அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தீப உயன பகுதியில் செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, போலியாக தயாரிக்கப்பட்டிருந்த பல ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் 49 வயதுடையவர் எனவும், குருநாகல் மாவட்டத்தின் பன்னலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், ஹிங்குரன்கொட வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுவதாக தன்னை அறிமுகப்படுத்தி, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரர் மூலமாக வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, கண்டி, மினுவங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஜாகொடகே தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.