குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் நேற்று புதன்கிழமை (06) கையளித்ததாக குருநாகல் நகரமுதல்வர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மாநகர சபையினுள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயங்களை கட்டுப்படுத்த முடியாமையினால் தான் பதவி விலக தீர்மானித்ததாக பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இவர் குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கொட வட்டாரத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டுமானங்கள், முறையற்ற எரிபொருள் பயன்பாடு, முறையற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள், கடமைக்கு சமூகமளித்துவிட்டு இடையில் வெளியேறுதல் மற்றும் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க முடியாமை போன்ற பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.