திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக, தேர்தலுக்கு முன்பாகவும் சரி, தேர்தலுக்கு பிறகும் சரி மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின்போது திமுகவினர் எங்கள் கட்சிக்காக உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார் திருமா. தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைவருக்கு ஆறுதல் சொன்னார். தவெகவுக்கு ஆதரவு என்றார்.. திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்.. ஆட்சியில் பங்கு வகிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் செல்லப்பிள்ளை என்ற விஜய்யின் அமைச்சரவையில் விசிகவை இடம்பெறவும் வைத்தார். இப்படி தன்னுடைய நிலைப்பாட்டிலேயே தீர்க்கமாக இல்லாமல் திருமா இருப்பதாக விசிகவினர் பலர் குமுறுகின்றனர். வேறு வழியில் இல்லை, திருமாவிற்காகவே அவரது முடிவுகளை ஆதரிக்கிறோமே தவிர, அவர் எடுக்கும் முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்கின்றனர் அவர்கள்.
இந்த நிலையில் தான், விசிக மாநில ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். மேலும் அவர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அவரது வழியிலேயே மாஜி எம்.எல்.ஏக்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி ஆகியோரும் அறிவாலயம் மீது பார்வையை திருப்பியிருக்கிறார்களாம். இதையறிந்து ஷாக்கான திருமாவளவன், ஸ்டாலினிடம் பேச அறிவாலய உடன்பிறப்புகளை ரீச் செய்துள்ளாராம். ஆனால் எவ்வளவு முயன்றும், திமுக தலைமையிடம் அப்பாயின்மெண்ட் வாங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. தன்மீதான அறிவாலயத்தின் கோபத்தை எப்படி தணிப்பது என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம் திருமாவளவன்.