← முகப்பு செய்திகள்

India vs Afghanistan Test: Rishabh Pant Hits 50-Match Milestone Joining Dhoni and

🕐 06 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
India vs Afghanistan Test: Rishabh Pant Hits 50-Match Milestone Joining Dhoni and

முல்லன்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் இந்த சாதனையைப் படைத்த 3-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முல்லன்பூரில் இன்று (ஜூன் 6) தொடங்கியது. இப்போட்டியில் விளையாடும் லெவனில் இடம்பிடித்ததன் மூலம், 28 வயதான ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் வரலாற்றில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 3-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

India vs Afghanistan Test Rishabh Pant Hits 50-Match Milestone Joining Dhoni and Kirmani

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களாகப் பல போட்டிகளில் விளையாடி சாதித்த எம்.எஸ். தோனி மற்றும் சையத் கிர்மானி ஆகியோர் மட்டுமே இந்த அரிய மைல்கல்லை எட்டியுள்ளனர். தோனி 2005 முதல் 2014 வரை 90 போட்டிகளிலும், சையத் கிர்மானி 1976 முதல் 1986 வரை 88 போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாகப் பணியாற்றி சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கிரண் மோரே 49 போட்டிகளிலும், ஃபரூக் இன்ஜினியர் 46 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான பண்ட், தற்போது 50 போட்டிகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் வரலாற்றில் 50 போட்டிகளில் விளையாடிய 34-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பண்ட் பெற்றுள்ளார். உலக அளவில் தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (147 போட்டிகள்) மற்றும் ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலி (119 போட்டிகள்) ஆகிய இருவர் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கம் அளித்தார்.

IND vs AFG: ஆப்கானிஸ்தானை கதறவிட்ட கே.எல். ராகுல்.. ஆனால் செஞ்சுரி அடித்த அடுத்த பந்தில் சோகம்

கம்பீர் கூறுகையில், "இந்தியாவிற்காக விளையாடுவதே மிகப்பெரிய பொறுப்பு, மற்ற பதவிகள் எல்லாம் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் கூடுதல் விஷயங்கள் மட்டுமே. ரிஷப் பண்ட் தனது ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விளையாடுவது மிக முக்கியம். அவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இந்திய அணிக்காக ரன் குவிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net