பட மூலாதாரம், Getty Images
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கலாசாரப் புரட்சி, சீனாவின் வரலாற்றிலேயே மிகவும் இருண்ட காலங்களில் ஒன்றாகும்.
1966 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங், அரசாங்கம், கல்வி மற்றும் கலை ஆகியவற்றிலிருந்து புரட்சிக்கு எதிரானவை எனக் கருதப்பட்ட கூறுகள், முதலாளித்துவத் தாக்கங்கள் மற்றும் முதலாளித்துவச் சிந்தனைகளை அகற்றுவதற்காக நாடு தழுவிய பிரசாரத்திற்கு உத்தரவிட்டார்.
மாவோ கடந்த காலத்தின் மீதும், "பழைய சிந்தனைகளுக்கும்', 'பழைய பழக்கவழக்கங்களுக்கும்' எதிராகப் போரை அறிவித்துக்கொண்டிருந்தார்.
மேலும், இந்தப் போர் முதன்மையாகப் காவல்துறையாலோ அல்லது பாதுகாப்பு அமைப்புகளாலோ நடத்தப்படவில்லை, மாறாகச் சாதாரண குடிமக்களால் குறிப்பாக இளைஞர்களால் தங்களது சொந்த சக குடிமக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.
"உங்களது ஆசிரியர், உங்களது முதலாளி, உங்களது கட்சித் தலைவர், உங்களது மேலதிகாரி மற்றும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுங்கள். கிளர்ச்சி நியாயமானது" என்பதே மாவோவின் செய்தியாக இருந்தது" என்று அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் வரலாற்றாசிரியருமான யாஃபெங் சியா விளக்குகிறார்.
அதிகாரப்பூர்வமாக 1976 வரை நீடித்த இந்தப் பிரசாரம், சீன சமூகத்தை முற்றிலுமாக மாற்றியமைத்ததுடன், இன்றும் அந்த நாட்டில் நீடித்திருக்கும் ஆழமான அரசியல் மற்றும் கலாச்சாரத் தாக்கங்களை விட்டுச் சென்றுள்ளது.
மாவோவின் எழுச்சியும் 'கிரேட் லீப் ஃபார்வர்ட்' திட்டத்தின் தோல்வியும்

பட மூலாதாரம், Getty Images
மார்க்ஸியத்தால் ஈர்க்கப்பட்டு, குவோமிங்டாங்கின் தேசியவாதப் படைகளைத் தோற்கடித்து, 1949 இல் சீன மக்கள் குடியரசை நிறுவியதன் மூலம் மாவோ ஆட்சிக்கு வந்தார்.
பல நூற்றாண்டுகால ஏகாதிபத்திய வம்சங்களுக்குப் பிறகு, சீனா 20 ஆம் நூற்றாண்டிற்குள் நுழைந்தபோது, அது பொருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய நிலையிலும், வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல்களாலும் சூழப்பட்டிருந்தது.
ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்திற்கு இடையிலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலும் இருந்த சமத்துவமின்மை மிகப்பெரிய அளவில் இருந்தது.
1958 இல், மாவோ 'கிரேட் லீப் ஃபார்வர்ட்' (Great Leap Forward) என்று அழைக்கப்படும் திட்டத்தைத் தொடங்கினார். இது சீனாவின் விவசாயப் பொருளாதாரத்தை விரைவாகத் தொழில்மயமாக்கி, சில ஆண்டுகளிலேயே மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும்.
விவசாயம் கூட்டுமயமாக்கப்பட்டதுடன், அடைய முடியாத இலக்குகளும் விதிக்கப்பட்டன. இவற்றுடன் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட்ட சீரற்ற பொருளாதாரக் கொள்கைகள் இறுதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின.
1960களின் முற்பகுதியில், சீனப் பொருளாதாரமும் விவசாயமும் முற்றிலும் சீர்குலைந்தன.
இந்தச் சூழ்நிலை, பல இயற்கை பேரிடர்களுடன் இணைந்ததால், வரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்று ஏற்பட்டது.
இதில் 20 முதல் 40 மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"பெரிய அளவிலான அரசியல் தவறுகள் நடந்துள்ளன என்பதை மாவோ அறிந்திருந்தார்" என்று யாஃபெங் சியா கூறுகிறார்.
வரலாற்றாசிரியர் யாஃபெங் சியா கூற்றுப்படி, 1961 இல் மாவோ சற்று பின்வாங்கினார். லியு ஷாவோகி மற்றும் டெங் சியாவோபிங் போன்ற பிற தலைவர்கள் பொருளாதார மீட்சிப் பணிகளுக்குப் பொறுப்பேற்றனர்.
1964-ஆம் ஆண்டளவில், சீனப் பொருளாதாரம் மீண்டு வருவதாகத் தோன்றியது.
ஆனால் தான் தவறுகள் செய்ததை மாவோ ஒருபோதும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
சியாவின் கூற்றுப்படி, 'கிரேட் லீப் ஃபார்வர்ட்' திட்டத்தின் தோல்விக்கும், பெரும் பஞ்சத்திற்கும் தனது வாரிசுகள் தன் மீதே குற்றம் சுமத்துவார்கள் என்றும் மாவோ அஞ்சினார் .
1965 இல், அவர் லியு ஷாவோகி மற்றும் டெங் சியாவோபிங் (இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு டிராக்டர் தொழிற்சாலையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்) போன்ற தலைவர்களை "முதலாளித்துவத்தைப் பின்பற்றுபவர்கள்" என்று சுட்டிக்காட்டி, தனது அரசியல் மறுபிரவேசத்திற்கான தயாரிப்பைத் தொடங்கினார்.
இது சீன கம்யூனிஸ்ட் சொல்லாடலில் மிகக் கடுமையான குற்றச்சாட்டாகும்.
கலாசாரப் புரட்சியின் தொடக்கம்
1966 மே 16 அன்று, மாவோ தனது அரசியல் எதிரிகளை அகற்றுவதற்கும், அதே நேரத்தில் சமூகத்திற்கு ஒரு புதிய கருத்தியல் புத்துணர்ச்சியை ஊட்டுவதற்கும் உத்தேசித்து ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டார்.
வரலாற்றாசிரியர் யாஃபெங் சியாவின் கூற்றுப்படி, மத்திய, மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் பலர் ஊழல்வாதிகளாக மாறிவிட்டதாகவும், அவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில்லை என்றும் மாவோ நம்பினார், அல்லது தான் ஏற்கனவே பதவியிலிருந்து நீக்கிய தலைவர்களை, அவர்கள் பின்பற்றுவதாக மாவோ கருதினார்.
"தான் ஒரு புதிய கம்யூனிஸ்ட் புரட்சியை உருவாக்குவதாகவும், அங்கு ஒரு தொடர்ச்சியான அரசியல் புரட்சி இருக்க வேண்டும் என்றும் மாவோ உண்மையிலேயே நினைத்தார்" என்று வரலாற்றாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அணிதிரட்டல் மிகப்பெரிய அளவில் இருந்தது.
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் முக்கியமாக மாணவர்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு எதிராகவும், அதிகாரப் பதவிகளில் இருந்த எவருக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்ய அழைக்கப்பட்டனர்.
மேலும், இவை அனைத்தும் மாவோவைச் சுற்றி ஒரு மாபெரும் தனிநபர் வழிபாட்டு முறையை உருவாக்குவதற்கான ஒரு தீவிரப் பிரசாரத்தின் கீழ் நடந்து கொண்டிருந்தன.
பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி, மாவோவின் "லிட்டில் ரெட் புக்"கை (Little Red Book) கையில் ஏந்தியிருக்கும் படங்கள் அந்த சகாப்தத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.
செம்படை மற்றும் "நான்கு பழையவற்றின்" அழிவு
கலாசாரப் புரட்சியின் மிக முக்கியமான இளைஞர் இயக்கம் 'செம்படை' ஆகும்.
மாவோவின் போதனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உருவான லட்சக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
"அந்த இளைஞர்களுக்கு, தலைவர் மாவோ தான் கடவுள். அவர் சொன்ன அனைத்தையும் அவர்கள் சரி எனக் கருதினார்கள்" என்று சியா விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பிரசாரம், ஆளும் அரசு "நான்கு பழையவை" என்று அழைத்தவற்றுக்கு எதிராக நடத்தப்பட்டது. அவை, பழைய கருத்துக்கள், பழைய கலாசாரம், பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள்.
புரட்சிக்கு முரணானதாகக் கருதப்பட்ட மரபுகளை அழிக்கும் நோக்கில் செம்படை வீரர்கள் சீனா முழுவதும் சுற்றினர்.
ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் அரசின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் தங்களது வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, கட்டிப்போடப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டனர், மேலும் சில சமயங்களில் அடித்துக் கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாகப் பல்கலைக்கழகங்கள் முடங்கின, மருத்துவமனைகள் பகுதி அளவிலேயே இயங்கின.
கோவில்கள், கடைகள், வீடுகள், புத்தகங்கள் மற்றும் சீனாவின் கலாசார பாரம்பரியத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
இந்த வன்முறை சாதாரண குடும்பங்களையும் பாதித்தது.
சியாவின் பெற்றோர் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிந்ததை அவர் நினைவு கூர்கிறார்.
அவரது கூற்றுப்படி, அவரது தாயின் மீது அதிருப்தி கொண்டவர்கள் அவர் மீது குற்றம் சாட்டியதால், அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் மாவோவின் புரட்சிகர அழைப்பிற்குப் பதிலளித்த அவரது தந்தை, 1968 க்குப் பிறகு ஒடுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
குழப்பமும், கிராமப்புறங்களை நோக்கிய மாபெரும் இடமாற்றமும்
1968 ஆம் ஆண்டிற்குள் இந்த இயக்கம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதுடன், சீனா வன்முறை மற்றும் குழப்பமான ஒரு சூழலில் மூழ்கியது.
சிலர் இதனை ஒரு உள்நாட்டுப் போருடன் ஒப்பிட்டனர்.
பதவி நீக்க நடவடிக்கைகளிலும் அதிகாரப் போராட்டங்களிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
இறுதியில் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து நீட்டிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மாவோ, செம்படையைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்தார்.
அந்த இளைஞர்களில் பலர் பயனுள்ள வேலைகள் எதையும் செய்யாமல் நாடு முழுவதும் சுற்றித் திரிந்த நகரத்து மாணவர்கள் என்று சியா விளக்குகிறார்.
அவர்களை கிராமப்புறங்களுக்கு விவசாயிகளாகப் பணியாற்ற அனுப்பி, "விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொள்ளச் செய்வதே" மாவோவின் தீர்வாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சுமார் 16 மில்லியன் இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், நகரங்கள் மீண்டும் ஓரளவு அமைதி பெற்றன.
அதிகாரப்பூர்வ சீன வரலாறு, கலாசாரப் புரட்சி 1966 முதல் 1976 வரை நீடித்ததாகக் கருதினாலும், அதன் முதல் மூன்று ஆண்டுகள் தான் மிகவும் தீவிரமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருந்தன.
1969 ஆம் ஆண்டிலிருந்து மாவோ, அரசாங்கம் மற்றும் ராணுவத்தில் இருந்த உறுப்பினர்களைத் தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கியதுடன், தனது மனைவி ஜியாங் கிங் போன்ற தீவிரப் போக்குடையவர்களாகக் கருதப்பட்ட நபர்களைச் சார்ந்து தனது அதிகாரத்தை வலுப்படுத்தினார்.
ஜியாங், சாங் சுன்கியாவ் , வாங் ஹாங்வென் மற்றும் யாவ் வென்யுவான் ஆகியோருடன் இணைந்து உருவாக்கிய குழுவே பின்னர் "நால்வர் கும்பல்" என்று அழைக்கப்பட்டது.
மாவோவின் மரணம் மற்றும் கலாசாரப் புரட்சியின் மரபு
செப்டம்பர் 1976 இல் மாவோ சேதுங் காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஒரு "மாபெரும் வீரன்" என்று சித்தரித்ததுடன், நாட்டில் பேரழிவாகக் கருதப்பட்ட கலாசாரப் புரட்சியின் அத்துமீறல்கள் மற்றும் கொடூரங்களிலிருந்து அவரைத் தனிமைப்படுத்த முயன்றது.
புதிய தலைவர்கள் இந்த அத்துமீறல்களுக்குக் அறிவுப்பூர்வமாகக் காரணமானவர்கள் என்று கருதியவர்களை, குறிப்பாக 'நால்வர் கும்பலை' சட்டத்தின் முன் நிறுத்தினர். அதன் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சியாவின் கூற்றுப்படி, கம்யூனிஸ்ட் கட்சியால் மாவோவை முழுமையாகக் கண்டிக்க முடியவில்லை, ஏனெனில் அது அந்த ஆட்சியின் சட்டப்பூர்வத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.
எனவே, மாவோவின் வாரிசுகள் மாவோ வயதானவராகவும் நோய்வாய்ப்பட்டவராகவும் இருந்ததாகவும், அவரது இறுதி ஆண்டுகளில் அவர் சிலரால் கையாளப்பட்டார் என்றும் வாதிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், காலப்போக்கில், மாவோவின் சில தவறுகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டன.
பின்னர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட டெங் சியாவோபிங், பின்னாளில் பிரபலமடைந்த ஒரு சொற்றொடரின் மூலம் அந்தப் பார்வையைச் சுருக்கமாகக் கூறினார். மாவோ "70% நேரங்களில் சரியாக இருந்தார் மற்றும் 30% நேரங்களில் தவறாக இருந்தார்"என்பது தான் அவரது கருத்து.
1978 இல் உச்ச தலைவரான டெங், சமகால சீனாவை வடிவமைக்க உதவிய ஒரு திசை மாற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அரசின் அடக்குமுறை எந்திரம் அப்படியே நீடித்தது.
ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் உலகைப் பிளவுபடுத்திய இரண்டு கருத்துக்களான அரசியல் பொதுவுடைமை மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத் திறப்பு ஆகியவற்றை அந்த நாடு ஒன்றிணைக்கத் தொடங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் ஒரு நாட்டில், முதலாளித்துவம் ஒரு முரண்பாடாகக் கருதப்படுவது நின்றுபோனது.
பல ஆண்டுகாலங்களுக்குப் பிறகும், மாவோவின் உருவம் சீனாவில் தொடர்ந்து பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறது.
சியாவின் கூற்றுப்படி, பல குடிமக்கள் இன்னும் அந்த காலகட்டத்தை உன்னதமாகக் கருதுகிறார்கள் மற்றும் மாவோயிசத்தின் போது "அதிகாரிகள் பொதுவாக ஊழல் அற்றவர்களாக இருந்தார்கள்" என்று நம்புகிறார்கள்.
"50% க்கும் அதிகமான சீன மக்கள் இன்னும் மாவோ ஒரு சிறந்த தலைவர் என்றே நம்புகிறார்கள்" என்கிறார் வரலாற்றாசிரியரான யாஃபெங் சியா.
இருப்பினும், "கல்வியறிவு பெற்ற பெரும்பான்மையான மக்கள் கலாசாரப் புரட்சியின் போது என்ன நடந்தது என்பதை நன்கு அறிவார்கள்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு