2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கூட்டணியை ஆட்டம் காண வைத்ததோ இல்லையோ, ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியுற்றதைத் தொடர்ந்து அதன் கூட்டணி கட்சிகள் தவெக கூடார்த்தில் ஐக்கியமாகி வருகின்றன. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை தொடர்ந்து தற்போது மதிமுகவும் பனையூருக்கு வண்டியை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக – மதிமுக கூட்டணியை பொறுத்தவரை, 2017-ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொடங்கிய நெருக்கம், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து நீடித்து வந்தது.
ஆனால், மதிமுகவில் துரை வைகோவின் ஆதிக்கம் தலைத்தூக்க தொடங்கியதில் இருந்து, திமுக – மதிமுக இடையே பனிப்போர் நிலவி வந்ததாகவே கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்த போதிலும் துரை வைகோ போட்டியிட்ட திருச்சி தொகுதியில் அவர்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. இதனால், உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவை நிற்கச் சொல்லி திமுக தலைமை வலியுறுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டம் ஒன்றில் மேடையிலேயே அழுதுவிட்டார் துரை வைகோ. அப்போதே, திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது துரை வைகோவிற்கு பிடிக்கவில்லை என்றும், அவர் திமுக தலைமைக்கு குடைச்சல் மேல் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால், வைகோ என்ற ஆளுமையின் மீதான மரியாதைக் காரணமாகத்தான் துரை வைகோ சொல்வதைப் பொருட்படுத்தாமல் திமுக தலைமை அமைதியை கடைப்பிடித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சீட் ஷேரிங்கில் கூட மதிமுகவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க கட்டாயப்படுத்தியதால் தான் துரை வைகோ தேர்தலில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றன. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தான் அண்மையில் விஜயை திருச்சி கிழக்கில் சந்தித்த துரை வைகோ, 2 மதிமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்தார்.
இப்படி, திமுக – மதிமுக கூட்டணியால் தனித்துவ அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், கூட்டணியில் மதிமுகவுக்கு உரிய அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் துரை வைகோ மட்டுமல்ல மதிமுகவினர் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவெடுத்துள்ளதாகவும், தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதோடு, எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் வைகோவே நேரடியாக களமிறங்கலாம் என்றும் தகவலக்ள் வெளியாகியுள்ளன.
வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கடந்த 9 ஆண்டுகளாக அங்கம் வகித்து வரும் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. அதேசமயம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய அரசியல் நிலைப்பாட்டை மதிமுக எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல்களில் பொதுச் செயலாளர் வைகோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை களமிறக்குவது குறித்தும் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மதிமுக தலைமையிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது ஜுன் 17 ஆம் தேதியான இன்று மாலை 3 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, தவெக – மதிமுக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.