← முகப்பு தமிழ்

(க.சிவலிங்கமூர்த்தி)முப்பது வருட கால கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த வடகிழக்கு யுத்த வெற்றியி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 58 பார்வைகள்

முப்பது வருட கால கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த வடகிழக்கு யுத்த வெற்றியின் முழுக் கௌரவமும் அதற்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.அரசியல் பகுப்பாய்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

நேற்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இராணுவ வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் மலரஞ்சலி செலுத்திவிட்டு வருவதற்குப் பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டிருக்க முடியும். அதற்கு எவ்விதப் பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும், அரசாங்கம் அந்த அனுமதியை அவருக்கு வழங்க மறுத்துள்ளது. இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப்பங்களித்த மாவீரர்களான இராணுவ வீரர்கள் விடயத்தில் இவ்வாறானதொரு கொள்கையைக் கடைப்பிடித்ததில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராகவே எமது இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து போரிட்டனர்.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொலை செய்து, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பை இன்று தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்துக்காகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது. இவ்வாறான விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் இடமளிப்பதன் மூலம், மற்றுமொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாவதை ஒருபோதும் தடுக்க முடியாது. மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைதூக்கி நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படுமாயின், அதற்கான முழுமையான பொறுப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.

இந்த வடகிழக்கு யுத்தத்துக்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கியிருந்தார். அதனை எவராலும் மறுக்க முடியாது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற வடமராட்சிப் போரின்போது பிரபாகரனை முழுமையாகச் சூழ்ந்து கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், அன்றைய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அச்சமடைந்து போரை நிறுத்தியது. அன்று போரை நிறுத்தியிருக்காவிடில் பயங்கரவாதம் அப்போதே ஒழிக்கப்பட்டிருக்கும்.

அதேபோன்று, 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர் பேர்னார்ட் குஷ்னர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் ஆகியோர் ஒன்றிணைந்து போரை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர். அன்று அவர் அந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போரை நிறுத்தியிருந்தால், இன்று இந்நேரம் ஈழ நாடு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அந்த அழுத்தங்களுக்குப் பணியாது போரை வெற்றிகரமாக முடித்து வைத்த பெருமை மஹிந்த ராஜபக்ஷவுக்குரியதாகும்.

யுத்த வெற்றியின் பின்னர் வடக்கு மாகாணத்தை முழுமையான அபிவிருத்திக்கு அவர் உட்படுத்தினார். நாட்டின் ஏனைய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் நூற்றுக்கு 10.7 ஆக இருந்தபோது, வடக்கின் வளர்ச்சி வீதத்தை நூற்றுக்கு 12.2 ஆக உயர்த்திக் காட்டினார். பாலங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், காப்பட் வீதிகள், பாடசாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் எனப் பல உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. வடகிழக்கு யுத்தத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டாயமாகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட்டதன் விளைவாக இன்று அவர்கள் சமூகத்தில் உயர்ந்துள்ளனர். வடக்குக்கு உண்மையான அமைதியைக் கொண்டுவந்தது மஹிந்த ராஜபக்ஷவேயன்றி வேறெவருமில்லை என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net