முல்லன்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அபார சதம் அடித்து அசத்தினர்.
சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் இன்று (ஜூன் 6) தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரராக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன், 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் கே.எல். ராகுல் 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 143 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி இறுதி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
50-வது டெஸ்டில் விளையாடும் ரிஷப் பண்ட், 70 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. கில் மற்றும் பண்ட் ஜோடி -வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
IND vs AFG: ஆஸ்கர் நடிப்பு காட்டிய கே.எல்.ராகுல்.. ஏமாந்த ஆப்கானிஸ்தான்.. என்ன நடந்தது?
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சாஃபி 13 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஜியாவுர் ரஹ்மான் ஷரிஃபி 15 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரஷீத் கான் இல்லாத ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.