாளர்கள் நினைத்தவற்றை வாயேஜர் மாற்றி எழுத தொடங்கியபோது உலகமே வியந்து பார்த்தது.

உதாரணமாக வாயேஜர் 1 முதல்முறையாக பூமிக்கு வெளியே முதல் செயல்பாட்டில் இருக்கும் எரிமலையை வியாழன் கிரகத்தின் நிலவான லோவில் (Moon lo) கண்டறிந்தது. அது வியாழன் கிரகத்தில் மின்னலையும் பதிவு செய்தது. நமது கிரகத்துக்கு வெளியே இது பதிவு செய்யப்படுவது முதல்முறை.

வாயேஜர் 2-இல் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள், வியாழன் கிரகத்தின் இன்னொரு நிலவான யுரோப்பாவின் பிளவுபட்ட பனிப்படலத்தின் கீழ் ஒரு திரவ நீர்ப் பெருங்கடல் இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியது. இது இந்நாள் வரை அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என வானியலாளர்களை ஊகிக்க வைக்கிறது.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL

வியாழனின் நிலவான லோவை முதலில் கண்டதை கம்மிங்ஸ் நினைவில் வைத்துள்ளார். அது அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

"நான் அப்போது வளாகத்தில் இருந்தேன். ஒரு காணொளி பதிவு வந்திருந்தது," என அவர் நினைவுகூர்கிறார்.

மேலும், "அங்கு லோ அதன் முழு மகிமையுடன் அங்கு இடம்பெற்றிருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. நமது நிலா மிகவும் சாம்பல் நிறத்தில் சுவாரஸ்யமற்றதாக உள்ளது. நிலவுகளில் இவ்வளவு பன்மைத்துவம் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனை அடையும் முதல் விண்கலமாக வாயேஜர் 2 இருக்கும் என நாசா முடிவெடுத்திருந்தது. 1986 மற்றும் 1989-இல் அருகே செல்வதன் மூலம் பிரமாண்ட சுற்றுலா முடிவுக்கு வரும் எனக் கருதப்பட்டது.

'வெளிர் நீலப் புள்ளி'

வாயேஜர்கள் ஒரு விதமான புத்தாக்கத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையுடன் தங்களின் இலக்குகளை அடைந்தன.

ஸ்லிங்ஷாட் உத்திகள் என அழைக்கப்பட்ட முறை ஒவ்வொரு கிரகத்தின் புவியீர்ப்பைப் பயன்படுத்தி திசைவேகம் பெற்று அடுத்த இலக்கை அடைவதற்காக திசையை மாற்ற அனுமதித்தது. இது நெப்ட்யூனை அடைவதற்கான பயண நேரத்தை 30 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்தது.

இந்தத் திட்டங்களில் ப்ளுடோனியம் சார்ந்த அணுக்கரு மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொரு ஆண்டும் 4 வாட் ஆற்றலை இழந்துவந்தன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech

1990-இல் வாயேஜரின் கேமரா நிறுத்தப்படுவதற்கு முன்பாக, அது நெப்ட்யூனைக் கடந்திருந்த சூழலில் திரும்பி பூமியை புகைப்படம் எடுத்தது.

விண்வெளியின் பரந்த வெளியில் ஒரு சிறிய வெளிர் நீலப் புள்ளியாக பூமி அதில் தெரிந்தது.

அது மறைந்த வானியலாளரான கார்ல் சாகனின் எண்ணமாக இருந்தது.

"இந்த வெளிர் நீலப் புள்ளி தான் இதுநாள் வரையில் வாழ்ந்த மனிதர்கள், இதுநாள் வரையில் நீங்கள் அறிந்த மனிதர்கள்," என கார்ல் சாகன் கூறியதாக ஸ்பில்கர் நினைவுகூர்கிறார். நமது கிரகத்தை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வையும் அவர் குறிப்பிடுகிறார்.

விண்மீன்களுக்கு இடையிலான வெளி (இன்டர்ஸ்டெல்லார் வெளி)

2012-இல் ஹீலியோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரிய மண்டல வெளியின் வெளிப்புறத்தை விட்டுவிலகி இன்டர்ஸ்டெல்லார் வெளிக்குள் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக வாயேஜர் 1 மாறியது. அதன் இரட்டை விண்கலம் ஆறு ஆண்டுகள் கழித்து அதனை பின்தொடர்ந்தது.

இரண்டும் காந்தப்புலங்களைப் போல பூமிக்கு தரவுகளை தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக விண்ணில் ஆராயப்படாத பிராந்தியத்தில் இருந்து புதிய தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

"தற்போது இன்டர்ஸ்டெல்லார் மீடியத்தில் நேரடி அவதானிப்புகளை மேற்கொண்டு வரும் ஒரே கருவியாக வாயேஜர் இருக்கிறது," என்கிறார் வாயேஜரின் தற்போதைய ஆய்வில் வேலை செய்து வரும் முனைவர் பில் குர்த்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL

"பெருங்கடல் என்பது யாது என்பதை அறிந்துகொள்ள பெருங்கடலில் உங்களுடைய பாதங்களை ஈரமாக்குவதைவிட சிறந்தது எதுவும் இருக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030 வாக்கிலும் இரண்டு விண்கலன்களும் குறைந்தபட்சம் ஒரு அறிவியல் கருவியை இயக்கிக் கொண்டிருக்கும் என நாசா கணித்துள்ளது.

"இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்ய முயற்சிப்போம்," என உறுதிகூர்கிறார் ஸ்பில்கர். "நாங்கள் ஆஃப் பட்டனை அழுத்தமாட்டோம். மாறாக அதற்கான நேரம் எப்போது என்பதை வாயேஜரே முடிவெடுக்க விடுவோம்." என்றார்.

ஒரு 'வியக்கத்தக்க கண்டுபிடிப்பு'

"மனித குலத்தின் தேடலின் மிகப்பெரிய சாதனையை வாயேஜர் பிரதிபலிக்கிறது. இது உண்மையில் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடத்தைப் புரிந்துகொள்ள மனிதகுலம் மேற்கொண்ட சாகசம்," என்கிறார் குர்த்.

வெளிப்புற கிரகங்கள் நாம் உண்மையாக நினைத்ததைப் போல எளிமையானவை இல்லையென்று வாயேஜர் காண்பித்ததாகவும் அதன்மூலம் அடுத்தடுத்த திட்டங்களுக்கான வழியை உருவாக்கியதாகவும் அவர் நம்புகிறார்.

நாசாவில் யுரோப்பா க்ளிப்பர் விண்கலம் வியாழன் கிரகத்தில் நிலவான யுரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்கலமாக ஜூஸ் அதன் இலக்கான வியாழன் கிரகத்தின் நிலவுகளை 2031-இல் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜரின் திட்டங்கள் பூமிக்குத் தகவல்களை திருப்பி அனுப்புவது மட்டுமில்லை.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech

ஒவ்வொன்றிலும் 12 இன்ச் நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் உள்ளன. அதில் பூமியில் உள்ள மக்கள் 55 மொழிகளில் தெரிவித்த வாழ்த்துகள், 115 புகைப்படங்கள் மற்றும் நமது கிரகத்தின் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலகட்டங்களின் இடி மற்று இசை போன்ற ஒலிகளும் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் சாத்தியமான வேற்றுகிரகவாசிகளால் அந்த விண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மனிதகுலம் பற்றிய அறிமுகக் கடிதமாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்தத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது இதர புத்திசாலி உயிரினங்களுக்கு "ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக" இருக்கும் என்கிறார் ஸ்பில்கர். "அவர்கள் திரும்பி வந்து பூமி எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

"தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்தப் பதிவு பில்லியன் கணக்கான ஆண்டுகள் தாக்குப்பிடித்து மனிதகுலத்தைத் தாண்டியும் நிலைத்திருக்கலாம்," என்கிறார் அவர்.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் வாயேஜரைக் கண்டடைந்தால் அதில் விநோதமான செய்தி ஒன்றையும் காணலாம்.

1970களில் கம்மிங்ஸஸால் தான் உருவாக்க உதவிய உபகரணம் ஒன்றில் அவரது பெயரின் முதல் எழுத்துக்களை பொறிக்கின்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அது அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது என்னை அவர்களால் என்ன செய்ய முடியும்," என நகைப்புடன் கூறி முடித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net