← முகப்பு செய்திகள்

சமகால மேற்கு ஆசிய பூகோள அரசியல் நிலைவரங்கள் இலங்கை – இந்திய ஒத்துழைப்பை ஆழப்படுத்தத் தூண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை

🕐 04 May 2026 📂 செய்திகள் 30 பார்வைகள்
சமகால மேற்கு ஆசிய பூகோள அரசியல் நிலைவரங்கள் இலங்கை – இந்திய ஒத்துழைப்பை ஆழப்படுத்தத் தூண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை

இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் ஆழமடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற Zee Media இன் உலகளாவிய புத்தாக்க மாநாட்டில் உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியதுடன், கடந்த தசாப்தத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கிய அடையாளமாக இந்தியாவின் அனுசரணையுடன் நிறுவப்பட்ட ‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவை திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று ‘இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒவ்வொரு அம்பியூலன்ஸ் வண்டியிலும் ‘இந்திய மக்களிடமிருந்து ஒரு பரிசு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இலங்கையில் வெகுவாகப் பாராட்டப்படும் பொதுச்சேவைகளில் ஒன்றாகும்’ எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இந்தச் சேவை நாளொன்றில் சுமார் 1000 அவசர நோயாளர்கள் வரை கையாள்வதுடன் 28,000 கிலோமீற்றர் தூரம் வரை பயணிப்பதாகவும் கூறினார்.

அதேவேளை இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ‘இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார நல்லுறவு தொடரவேண்டிய அதேநேரம், இந்தியா இலங்கையை ஒரு பங்காளியாகக் கருதவேண்டும். அத்தோடு எரிசக்தி, பாதுகாப்பு, டிஜிட்டல் முறைமையிலான கொடுப்பனவுகள், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படவேண்டும்’ என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காண்பித்தார்.

அதுமாத்திரமன்றி மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போரினால் உருவாகியிருக்கும் எரிபொருள் நெருக்கடி குறித்துக் கருத்துரைத்த ஹர்ஷ டி சில்வா, ‘வெறுமனே உற்பத்தித் திறனில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், மின்னுற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவற்றின் செயற்திறனிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உள்ளிட்ட பூகோள அரசியல் நிலைவரங்கள் இருநாடுகளையும் இத்தகைய ஒத்துழைப்புக்களை விரைவுபடுத்துவதற்குத் தூண்டும்’ எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net