← முகப்பு செய்திகள்

இரான் – அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 72 பார்வைகள்
இரான் – அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

இரான் உடனான தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலியப் போர் முடிவுக்கு வந்திருக்கலாம். குறைந்தபட்சம், அமெரிக்காவில் இருந்து வரும் செய்தி இதுதான்.

பல வாரங்களாக நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, மே 5 செவ்வாய்க்கிழமை, அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோ 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார். இருப்பினும், இந்த அறிவிப்பு ஒரு விரிவான உரையின் ஒரு பகுதியாகவே வெளிவந்தது.

எனவே, இதில் யார் வென்றார்கள்? என்ற தெளிவான கேள்வி எழுகிறது.

ஆனால், இந்தக் கதை யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்தே இதற்கான பதில் அமையும்.

இரானில், அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தப் போரை, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவக் கூட்டணியை எதிர்த்து நின்று தங்களது நாடு அவர்களைத் தோற்கடித்ததற்கான ஆதாரமாகச் சித்தரிக்கின்றன.

அமெரிக்காவில், அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது நிர்வாகமும் தாங்களே வெற்றி பெற்றதாக கூறுகின்றன. மேலும் அவர்கள் தங்கள் இலக்குகளை எட்டிவிட்டதாகத் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

ஆனால் பொதுவெளியில் வெளியாகும் அறிக்கைகளுக்குப் பின்னால், உண்மையான வெற்றி எங்கே இருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதில், மோதலை விட இப்போது பேச்சுவார்த்தைகளே முக்கியமானதாக மாறி வருகின்றன.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள் - எப்படி?

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

ஆக்ஸியோஸ் , ராய்ட்டர்ஸ் மற்றும் பிற அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இரானுடன் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையில் வெள்ளை மாளிகை இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த ஆவணம் இரானின் அணுசக்தி திட்டம், ஹோர்முஸ் நீரிணை மற்றும் பிராந்திய பதற்றங்கள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கும்.

இந்த முன்மொழிவை இரான் பரிசீலித்து வருவதாகவும், பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் தனது பதிலை பகிர்ந்து கொள்ளும் என்றும் இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் சில மூத்த இரானிய அரசியல்வாதிகள் இதனை ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளனர்.

"தாங்கள் தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு போரில் அமெரிக்கர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை" என்று இரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவை "அமெரிக்காவின் விருப்பப் பட்டியல்" என்று அவர் நிராகரித்துள்ளார்.

இதுவரை வெளியிடப்பட்ட விவரங்களின்படி, இரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளின் பெரும் பகுதியை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை ஒப்படைக்க வேண்டும் மற்றும் விரிவான சர்வதேச ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு இரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலாக, அமெரிக்கா படிப்படியாகத் தடைகளை நீக்கி, முடக்கப்பட்ட இரானிய சொத்துகளை விடுவித்து, ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு இரான் குறைந்த அளவில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடும்.

ஆனால் இரானுக்குள் இருக்கும் பலருக்கு, இந்த நிபந்தனைகள் ஒரு சமரசமாகத் தெரியாமல் சரணடைவதைப் போலவே தெரிகிறது.

அவர்களின் வாதம் எளிதானது.

'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தீர்க்கமான முடிவுகளைத் தரத் தவறியதாலும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா தொடங்கி திடீரென முடிவுக்கு வந்த 'ஆபரேஷன் ஃப்ரீடத்தால்' வளைகுடா அரபு நாடுகளை இந்த மோதலுக்குள் இழுக்கப்படும் அபாயம் இருந்ததாலும், அமெரிக்கா போரை நிறுத்தியதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இரான் இலக்காகக் கொண்ட போதிலும், இந்த நாடுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாகப் போரில் நேரடியாக ஈடுபடவில்லை.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள் - எப்படி?

பட மூலாதாரம், AFP via Getty Images

மிக முக்கியமாக, போரின் போது இரானின் அதி உயர் தலைவர், பல உயர்மட்ட ராணுவத் தளபதிகள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட போதிலும், இஸ்லாமியக் குடியரசு தப்பிப் பிழைத்தது.

இரானின் அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு தொடர்ந்து செயல்பட்டதுடன், காலியான இடங்களுக்குப் புதிய அதிகாரிகள் விரைவாக நியமிக்கப்பட்டனர்.

மேற்கத்திய அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் சிலர், போருக்கு முன்னதாக ஒரு கருத்தைக் கொண்டிருந்தனர்.

ஒரு விரைவான ராணுவ நடவடிக்கை மற்றும் இரானிய மூத்த தலைவர்கள் மற்றும் தளபதிகளின் கொலை ஆகியவை அங்கு பெரிய அளவிலான அரசு எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் அது நடக்கவில்லை.

போருக்கு முந்தைய மாதங்களில் இரானை உலுக்கிய போராட்டங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.

பாதுகாப்புப் படைகள் கட்டுப்பாட்டை இறுக்கின, கைது நடவடிக்கைகள் அதிகரித்தன மற்றும் சில மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில், பல நகரங்களில் அரசுக்கு ஆதரவான பேரணிகளை அரசு ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பின.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள் - எப்படி?

பட மூலாதாரம், Iranian Parliament Speaker Office/Handout/Anadolu via Getty Images

இரானிய நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாப், "தற்போதைய நிலை நீடிப்பது அமெரிக்காவால் தாங்க முடியாதது என்பதை நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் நாங்கள் இன்னும் எதையும் தொடங்கவே இல்லை"என சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

இரானின் தலைமைக்கு, ஆட்சியில் நீடிப்பதே ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது, குறிப்பாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் சிவில் உள்கட்டமைப்புகளுக்கும், இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட சேதங்களை இரான் சுட்டிக்காட்டுகிறது.

அதனால் தான், மற்றொரு சுற்று போரைத் தவிர்க்க இரான் தீவிரமாக விரும்புவதாகத் தெரியவில்லை. பொருளாதார சுமை , ராணுவ அழுத்தம் மற்றும் நீண்ட கால மோதல்களைத் தாங்கும் திறன் தங்களது எதிரிகளை விடத் தங்களுக்கு அதிகம் இருப்பதாக இரானிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள் - எப்படி?

பட மூலாதாரம், Asghar Besharati/Getty Images

ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது, உலகப் பொருளாதாரத்தின் மீது இரானுக்கு இன்னும் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதைக் காட்டியுள்ளதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த நீர்வழிப்பாதை வெறும் எரிசக்தித் தடையைக் கடந்து பல விஷயங்களை நிரூபித்தது. இதில் ஏற்பட்ட இடையூறுகள் கப்பல் போக்குவரத்து, உணவு விநியோகம், காப்பீட்டுச் செலவுகள் மற்றும் விரிவான சர்வதேச வர்த்தகத்தைப் பாதித்தன. இரான் இப்போது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை ஒரு சலுகையாகப் பார்க்காமல், ஒரு பேச்சுவார்த்தை கருவியாகவே பார்க்கிறது.

இது அந்தப் பிராந்தியத்தில் பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்தப் போரின் போது அமெரிக்கத் தளங்களைக் கொண்டிருந்த அல்லது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்த அண்டை நாடுகளுக்கு எதிராக, இரான் இந்த மோதலிலிருந்து மிகவும் வலிமையுடன் வெளிவரக்கூடும்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள் - எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

இதற்காக இரான் தான் விரும்பிய அனைத்தையும் சாதித்துவிட்டது என்று அர்த்தமல்ல.

இரான் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது, மூத்த ராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை இழந்துள்ளது. மீண்டும் போராட்டங்களைத் தூண்டக்கூடிய கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உளவுத் திறன்களுடன் இரானின் உட்பகுதிகளில் தாக்குதல் நடத்த முடியும் என்பதைக் காட்டின.

ஆனால் போர்கள் எப்போதும் போர்க்களத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.

இந்த மோதலானது இறுதியில் போரினால் அல்லாமல், அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைக் கொண்டே மதிப்பிடப்படலாம்.

இரானின் அணுசக்தி திட்டங்கள் மீதான கட்டுப்பாடு விஷயத்தில் அமெரிக்காவால் சாதிக்க முடிந்தால் அது வெற்றி பெற்று விட்டதாக கூறும். அதே நேரத்தில், இரான் பிராந்திய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டு, தனது அணுசக்தித் திட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதைத் தவிர்த்தால், இரான் வெற்றிக்கு உரிமை கோரும்.

இப்போதைக்கு, இரு தரப்பும் தாங்கள் வென்றுவிட்டதாகத் தங்கள் மக்களிடம் கூறி வருகின்றன. இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேஜைக்கு வந்து இறுதி வரை அதில் நீடித்தால் மட்டுமே உண்மையான பதில் தெளிவாகத் தெரியவரும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net