தர்மசாலா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், உலக அளவில் மிகப்பாரிய வரலாற்று சாதனை ஒன்றை படைக்க இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காத்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த உலகின் 2வது வீரர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (ஜூன் 13) தர்மசாலாவில் தொடங்குகிறது. இத்தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் தொடக்க வீரரான சுப்மன் கில், புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.

தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 61 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 2,953 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 43 ரன்கள் எடுத்தால் அவர் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கில் இந்த ரன்களை எடுக்கும் பட்சத்தில், உலக அளவில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற உலக சாதனையை படைப்பார். மேலும், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
தற்போது உலக அளவில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
சுப்மன் கில் தனது 62வது இன்னிங்ஸில் 3,000 ரன்களை எட்டும்பட்சத்தில், ஷாய் ஹோப், பகார் ஜமான் போன்ற வீரர்களின் சாதனையை முறியடித்து 2வது இடத்திற்கு முன்னேறுவார்.
இந்திய அளவில் ஷிகர் தவான் தான் 72 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் 62 இன்னிங்ஸிலேயே இந்த சாதனையை முறியடிக்க உள்ளார். அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது 70 இன்னிங்ஸ்களில் 2,977 ரன்கள் எடுத்துள்ளதால், அவரும் ஷிகர் தவானின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
வீணான வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்.. ஆப்கன் ‘ஏ’ அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடியும் ஏமாற்றம்
இதே தர்மசாலா ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவும் புதிய சாதனை படைக்க உள்ளார். அவர் இன்னும் 3 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை (11,579 ரன்கள்) முறியடித்து புதிய உயரத்தை எட்டுவார். ரோஹித் சர்மா தற்போது 282 ஒருநாள் போட்டிகளில் 11,577 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.