← முகப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் (NDRSC), ‘தித்வா’ புயலினால்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 34 பார்வைகள்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் (NDRSC), ‘தித்வா’ புயலினால்
‘தித்வா’ புயல் நிவாரணம்: புதிய டிஜிட்டல் நஷ்டஈட்டு முறைமையை அறிமுகப்படுத்தியது NDRSC!

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் (NDRSC), ‘தித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேகமான, வெளிப்படையான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய டிஜிட்டல் நஷ்டஈட்டு முகாமைத்துவ முறைமை மற்றும் சமூக வினவல் பொறிமுறை ஆகியவற்றை இன்று (18)திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன், யுனிசெப் (UNICEF) இலங்கை மற்றும் ஐநா தொண்டர்கள் (UN Volunteers) அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் முறைமைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

புதிதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நஷ்டஈட்டு முகாமைத்துவ முறைமையானது, அதிக நேரத்தை விரயமாக்கும் வழக்கமான கோப்பு நடைமுறைகளுக்குப் பதிலாக சீரமைக்கப்பட்ட டிஜிட்டல் செயன்முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்க அதிகாரிகளினதும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் நிர்வாகச் சுமையைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

தித்வா புயலால் தமது அன்புக்குரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள், தமது நஷ்டஈட்டுக் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவையையோ அல்லது அரசாங்க அலுவலகங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்ல வேண்டிய தேவையையோ இந்த முறைமை இல்லாது செய்கிறது.

அதற்குப் பதிலாக, அவர்கள் தமது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இணைய வழிமுறை ஊடாக நஷ்டஈட்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். இது காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதுடன், செயன்முறையை எளிமையாகவும் வினைத்திறனாகவும் மாற்றுகிறது.

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு முக்கிய அங்கமான சமூக வினவல் பொறிமுறையானது (Community Inquiry Mechanism), தித்வா புயல் அனர்த்த நிவாரணங்கள், கொடுப்பனவுகள் மற்றும் நஷ்டஈடுகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சேவைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் வினவல்களை முறையாக நிர்வகிக்க வழிவகுக்கும்.

இப் பொறிமுறையினூடாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது 0716 807 807 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தமது வினவல்களை நேரடியாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு (NDRSC) சமர்ப்பிக்க முடியும். இந்தத் சேவை வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் இயங்கும்.

ஒவ்வொரு வினவலும் ஆரம்பக் கட்ட ஆய்வுக்குப் பின்னர், தேவையான நடவடிக்கை மற்றும் தொடர் கண்காணிப்புக்காக உரிய தேசிய அல்லது பிரதேச மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வினவலைச் சமர்ப்பிக்கும் போது, ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான குறிப்பீட்டு இலக்கம் (Unique Reference Code) வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தமது வினவலின் தற்போதைய நிலையை QR குறியீடு அல்லது துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாகக் கண்காணித்து அறிய முடியும்.

தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாமல் லியனகே இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ வரலாற்றில் இந்த டிஜிட்டல் முறைமைகள் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும், அவசர காலங்களில் உடனடிப் பிரதிபலிப்பை வழங்க இது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார். “ஒரு நெருக்கடியின் போது, உடனடிப் பிரதிபலிப்பு என்பது மிக முக்கியமானது.

இந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் எமது மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான துல்லியமான கருவிகளை எமக்கு வழங்குகின்றன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாம் வழங்கும் ஆதரவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனுக்கான ஒரு புதிய தரநிலையை நாம் இதன் மூலம் உருவாக்குகின்றோம்” என அவர் தெரிவித்தார்.

ஐநா மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தின் (HPP) கீழ் ஆதரிக்கப்படும் இந்த முயற்சிகள், சேவை வினைத்திறனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகின்றன. இந்த முறைமைகளை நிறுவுவதற்கும், அது தொடர்பான அதிகாரிகளின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய இலங்கைக்கான யுனிசெப் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களை மையப்படுத்திய உதவிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

“தகுந்த நேரத்தில் உதவி கிடைப்பது என்பது ஒரு தனிச்சலுகை கிடையாது, அது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ள உரிமையாகும். இந்த முறைமைகள் கௌரவம், வேகம் மற்றும் நீதியை வழங்குகின்றன. இதன் மூலம் சிறுவர்களும் அவர்களது குடும்பங்களும் நம்பிக்கையுடன் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்க முடியும். அத்துடன், தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும், சமூகத் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டையும் இம்முறைமைகள் உறுதிப்படுத்துகின்றன” என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகம் (Emma Brigham) தெரிவித்தார்.

“தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கும் சமூகத்திற்குமான பாலமாகச் செயற்பட்ட 34 ஐநா தொண்டர்களின் அர்ப்பணிப்பு, இந்த முறைமைகளை நிஜமாக்குவதில் முக்கிய பங்காற்றியது.

டிஜிட்டல் தளங்களை உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் மாவட்டங்கள் முழுவதும் தரவுகளைச் சேகரித்த சமூகத் தொண்டர்கள் வரை, அனைவரும் ஒரு டிஜிட்டல் தீர்வை அர்த்தமுள்ள ஆதரவாக மாற்றியுள்ளனர்” என ஐநா தொண்டர்கள் அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் ஷர்மலி ஜயசிங்க தெரிவித்தார்.

தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம், நலன்புரி நன்மைகள் சபை மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகளின் ஊடாக இந்த முறைமைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனர்த்த நிவாரண சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது என்பது பொதுச் சேவை வழங்கலை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

அனர்த்தங்களின் போது மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிவாரணங்கள் சென்றடைவதை இது உறுதி செய்கிறது. தித்வா புயலின் பின்னர் மீண்டு வர முயற்சிக்கும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் விலைமதிப்பற்றதாகும். இத்தகையதொரு சூழலில், இந்த புதிய முறைமை அவர்களுக்குத் துரிதமான உதவிகளை வழங்குவதுடன், அவர்களின் சுமையையும் குறைக்கிறது. மேலும், அவர்கள் அதிகப் பாதுகாப்புடனும் புதிய நம்பிக்கையுடனும் தங்களது வாழ்க்கையைத் தொடர இது துணையாக அமைகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net