← முகப்பு செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப
கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு!

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, அந்தக் கடற்கரையைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டமொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடல் தடுப்புச்சுவர் அமைப்பது கடலரிப்பைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்பதை மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஒலுவில் துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்பிடித் துறைமுகம் குறித்தும் கவனம் செலுத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கக்கூடிய விஞ்ஞான பூர்வமான முறைமை ஒன்றைப் பற்றி விரைவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரையைக் கொண்ட கிழக்குக் கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடற்கரையை அண்மித்து ஹோட்டல்களை நடத்துவதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாக செயற்படுவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பாக தனக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் அத்தகையதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்பல்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இனிவரும் காலங்களில் அதற்கு இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தி, அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு வருடமும் கல்ஓயா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமையினால் அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம், தமன்ன, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கு வழங்கக்கூடிய நிரந்தர தீர்வு குறித்து அவசர ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருக்கோவில் நெல் களஞ்சியசாலை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் அட்டாளைச்சேனை கழிவு மீள் சுழற்சி நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நுவரகல தொல்பொருள் வன ஒதுக்கீட்டுப் பகுதியைப் பாதுகாத்தல் மற்றும் அருகம்பே, பானம ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல், தெஹியத்தகண்டிய ஹேனானிகல தெற்கு ஆதிவாசிகள் கிராமத்தை மையமாகக் கொண்டு மாதுருஓயா வன ஒதுக்கீட்டுப் பகுதியை அண்மித்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net