திறைசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் 21 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையக் குற்றங்கள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகள் இடம்பெறுகின்றன. மூன்றாம் தரப்பினருக்கு பணத்தை மாற்றியதற்கு யாராவது பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
இலங்கையில் இடம்பெற்ற முதல் நிதி முறைகேடு இதுவல்ல.இது தொடர்பாக அரசாங்கம் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய இதுவரையில் 21 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் இணையக் குற்றங்கள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சைபர் குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டமியற்றல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.