← முகப்பு செய்திகள்

நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடைபெறுவதுடன், மீளப்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடைபெறுவதுடன், மீளப்
பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பாதுகாப்பு, நீதிக்கான வழி குறித்து தேசிய பெண்கள் ஆணைக்குழு அறிக்கை

நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடைபெறுவதுடன், மீளப் பாதிப்புக்குள்ளாவதையும் பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதையும் தடுத்தல் என அனைத்துத் தருணங்களிலும் குழந்தையின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

37ஆம் இலக்க 2024ஆம் ஆண்டின் மகளிர் வலுவாக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவானது சிறுமி ஒருவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த அண்மைய அறிக்கைகள் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) இதுவரையிலும் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆணைக்குழு ஆதரிப்பதுடன் அவற்றைப் பாராட்டுகிறது.

இவ்வழக்கில் இலங்கை பொலிஸாரும் தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரசபையும் (NCPA) முக்கிய பங்காற்றியுள்ளதை அவதானிக்கும் அதே வேளையில், மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின்போது அக்குழந்தையின் தனிப்பட்ட உரிமைகளையும் நலன்களையும் விசேடமாக பாதுகாக்கும் வகையிலே சுதந்திரமான சட்டப் பிரதிநிதித்துவத்தை அக்குழந்தை பெற்றுக்கொள்வது இன்றியமையாதது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, பிள்ளையின் நலனுக்காக வாதாட பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இல்லாத சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட குழந்தையானது போதுமான சட்டப் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொள்வது இதன் மூலம் உறுதியாகிறது.

துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கண்ணியம், பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவத்துக்கான உரிமையுண்டு என்பதுடன் நீதி கிடைப்பதற்கான உரிமையும் உள்ளது என்பதை ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) கீழும் நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்புச் சட்டங்களின் கீழும் இலங்கை அங்கீகரித்தமையினால் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மீதான ஐ.நா. உடன்படிக்கையின் கீழும் இப்பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் உறுப்புரை 27(13) கீழ், சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு என்பதுடன் சுரண்டலிலிருந்தும் பாகுபாட்டிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடும் அரசுக்கு உள்ளது.

சிறுவர் எனும் நிலைப்பாட்டிற்கு அமைய, எவ்விதப் பாகுபாட்டிற்கும் உட்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவேண்டும் எனக் கட்டுப்படுத்தும் கடமையைக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 24வது உறுப்புரை இலங்கை மற்றும் அதன் நிறுவனங்கள் மீது வைக்கிறது என்பதையும் ஆணைக்குழு கவனத்தில் கொள்கிறது.

முக்கியமாக, இது தொடர்பாக, 2007ஆம் ஆண்டின் ICCPR சட்டம், சிறுவர்களை பாதிக்கும் குற்றவியல் நடவடிக்கைகளில் அரசால் வழங்கப்படும் சட்ட உதவியைப் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு (பிரிவு 5) எனவும், பொது அல்லது தனியார் சமூக நல நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக அல்லது சட்டமன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்படுவது தொடர்பான அனைத்து விடயங்களிலும், சிறுவர்களின் நலனே முதன்மையானதாகக் கருதப்படவேண்டும் எனவும் கூறுகிறது.

அந்த வகையில், தேசிய பெண்கள் ஆணைக்குழு பின்வருவோரது ஆதரவை நல்குகிறது:

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA):

சிறுமிக்கான சட்ட மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்பு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் குழந்தை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதற்கும், பழிசுமத்தப்படுவதற்கும் பொதுவெளியில் வெளிப்படுத்தப்படுவதற்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

இலங்கை பொலிஸார்:

இவ்விடயத்துடன் தொடர்புடைய அனைத்து விசாரணைகளும் எந்தவொரு செல்வாக்கும் அல்லது தலையீடும் இன்றி, புறநிலைத் தன்மையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

விசாரணை செயல்முறை அல்லது குற்றவியல் நீதி நடைமுறை காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் பாதிப்புறாமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

2023ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவி செய்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தக்கூடிய அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமாகும்.

இந்த உரிமைகளில் பின்வருவன அடங்கும்: சிறுமியின் மிகச் சிறந்த நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் பேணும் வகையில் நடத்தப்படுதல். ஒலி – ஒளி ஊடகங்கள் மூலம் சாட்சியங்கள் அல்லது வாக்குமூலங்களை வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை கையாளுதல். பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறப்புத் தேவைகளை திறம்பட பாதுகாப்பதற்கும் கையாளுவதற்கும் தகுதியான பணியாளர்கள் மற்றும் பொருத்தமான நடைமுறைகள் இருப்பதை உறுதி செய்தல். குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பெண் மருத்துவ நிபுணர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதற்கான உரிமை.

விசாரணை மற்றும் விசாரணை செயல்முறைகளில் முடிந்த வரை பெண் அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சட்ட மா அதிபர் திணைக்களம்:

இவ்வழக்கின் உணர்திறன் தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணை செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அனைத்து நடவடிக்கைகளின் போதும் சிறுமியின் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுப் பிரமுகர்கள் உட்பட பொது மக்கள்:

குழந்தையின் தனியுரிமை, கண்ணியம், எதிர்காலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கானது, ஒரு சிறுமிக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்முறைக்கான பொறுப்புக்கூறல் பற்றியது மட்டுமல்லாமல், இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பு பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும், நியாயம், சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் திறனையும் கவனத்திற்கொள்கிறது.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான தனது அதிகார வரம்புக்குள் இந்த வழக்கு தொடர்பான முன்னேற்றங்களைத் தேசிய பெண்கள் ஆணைக்குழு தொடர்ந்து கண்காணிக்கும்.

பெண்களும் சிறுமிகளும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்போடு வாழ முடிவதை உறுதி செய்வதற்காக, தனது கடமையை நிறைவேற்றும் விதமாக, அது தொடர்புடைய அரசு நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகங்களுடன் நெருக்கமாக இந்த ஆணைக்குழு இணைந்து செயல்படும்.

பொறுப்புக்கூறல், குழந்தை பாதுகாப்பு என்பவற்றோடு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்களின் தேவைகளுக்கு உணர்வுபூர்வமாகச் செயற்படும் ஒரு குற்றவியல் நீதி அமைப்பு ஆகியவற்றுக்காக பணியாற்றுவதில் இந்த ஆணைக்குழு உறுதியாக உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net