நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சி தலைவர் அபிஜித் திப்கேவை ஆதரவாளர்கள் தங்களின் தோளில் சுமந்து கொண்டு கூட்ட மேடையை நோக்கிச் சென்றனர். அப்போது கூட்டத்தில் புகுந்த சிலர், திடீரென அவரது கழுத்தில் இருந்த துணியை இழுத்து, அவரது கன்னத்தில் பலமுறை மாறி மாறி அறைந்து, கீழே இழுக்க முயன்றனர்.
அப்போது, கூட்டத்தில் சிலர் அபிஜித்தை இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து, கீழே இழுத்து தள்ள முயன்றனர். இதில், அவர் நிலைகுலைந்து போனார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், ஆதரவாளர்களுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே,“இவையெல்லாம் நம்மைப் பயமுறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், பிரச்சினையிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள். நாம் பிரச்சினையிலிருந்து சற்றும் திசை திரும்பக்கூடாது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை.” என தெரிவித்துள்ளார்.