பட மூலாதாரம், Getty Images
வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஷங்ரி-லா கலந்துரையாடல் (Shangri-La Dialogue) எனும் பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது, கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக வியட்நாமுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்; இருப்பினும், அதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பிரமோஸ் ஏவுகணை (BrahMos) விற்பனை தொடர்பாக இந்தோனீசியாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
விற்பனை குறித்து 14 ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தை
இந்த ஒப்பந்தம் குறித்த இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான பேச்சுவார்த்தைகள் 2012-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா சற்று தயக்கம் காட்டியது.
சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே கடல் எல்லை தொடர்பான சர்ச்சை உள்ளது. வியட்நாமுக்கு ஏவுகணைகளை விற்பது சீனாவை கோபமடையச் செய்யலாம் என்று இந்தியா அஞ்சியது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் அபாயமும் இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதை இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அந்த ஒப்பந்தம் என்ன என்பதோ அல்லது எத்தனை ஏவுகணைகள் விற்பனை செய்யப்படும் என்பதோ தெளிவாகத் தெரியவில்லை; இது மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில், இந்தியா பிலிப்பைன்சுடன் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகையில், "இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிலிப்பைன்சுக்கு மூன்று தொகுப்பு பிரமோஸ் ஏவுகணை அமைப்புகள் வழங்கப்படவிருந்தன. அவற்றில் இரண்டு ஏற்கெனவே அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. பிலிப்பைன்ஸ் இந்த ஏவுகணைகளைத் தனது கடலோரப் பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது," என்று தெரிவித்தார்.
பிரமோஸின் செயல்திறன் எவ்வாறு அதிகரித்தது?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா மற்றும் இந்தியாவால் கூட்டாக உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைக்கு, இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி (Moskva) ஆகியவற்றின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணை ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை தொடர்பான இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகையில், "இந்த ஏவுகணையின் எடை சுமார் 3,000 கிலோகிராம் ஆகும். இதன் நீளம் சுமார் 10 மீட்டர் ஆகும்." என்றார்.
"இதன் ஆரம்பக்கட்ட தாக்குதல் தூரம் 300 கிலோமீட்டராக இருந்தது. ஆனால், இந்தியா தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை சுமார் 500 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது."
அவர் கூறுகையில், "இது மிகவும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான ஏவுகணை. தாக்குதலின் போது இதன் வேகம் மணிக்கு சுமார் 4,000 கிலோமீட்டர் ஆகும்." என்றார்.
"இது ஒரு குரூயிஸ் ரக ஏவுகணை. அதாவது, இது தாழ்வாக பறக்கக்கூடியது என்பதால் ரேடார் மூலம் இதைக் கண்டறிவது கடினம். இதன் இலக்கைத் தாக்கும் திறன் மிக அதிகம்."
பிரமோஸ் ஒரு அணு ஆயுதம் அல்லாத ஏவுகணை என்றும், அதனால்தான் இந்தியா அதனை மற்ற நாடுகளுக்கு விற்க முடிகிறது என்றும் ராகுல் பேடி மேலும் குறிப்பிடுகிறார்.
அவரது கூற்றுப்படி, அது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருந்திருந்தால், சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் அதன் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும்.
அவர் கூறுகையில், "இந்த ஏவுகணையில் இந்தியா 85 சதவிகித உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால், அதன் என்ஜின் மற்றும் சில உலோகப் பாகங்கள் போன்ற மீதமுள்ள 15 சதவிகித தொழில்நுட்பம் ரஷ்யாவிலிருந்து பெறப்படுகிறது. இப்பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை; சொல்லப்போனால், இவற்றைத் தயாரிப்பதற்கான திறன் கூட தற்போது இந்தியாவிடம் இல்லை" என்றார்.
பிரமோஸ் ஏவுகணை மீதான ஆர்வம் அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நவீன ஏவுகணைகளை வாங்குவதற்குப் பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகள் வல்லரசுகளுக்குப் பதிலாக இந்தியாவை நாடுகின்றன என்று ராகுல் பேடி கூறுகிறார்.
இதற்கான ஒரு முக்கிய காரணம், பிரமோஸ் என்பது செயல்திறன் நிரூபிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான ஏவுகணையாகும். மற்றொரு முக்கியமான காரணம், உலகின் பிற ஏவுகணைகளை விட இது மிகவும் குறைவான விலை கொண்டதாகும்.
அவரது கூற்றுப்படி, இந்தியா இந்த ஏவுகணைகளுக்கான நிறுவல், பயிற்சி மற்றும் உதிரிபாகங்களை மிகக் குறைந்த செலவிலோ அல்லது சில சமயங்களில் இலவசமாகவோ வழங்குகிறது. இதனால்தான் மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகளும் இவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த ஏவுகணையைத் தரைவழி ஏவுதளங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களிலும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்புத் துறை அறிக்கைகளின்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலின்போதும் இது பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவோ அல்லது மறுக்கப்படவோ இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மாறிவரும் பாதுகாப்புத் துறை

பட மூலாதாரம், Getty Images
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியப் பாதுகாப்புத் துறை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இருப்பினும், 2001-க்குப் பிறகு, பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன.
சமீப காலங்களில், போர்க்கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
பிரமோஸ் ஏவுகணையின் பல பாகங்கள் தனியார் நிறுவனங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைய இலக்கு கொண்டுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், இந்தியா தனது பாதுகாப்பு உபகரணங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்து வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் அரசுக்குச் சொந்தமான பாதுகாப்புத் துறையைச் சார்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஈக்வடாருக்கு 7 ஹெலிகாப்டர்களை விற்பனை செய்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட சில மாதங்களிலேயே அவற்றில் நான்கு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின. இதனைத் தொடர்ந்து, ஈக்வடார் இந்தியாவுடனான அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்தியாவின் நவீன போர் விமானமான தேஜஸ்-ஐ தற்போது தயாரித்து வரும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு, இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தியா இந்த விமானத்தை ஏற்றுமதி செய்யவும் முயற்சித்து வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு துபை விமான சாகச நிகழ்ச்சியின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது, இம்முயற்சிகளுக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.
ராகுல் பேடி கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது." என்றார்.
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
இந்தியா தனது முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக பிரமோஸ் ஏவுகணையைக் கொண்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைத் தவிர, வேறு பல நாடுகளும் இந்த ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவரது கூற்றுப்படி, ரஷ்யாவின் உதவியின்றி இந்தியாவால் பிரமோஸ் ஏவுகணையைத் தயாரிக்க முடியாது என்றாலும், மற்றொரு நாட்டுடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை மூலம் உலகளாவிய பாதுகாப்புச் சந்தையில் பெரிய நாடுகளுடன் போட்டியிடுவது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக ராகுல் பேடி கூறுகிறார்.
அவர் விளக்குகையில், "2023-24-ல் இந்தியாவின் மொத்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி சுமார் ரூ. 21,000 கோடியாக இருந்தது. 2024-25-ல் அதுவே ரூ. 28,000 கோடியாக அதிகரித்தது. 2025-26-ல் அது சுமார் ரூ. 38,000 கோடியை எட்டியது." என்றார்.
அவரது கூற்றுப்படி, "2029-30-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியை ரூ. 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பிரமோஸ் ஏவுகணைகளின் விற்பனையும் அடங்கும்."
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதிகளில் வெடிமருந்துப் பொருட்கள், டிரோன்கள், பிரமோஸ் மற்றும் ஆகாஷ் (தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும்) ஏவுகணைகள், அத்துடன் பினாகா ஏவுகணை அமைப்பு (Pinaka) ஆகியவை அடங்கும்.
இந்தியா தற்போது இஸ்ரேலுடன் இணைந்து கவசமிடப்பட்ட டிரோன்களையும் (armored drones) உருவாக்கி வருகிறது; இவை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா அர்மீனியாவுக்கு ஆகாஷ் மற்றும் பினாகா ஏவுகணைகளை விற்பனை செய்தது. பினாகா என்பது ஒரு பல-குழல் ஏவுகணை அமைப்பாகும்; இந்த ஏவுகணை மீது ஒரு காலகட்டத்தில் பிரான்சும் ஆர்வம் காட்டியிருந்தது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு வேகமாக அதிகரித்துள்ளதாக ராகுல் பேடி கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, தற்போது இந்தியா தனது பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு