மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணை கேப்டன் பதவியை இழந்த ரிஷப் பண்ட்டிடம் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடத்திய தனிப்பட்ட உரையாடல் குறித்த தகவல்களை உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் பகிர்ந்துள்ளார்.
ஜூன் 6 முதல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்ட நிலையில், நேற்று கம்பீர் மற்றும் ரிஷப் பண்ட் இடையே ஒரு முக்கிய உரையாடல் நடந்துள்ளது. இதுகுறித்து நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய அணியின் உதவி பயிற்சியாளருமான ரையான் டென் டோஸ்கேட் கூறுகையில், "மூத்த வீரராக அணியில் எப்படி செயல்பட வேண்டும், எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து கௌதியும் (கம்பீர்) ரிஷப்பும் நேற்று பேசினர். ரிஷப் பண்ட்டின் இயல்பான அதிரடி ஆட்டத்திறனை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. ஆனால், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது இயல்பான ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி விளையாட வேண்டும் என்று கம்பீர் அவரிடம் அறிவுறுத்தினார்," என்றார்.
கடந்த 2024-25 சீசனில் 1100 ரன்களுக்கு மேல் குவித்து அவரது பேட்டிங் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக அவரது செயல்பாடு விமர்சனத்திற்குள்ளானது. 2026 சீசனின் மோசமான முடிவுகளுக்குப் பிறகு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இல்லாதபோது ரிஷப் பண்ட் வழிநடத்திய விதம் குறித்து பிசிசிஐ அதிருப்தியில் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி அணியில் ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் முடிந்த மறுநாளே தினேஷ் கார்த்திக்குடன் ரகசிய சந்திப்பு!
பதவி பறிக்கப்பட்டாலும் ரிஷப் பண்ட் வழக்கம் போல மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருப்பதாக ரையான் தெரிவித்துள்ளார். "இந்த சிறந்த இந்திய அணியில் தலைவராக இருப்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ பதவியும் தேவையில்லை என்பதை ரிஷப் புரிந்து கொண்டுள்ளார். அவர் எப்போதும் அணியின் சூழலை கலகலப்பாக வைத்திருப்பவர். அவரது மாற்றத்தை அணியில் யாரும் உணரவில்லை. அவரது பேட்டிங்கை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று ரையான் டென் டோஸ்கேட் கூறினார்.