← முகப்பு செய்திகள்

அநுர எரிபொருள் விலை அதிகரிப்பை ஒரு நாள் தாமதப்படுத்தியது மே தின கூட்டத்துக்கே – மைத்திரி குணரத்ன குற்றச்சாட்டு

🕐 04 May 2026 📂 செய்திகள் 20 பார்வைகள்
அநுர எரிபொருள் விலை அதிகரிப்பை ஒரு நாள் தாமதப்படுத்தியது மே தின கூட்டத்துக்கே – மைத்திரி குணரத்ன குற்றச்சாட்டு

நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மே தின கூட்டத்தை நடத்திவிட்டு எரிபொருள் விலை அதிகரிப்பை ஒரு நாள் தாமதப்படுத்தியது. தேர்தல்களை நடத்த அஞ்சும் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று இந்த நாட்டில் ஜனநாயகம் பாரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்களை முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு ஆபத்தான கலாசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

அடுத்த மாதம் வரவுள்ள வழக்குத் தீர்ப்பு இதுதான் என்று ஒரு ஜனாதிபதியால் எவ்வாறு கூற முடியும்? இது நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் நேரடி அச்சுறுத்தலாகும். ஒரு சாதாரண பிரஜை இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தால், அவர் இந்நேரம் நீதிமன்ற அவமதிப்புக்காக சிறையிலடைக்கப்பட்டிருப்பார்.

நீதிபதிகள் இன்று ஒருவித அச்ச உணர்வுடனேயே பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் இவ்வாறான கருத்துக்கள் சுதந்திரமான நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் சவாலாகும். எனவே, உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு உடனடியாக தலையிட்டு, இவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மே தினக் கூட்டத்துக்கு மக்களை அழைத்து வருவதற்காகவே எரிபொருள் விலை அதிகரிப்பை ஒரு நாள் தாமதப்படுத்தியது.

மே தினத்தில் பெரும் புனைந்துரைகளைப் பேசிவிட்டு, அன்றைய தினமே நள்ளிரவில் எரிபொருள் விலையை உயர்த்தி மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர். இவ்வளவு பெரிய மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு இவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் டொலர் பணம் மற்றும் நிலக்கரி மோசடி மூலம் ஈட்டப்பட்ட பணத்தையே இவர்கள் மே தினத்துக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

அரசாங்கம் தற்போது தேர்தல்களை நடத்த அஞ்சுகிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று எதனையுமே செய்யாமல் காலம் கடத்துகின்றனர். ரில்வின் சில்வா போன்றவர்கள் இனி இந்த நாட்டில் வேறொரு அரசாங்கம் வராது எனக் கூறுகின்றனர்.

இதன் அர்த்தம் என்ன? தேர்தல்கள் இனி நடத்தப்படமாட்டாது என்பதா? அநுர குமார திசாநாயக்க போன்ற தலைவர்கள் மேடைகளில் ஏறித் தங்களை விவேகமானவர்கள் எனச் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நாட்டின் ஜனநாயகம் பாதுகாப்பதே முக்கியமானது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு குளத்தையாவது கட்டியுள்ளதா? ஒரு அணையாவது அமைத்துள்ளதா? எந்தவொரு பாரிய முதலீட்டாளரும் நாட்டுக்கு வருவது கிடையாது.

மாறாக, அரச ஊழியர்களை அச்சுறுத்தி ஆட்சியைத் தொடரவே இவர்கள் முற்படுகின்றனர். 88-89 காலப்பகுதியைப் போல இரும்புக்கரம் கொண்டு நாட்டை ஆள நினைக்கிறார்கள். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது போல, இந்த அரசாங்கத்துக்கும் அதிக காலம் கிடையாது.

திறைசேரி மோசடி தொடர்பான சி.ஐ.டி விசாரணைகளின் ‘பி’ அறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமையானது, மக்களின் வரிப்பணம் எவ்வாறு திருடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் உரிமையைப் பறிக்கும் செயலாகும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் செய்த அனைத்து ஊழல்களுக்கும் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net