முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் உத்தியோகபூர்வமாக கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மஹிந்த ராஜபக்சவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக அச்சுறுத்திப் பெறப்பட்ட சாட்சியங்களை அரசாங்கம் பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தியோகபூர்வமாக கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், அரசாங்கத்துடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் இதனைப் பரப்பி வருவதால் கடிதம் வழியில் வந்து கொண்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அச்சுறுத்திப் பெறப்பட்ட ஒரு வாக்குமூலம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு வாக்குமூலம் அளித்த நபரே தான் அச்சுறுத்தப்பட்டதாக ஏற்கனவே சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைப்பதன் மூலம் தமது அரசியல் பலத்தைக் காட்ட ஜனாதிபதி முயற்சிக்கின்றார். மக்கள் விடுதலை முன்னணியின் மேடைகளில் இருந்து கொண்டே நீதிமன்றத் தீர்ப்புகளை ஜனாதிபதி வழங்கி வருகின்றார். இவ்வாறு மேடைப் பேச்சுகள் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க முடியும் என அவர் நினைத்தால் அது தவறு. இவ்வாறான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் சக்தி பொதுஜன பெரமுனவுக்கு உண்டு. நாம் எப்போதும் மக்களுடன் இணைந்தே எமது அரசியலை முன்னெடுப்போம்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தோ, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தோ பேசுவதை விடுத்து, எம்மை எவ்வாறு சிறையில் அடைக்கலாம் என்பது பற்றியே மே தினக் கூட்டங்களில் ஜனாதிபதி பேசியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் பதவி நிலை இன்று எவ்வளவு தூரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். கடந்த காலங்களில் எதிக்கட்சியில் இருந்த போது பேசிய அதே விடயங்களையே இன்றும் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார்.
மறுபுறம், இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஒரு தனியார் வங்கியில் இருந்து 13 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளது. சாதாரண கிராமவாசி ஒருவரின் கணக்கில் ஒரு இலட்சம் ரூபா வைப்புச் செய்யப்பட்டால், அது குறித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பும் பொறிமுறை இருக்கும் நாட்டில், இவ்வளவு பெரிய தொகை மாயமான போது எவரும் கேள்வி எழுப்பவில்லை. அத்துடன் மின்சாரத் திணைக்களத்தின் 6 இலட்சம் டொலர் பணம் காணாமல் போயுள்ளது. இவை அனைத்தும் இந்த அரசாங்கம் வந்த பின்னரே இடம்பெற்றுள்ளன.
காவல்துறையானது இன்று முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஒரு மரணம் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முழுமை பெறுவதற்கு முன்பாகவே, அது தற்கொலை என காவல்துறை அறிவித்திருந்தது. இவர்களின் அவசரம் எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நீதிமன்றக் கட்டமைப்பின் மீது எமக்கு இன்னும் நம்பிக்கையுள்ளது. ஜனாதிபதி மேடைகளில் இருந்து தீர்ப்பு வழங்கினாலும், நீதியரசர்கள் நடுநிலையாகச் செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்று பகிரங்கமாக அறிவித்த அரசாங்கம், அன்றைய தினமே விலையை அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கம் தொடர்ச்சியாகப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றது. கடந்த தேர்தல்களின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியில் இன்று எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஆனால் கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்றும் பலமான கட்சியாகவே திகழ்கின்றது என்றார்.