இதுகுறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் மனம் திறந்தார். 'தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிந்துகொள்ள உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய இணையதளத்தை மே 14ம் தேதி துவங்கியது தி.முக. இது தொடர்பான முழுமையான வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின். அப்போது மே 31ம் தேதிவரை கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த வெப்சைட்டில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்தனர். அவகாசம் அளிக்கப்பட்ட நாள் வரை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் மட்டுமே கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் பொதுமக்கள் என்பதுதான் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இதுதான். 'தோல்வியின்போது கருத்துகளை கேட்பதும், ஆட்சிக்கு வந்தால் தொண்டர்களை புறக்கணிப்பதும் தி.மு.க தலைமைக்கு வாடிக்கையாகிவிட்டது' என்று பெரும்பான்மையோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 'கடந்த ஆட்சியில் தொண்டர்கள் மற்றும் கட்சிக்கு உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கு துளியளவுகூட பயன் இல்லை. இதனால், தி.மு.க.வினரின் குடும்பத்தினரே அரசுக்கு எதிரான மனநிலைக்கு வந்தனர். அதேசமயம், அவர்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க விரும்பாததால், விசிலுக்கு தங்கள் வாக்கை செலுத்தினர். முதன்முறையாக அனைத்து தொகுதிகளிலும் இப்படியொரு மாற்றம் நடந்தது' என தொகுதிவாரியாக ஆதாரங்களுடன் தொண்டர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் பாசிட்டிவாகவும் சில தொண்டர்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, நாகையைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி செந்தமிழ்வேந்தன் என்பவர் 'எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தையும் நாம் கண்டிப்பாக கையாள வேண்டும். அதிகாரத்தை கைப்பற்ற பொதுத்தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்காமல், கையில் இருக்கக்கூடிய எம்.பி.க்களை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை தலைமை யோசிக்க வேண்டும். குறிப்பாக விரைவில் மத்திய அமைச்சரவை விரிவு செய்யப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியொரு நிலை வரும்போது அதில் தி.மு.க பங்கேற்க வேண்டும். கேபினட் அந்தஸ்தில் 3 அமைச்சர்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் பிற கட்சியினரின் பார்வை தி.மு.க மீது விழும் தேர்தல் தோல்வியில் துவண்டிருக்கும் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் மீண்டெழுந்து கட்சிப் பணிகளை கவனிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் 'சோஷியல் மீடியாக்களில் தி.மு.கவின் பங்களிப்பு இல்லை. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் த.வெ.கவும், நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே ஆதிக்கத்தை செலுத்தின. இது தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கை கொடுத்தது. ஆனால் தி.மு.க.வின் பங்களிப்பு ஜீரோ லெவலில்தான் இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு ஐடி விங்க்கும் ஸ்டிராங்காக இல்லை என்பதை தலைமை கவனிக்க வேண்டும் என்பதையும் தொண்டர்கள் சொல்லியிருந்தனர்.
மேலும், 'தி.க என்பது அரசியல் இயக்கம் அல்ல. தி.க.வை திருப்திபடுத்துவதற்காக இந்துக்கள் வாக்குகளை உதாசீனப்படுத்துவது ஏற்புடையதல்ல. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதை நிலை நிறுத்த இந்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவதைவிட விளம்பரங்களில்தான் அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இதில் அன்பில் மகேஷ், நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதல் மூன்று இடத்தில் இருந்தனர்.
மழைநீர் வடிகால் திட்டப்பணி என்ற பெயரில் 5 ஆண்டுகளாக சென்னை முழுவதையும் ப்ளாக் செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருந்தது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும் அரசு நிர்வாகம் தவறிவிட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக தி.மு.கவை புறக்கணித்தனர்' என தி.மு.க அரசு செய்யத் தவறியவற்றையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இந்த கருத்துகள் அனைத்தும் பிரின்ட் எடுக்கப்பட்டு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமான கருத்துகளை மட்டும் தலைவர் எடுத்துக்கொண்டாலே போதும். கட்சி சுத்தமாகிவிடும். குறிப்பாக தொண்டர்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தீவிர விசாரணை நடத்தினாலே அடுத்து எப்படி ஆட்சியை பிடிக்கலாம் என்பதற்கான வியூகத்தை எளிதில் அமைக்க முடியும்" என சொல்லி முடித்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என எங்கள் கட்சித் தலைவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இருந்தபோதிலும், ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏதாவது நடந்திருக்கின்றனவா என்பதை அறிய தொண்டர்களைக் கடந்து பொதுமக்கள் உதவியையும் நாடியிருக்கிறார். அவர்கள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார்" என்றார் நம்பிக்கையுடன்.
– கு. கணேஷ்குமார்