குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (17) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விசாரணைக்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ அங்கு ஆஜராகியிருந்தார். அவரிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரியுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், யோஷித ராஜபக்ஷ 2006ஆம் ஆண்டு கடற்படையில் அதிகாரி பயிற்சி மாணவராக இணைந்திருந்தார். பின்னர் அவர் சேவையில் முன்னேறி 2019ஆம் ஆண்டு மீண்டும் இணைந்ததையடுத்து லெப்டினன்ட் கொமாண்டர் (Lieutenant Commander) பதவிக்கும் உயர்த்தப்பட்டிருந்தார்.
அவரது கடற்படை ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானிய Royal Navy பயிற்சி திட்டத்தின் கீழ் பெற்ற பயிற்சி தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், வெளிநாட்டு பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற போது ஏற்பட்ட செலவுகள் அரச நிதியிலிருந்து முறையாக அனுமதிக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய காலத்தில் கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாகவும் அவருக்கு எதிராக மேலதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.