எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றமடைவதால் பேருந்து கட்டணத்தை நிலையானத் தன்மையில் பேண முடியாத நிலையில் உள்ளது.எதிர்வரும் காலப்பகுதிகளில் பேரூந்து கட்டணத்தை அதிகளவில் அதிகரிக்க நேரிடும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது திருத்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக கட்டணங்களில் பிரதிபலிக்கச் செய்ய முடியாது. தற்போதைய நிலையில் பேருந்து உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் நட்டமடைகின்றன.தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 1, 500 ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குகின்றன.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஏனைய செலவுகளும் அதில் சேர்க்கப்படும். தற்போது டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ள போதிலும் ,இந்த தருணத்தில் கட்டண திருத்தத்தை கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் எமக்கு கிடையாது.
எரிபொருள் விலை அதிகரிப்பு பேருந்து தொழில்துறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எரிபொருளின் தரம் குறித்தும் பாரிய சிக்கல் காணப்படுகிறது. எரிபொருளின் தரம் குறைந்துள்ளதால், வாகனங்களின் உதிரிபாகங்கள் பழுதடைவதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளின் தரம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் எரிபொருள் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் கொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுகளில் திருப்தி இல்லை. எதிர்காலத்தில் சிங்கப்பூரின் உதவியுடன் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றார்.