ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான போட்டி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அடுத்தடுத்து பல இடி இறங்கியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான படுதோல்வியை சந்தித்த அந்த அணிக்கு, தற்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த ஒரு தவறால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஆனால் பின்னர் 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14 ஓவர்களிலேயே வெறும் 86 ரன்களுக்கு சுருண்டு 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜேசன் ஹோல்டர் மற்றும் ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் பேட்டிங்கை துவம்சம் செய்தனர்.

இந்த தோல்வியின் ரணம் ஆறுவதற்குள், குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத குற்றத்திற்காக ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்சுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் அந்த அணி செய்யும் முதல் ஓவர் ரேட் தவறு இது என்பதால் வெறும் அபராதத்துடன் தப்பியுள்ளது. ஹைதராபாத் அணியின் வீரர்கள் இப்படி நடவடிக்கைக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. முன்னதாக அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதமும் ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து வீரர்களும், அணி உரிமையாளர்களும் நடத்தை விதிமுறைகளை மீறுவது பிசிசிஐ அதிகாரிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அனைத்து அணிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விதிமுறைகளை மீறும் இத்தகைய செயல்கள் ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கு பெரும் களங்கம் விளைவிக்கும் என்றும், இது தொடர்ந்தால் சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் கோபத்தில் பிரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் கிங்ஸ் குறித்து பரவும் வதந்திகள்.. வெளியான எச்சரிக்கை
மேலும், வீரர்களின் தங்கும் அறைகளுக்குள் முன் அனுமதியின்றி வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும், தேவையற்ற நபர்களால் வீரர்கள் மோசடி வலையில் சிக்கிவிடக் கூடாது என அணிகளின் நிர்வாகங்களுக்கு மிகத் தீவிரமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
IPL 2026: மும்பை இந்தியன்ஸ்-இல் அடுத்த சர்ச்சை.. பயிற்சியாளருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஹர்திக்