சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக் குழுவின் உறுப்பினரும், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் தலைவருமான (பேராசிரியர்) சின் ஜன்யங் தலைமையிலான தூதுக்குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (07) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இந்தத் தூதுக் குழுவில் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் உறுப்பினரும், தேசிய மக்கள் காங்கிரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உப தலைவருமான கொங் பின், அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உறுப்பினர் காவோ சிசெங் மற்றும் அதிகாரிகள் பலரும் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
தூதுக் குழுவினரை வரவேற்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 2000 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் நீண்டகால, நெருக்கமான இருதரப்பு உறவுகளை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டில் 70வது வருடம் பூர்த்தியடையவிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
நம்பிக்கையான நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் பல தசாப்தங்களாக சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். டிட்வா சூறாவளி தாக்கத்தின் பின்னரான சூழ்நிலை, அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், சர்வதேச மற்றும் பல்தரப்பு தளங்களிலும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் நன்றியுடன் நினைவுபடுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த (பேராசிரியர்) சின் ஜன்யங், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் வலுவான, நீடித்த உறவுகளை வலியுறுத்தியதோடு, இலங்கையின் தொடர்ச்சியான அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டினார்.