எரிபொருள் விலையில் நேற்று (02) மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைக்கு பேருந்து கட்டணம் திருத்தத்தில் திருத்தப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை பேருந்து உரிமையாளர்களே சுமக்க வேண்டியுள்ளது. குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் நட்டமடைவதுடன் தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 1,500 ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குகின்றன.
அத்துடன், ஜூலை முதலாம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஏனைய செலவுகளும் அதில் சேர்க்கப்படும். தற்போது டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ள போதிலும், இந்த தருணத்தில் கட்டண திருத்தத்தை கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை.
எரிபொருளின் தரம் குறைந்துள்ளதால், எரிபொருள் தகனம் அதிகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றது.
இதன் காரணமாக, எரிபொருளின் தரம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இலங்கையில் எரிபொருள் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் கொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுகளில் திருப்தி இல்லாததால், எதிர்காலத்தில் சிங்கப்பூரின் உதவியுடன் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.