தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து களுத்துறை கோட்ஸ் த்ரெட் நிறுவன ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம், தொழிலாளர் அமைச்சின் நேரடித் தலையீட்டினால் சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சில் களுத்துறை கோட்ஸ் த்ரெட் நிறுவனத்தினருடன் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த முக்கிய கலந்துரையாடலில், தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்த, கோட்ஸ் த்ரெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இடைக்கம்பனி ஊழியர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜானக அதிகாரிய உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
களுத்துறை கோட்ஸ் த்ரெட் நிறுவனத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களது தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ஆம் திகதி முதல் இவர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை (11) தொழிலாளர் அமைச்சில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனது தலைமையில், நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையில் இன்று பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, தொழிலாளர் மற்றும் நிர்வாகத் தரப்பினருக்கு இடையில் நிலவிய முரண்பாடுகளைக் களைந்து, தொழிலாளர் பிணக்குகள் சட்டத்தின் 12:1 பிரிவின் கீழ் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.
ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது. களுத்துறை கோட்ஸ் த்ரெட் நிறுவனத்தில் நிலவிய அசாதாரண சூழலை முடிவுக்குக் கொண்டுவர தொழில் அமைச்சு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் ஊடாக ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமுகமான முறையில் பணிகளை மீள ஆரம்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக நீடித்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதுடன், ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றார்.