பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க முற்படும் நகர்வுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.
பிப்ரவரியில் தொடங்கிய இந்தப் போருக்கு, பொதுவெளியில் ஏற்பட்ட அரிதான எதிர்ப்பாக 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். 215 – 208 என்கிற கணக்கில் இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
டிரம்பின் போர் அதிகாரத்தை கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் நான்காவது முயற்சி இது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஒருவேளை செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினாலும் இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.
இந்த தீர்மானத்தை டிரம்ப் நிராகரிக்கலாம் (வீட்டோ), டிரம்பின் வீட்டோவை ரத்து செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
கடந்த மே மாதம் ஏழு முறை தோல்வியடைந்த பிறகு இதே போன்றதொரு தீர்மானம் செனட் சபை யில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக சபை வாக்கெடுப்புக்கு வரவில்லை.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தாமஸ் மாஸ்ஸி, ப்ரையன் ஃபிட்ஸ்பேட்ரிக், டாம் பேரட் மற்றும் வாரன் டேவிட்டன் ஒன்றுபட்ட ஜனநாயக கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை தீர்மானத்தை நிறைவேற்றினார். கடந்த முறை இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஜனநாயக கட்சி உறுப்பினரான ஜேரட் கோல்டன் இந்த முறை ஆதரவாக வாக்களித்தார்.
"நாடாளுமன்றத்தால் மட்டுமே போரை பிரகடனப்படுத்த முடியும். அது நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று," என மிச்சிகனைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினரான பேரட் தெரிவித்தார்.
இந்த வாக்கெடுப்புக்காக டிரம்பிடம் இருந்து எதிர்ப்பு வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அவர், "நான் எனது மனசாட்சிபடி எதைச் சரி என நினைக்கிறேனோ அதற்கு வாக்களித்தேன், அதை ஏற்கவும் நான் தயாராக இருக்கிறேன்." என்றார்.

டிரம்பின் குடியரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவின் சமீபத்திய வெளிப்பாடை இது குறிக்கிறது. இதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினரிடம் இருந்து வந்த எதிர்ப்பால் டிரம்ப் நிர்வாகம் தனது அரசியல் கூட்டாளிகளுக்கான 1.8 பில்லியன் டாலர் "ஆயுதமயமாக்கலுக்கு எதிரான" நிதியில் இருந்து பின்வாங்கியது.
பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகார குழுவில் உள்ள முன்னணி ஜனநாயக கட்சி உறுப்பினரான க்ரெகோரி மீக்ஸ் இந்த வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில், "இது இரானில் அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்டவிரோத மற்றும் விலை உயர்ந்த போருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த பின்னடைவு ஆகும். அதோடு அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் படி." என்றார்.
போரின் குறிப்பிட்ட நோக்கங்களை அடைய டிரம்ப் தோற்றுவிட்டதாகக் கூறும் மீக்ஸ் அதே வேளையில் உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தியதோடு இரானின் அணுசக்தி திட்டத்திற்கு ஒரு ராஜாங்க தீர்வை அடைவதை மேலும் கடினமாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தை இணைந்து முன்மொழிந்த மீக்ஸ், "இந்த தீர்மானம் நிறைவேறியிருப்பது ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் மேலும் ஒரு முடிவற்ற போரை விரும்பாத தங்களது மக்களின் குரல்களுக்கு அதிக அளவிலான குடியரசுக் கட்சிக்காரர்கள் செவிமடுக்கின்றனர்." என்றும் குறிப்பிட்டார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்ற போதிலும் சமீப நாட்களில் இரானை அமெரிக்கா தாக்கியுள்ளது. அதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டாளியான குவைத் மீது இரான் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. வாக்கெடுப்புக்கு முன்பாக பேசிய டிரம்ப், "போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த வார இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம்." என்றும் தெரிவித்தார்.
"நாம் நேற்று முன்தினமும் நேற்றும் அவர்களை கடுமையாக தாக்கினோம்," என இரான் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டு புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
"நாம் வேறு ஒரு காரணத்திற்கான ஒரு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டதால் அவர்கள் சற்று தூண்டப்பட்டு இருப்பதாக சிலர் கூறுவார்கள், அதனால் அவர்கள் பதில் அளிக்கிறார்கள்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அனைவரையும் கொல்லாமல்" ஓர் ஒப்பந்தத்துடன் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் தனது நிர்வாகத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்கை உடன் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
"கோட்பாட்டளவில் அவர்கள் ஒப்பந்தத்தை கையெழுத்திட நெருங்கியுள்ளனர். நாங்கள் அவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்," என்றார் டிரம்ப்.
இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம்
டேவிட் க்ரிட்டன்
ஹெலன் சுல்லிவான்

பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலும் லெபனானும் ஒரு போர்நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவிடம் இருந்து வரும் தாக்குதல்கள் முழுவதுமாக நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.
தெற்கு லெபனானில் புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தப் போர்நிறுத்தம் வந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடிகான வடக்கு இஸ்ரேலில் ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகளை ஏவியது.
"இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான உறவின் எதிர்காலம் இரு இறையாண்மை கொண்ட அரசாங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அரசு அல்லது அரசு சாராத நபர்கள் லெபனானின் எதிர்காலத்தை பணயம் வைக்கும் எந்த முயற்சிகளையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்," என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
லிட்டானி நதி தொடங்கி எல்லை வரை தெற்கு லெபனானில் இஸ்ரேல் கட்டுப்படுத்தும் பகுதிகளில் உள்ள ஹெஸ்பொல்லாவின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சார்ந்துள்ளது. இந்தப் பகுதி ஒப்பந்தத்தில் தெற்கு லிட்டானி பகுதி எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பட மூலாதாரம், Reuters
தெற்கு லெபனானின் பெரும்பாலான பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார். வடக்கு இஸ்ரேல் பாதுகாப்பாகும் வரை இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் அதில் அடங்கும்.
திங்கட்கிழமை ஒப்புக்கொள்ள தற்காலிய போர்நிறுத்தத்தை தொடர்ந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தற்காலிக போர்நிறுத்தத்தின்படி, இஸ்ரேலை ஹெஸ்பொல்லா தாக்காமல் இருப்பதற்கு மாற்றாக பெய்ரூட்டின் (லெபனான் தலைநகர்) மீது குண்டு வீசுவதை இஸ்ரேல் தவிர்க்கும் என லெபனான் தெரிவித்திருந்தது.
"ஒரு முழுமையான ஒப்பந்தத்தை அடையும் நோக்கில்" மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்த ஜூன் 22-ஆம் தேதி இரு நாடுகளும் மீண்டும் சந்திக்க உள்ளன.
இந்த அறிவிப்பு பற்றி ஹெஸ்பொல்லா தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பான புதன்கிழமை வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் ராஜதந்திரிகள் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் பாதுகாப்பை கண்காணிக்கும் இரு செயல்திட்டத்தை அவர்கள் வழங்குவார்கள் என்றும் அது ஹெஸ்பொல்லாவிடம் இருந்து தனித்து இருக்கும் என்றும் நம்புவதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வாரம் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் தற்காலிக போர்நிறுத்தம் சோதனைக்கு உள்ளாகியிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு