சியாரா லியோன்: அவசர நிலையை ஏற்படுத்திய குழந்தை பாலியல் வல்லுறவு வழக்குகளில் நீதி கிடைத்ததா?

பாலியல் வன்கொடுமைகளால் அவசர நிலை
  • எழுதியவர், டைசன் காண்டே மற்றும் தாமசின் ஃபோர்டு மூலம்
  • பதவி, பிபிசி ஆப்பிரிக்கா கண், மகேனி மற்றும் லண்டன்

சியாரா லியோனின் அதிபர் ‘ஜூலியஸ் மாடா பயோ’ 2019ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவிக்கும் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது, தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி கிடைத்ததா என்பதை பிபிசி ஆப்ரிக்கா ஐ ஆராய்ந்தது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலரை மனதளவில் தொந்தரவு செய்யக்கூடும்.

‘சிகிச்சை அளித்த மருத்துவர்கூட அழுதார்’

பாலியல் வன்கொடுமைகளால் அவசர நிலை

பட மூலாதாரம், Getty Images

சியாரா லியோனின் தலைநகரான ஃப்ரீடவுனுக்கு கிழக்கே மூன்று மணிநேர பயண தூரத்தில் உள்ள மகேனி நகரில், ஓர் இளம் தாய் தனது மூன்று வயது மகளுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், நாப்கினில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்டத் தனது குழந்தை நடந்து வருவதைக் கண்ட நாளை அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விவரிக்கிறார்.

“நான் அந்தப் பெண்ணிடம் வேலை செய்தேன், அன்று சனிக்கிழமை காலை சந்தைக்குச் செல்லும் பணியைக் கொடுத்தனர். எனவே என் முதலாளியிடம் என் குழந்தையை விட்டுச் சென்றேன். முதலாளியின் 22 வயது மகனும் இருந்தார். அவர் என் குழந்தையை இனிப்பு மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுக்க அழைத்துச் சென்றதாகச் சொல்லப்பட்டது, அது பொய்,” என்கிறார் அனிதா.

கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது, தன் மகளைக் காணவில்லை என்பதை உணர்ந்த அனிதா, சிறிது நேரம் குழந்தையைத் தேடிய பிறகு கண்டுபிடித்தார். ஆனால் 22 வயதான தாய், தன் குழந்தைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தைக்கு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது உறுதியானது. ரத்தப்போக்கை நிறுத்த குழந்தைக்கு இரண்டு முறை தையல் போடப்பட்டது.

“செவிலியர்கள் என் குழந்தையைப் பரிசோதிக்கத் தொடங்கினர், ‘கடவுளே, இந்தக் குழந்தையை அவன் என்ன செய்தான்?’ என்று சொல்லி அழுதனர். என் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கூட அழுதார்” என்று அனிதா விவரிக்கிறார்.

அனிதா காவல்துறையிடம் சென்றார், ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வருடமாக காவல்துறையால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“குழந்தைகளை வல்லுறவு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அதிபர் ஒரு சட்டத்தை உருவாக்கினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று கோபத்துடன் கூறுகிறார் அனிதா.

பாலியல் குற்றங்கள் தொடர்பாக அவசரநிலைப் பிரகடனம்

பாலியல் வன்கொடுமைகளால் அவசர நிலை

அதிபர் மாடா பயோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றங்கள் தொடர்பாக அவசரநிலைப் பிரகடனம் செய்த பின்னர் உருவாக்கப்பட்ட கடுமையான பாலியல் குற்ற சட்டத்தை அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் ‘எங்கள் குழந்தைகள் மீதிருந்து கையை எடு (Hands off our girls)’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளை டி-ஷர்ட்கள் அணிந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஃப்ரீடவுன் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.

மற்றொரு குழந்தை வல்லுறவு செய்யப்பட்ட செய்தி தேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த 5 வயது சிறுமிக்கு இடுப்புப் பகுதியில் இருந்து கீழே முழுவதுமாகச் செயலிழந்தது. இந்தச் சம்பவத்தால் சியாரா லியோனின் மக்கள் வெகுண்டெழுந்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஓராண்டுக்குள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2019 பிப்ரவரியில் இருந்து நான்கு மாத காலத்துக்கு அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. மக்களின் போராட்டங்களை மனதில் வைத்து பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பாலியல் குற்றச் சட்டம் பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தது.

பாலியல் வல்லுறவு செய்தவருக்கு தண்டனைக் காலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஃப்ரீ டவுனில் பாலியல் குற்றங்களுக்கான மாதிரி நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

இதன்மூலம் நாட்டில் சில முன்னேற்றங்கள் இருப்பதாகத் தெரிந்தது. காவல்துறை புள்ளிவிவரங்கள்படி, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை வழக்குகள் கிட்டத்தட்ட 17% குறைந்துள்ளன, 2018இல் 12,000 என்ற அளவில் பதிவான இந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2023இல் 10,000 ஆகக் குறைந்துள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள், புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது ஒருபுறம் இருக்க, அனிதாவின் மகள் போன்றவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் முக்கியம்.

`தி ரெயின்போ முன்னெடுப்பு (The Rainbow Initiative)’ என்பது பாலியல் வன்கொடுமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் இணைந்து செயல்படும் ஒரு தேசிய தொண்டு நிறுவனம். 2022ஆம் ஆண்டில் அது கையாண்ட 2,705 வழக்குகளில் வெறும் 5% மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகிறது.

சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்பதே தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் இந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

‘வாகனங்கள் இல்லாததால் கைது செய்ய முடியவில்லை’

பாலியல் வன்கொடுமைகளால் அவசர நிலை
படக்குறிப்பு, அபு பக்கர் கானு, சியரா லியோன் காவல்துறை

மகேனியில் உள்ள காவல் நிலையத்தில், குடும்ப உதவிப் பிரிவின் (FSU) உதவி கண்காணிப்பாளர் அபு பக்கர் கானு கூற்றுபடி ஒவ்வொரு வாரமும் நான்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் வருவதாகக் கூறுகிறார். அனிதா தனது மகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக புகார் அளித்தது இந்த காவல் நிலையத்தில்தான். இங்கு குற்றவாளிகளைக் கைது செய்ய காவலர்களுக்கு வாகன வசதிகள்கூட சரியாக இல்லை.

அபு பக்கர் கானு பிராந்தியத்தில் உள்ள ஏழு போலீஸ் பிரிவுகளையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கிறார். அவர்களிடையே பணியை மேற்கொள்ள ஒரு வாகனம்கூட இல்லை.

“குற்றம் செய்ததாகக் கூறப்படும் நபர் இருந்தாலும், வாகனங்கள் இல்லாததால் அவரை/அவளைக் கைது செய்ய முடியவில்லை,” என்கிறார் உதவி கண்காணிப்பாளர் கானு.

“இங்கே சரியான நேரத்தில் சரியானதைச் செய்வதே சவாலாக உள்ளதாக” கூறுகிறார் அவர்.

சியாரா லியோனில் உள்ள பலரைப் போலவே, அவசரநிலையை அறிவித்த அரசின் நடவடிக்கையால் அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.

“எங்களிடம் போதுமான நல்ல சட்டங்களும் கொள்கைகளும் உள்ளன. ஆனால் சியாரா லியோனில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்னைகளை முழுமையாகக் கையாள்வதற்கு கட்டமைப்பும் பணியாளர்களும் இல்லை,” என்கிறார்.

நீதிக்கான போராட்டம்

பாலியல் வன்கொடுமைகளால் அவசர நிலை
படக்குறிப்பு, தகவல் அமைச்சர் செர்னார் பா.

குற்றவாளி என்று கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அவர்களை நீதிபதி முன் நிறுத்துவது என்பது இன்னும் பெரிய போராட்டமாக உள்ளது.

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான வழக்கை விசாரிக்க, நாட்டில் ஒரே ஒரு நபர் (அட்டர்னி ஜெனரல்) மட்டுமே ஆவணங்களில் கையெழுத்திட முடியும். விசாரணை செயல்முறையை விரிவுபடுத்துவதற்கும், வழக்குகளை நேரடியாக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் அது வேறு ஒரு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

“பாலியல் தொடர்பான குற்றங்களுக்கான குற்றப் பத்திரிக்கையில் கையெழுத்திட வேறு எந்த சட்ட அதிகாரியோ அல்லது வேறு எந்த ஆலோசகரோ தற்போது இல்லை” என்று அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர் ஜோசப் ஏ.கே. சேசே கூறுகிறார்.

“கடந்த 2019ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி, அட்டர்னி ஜெனரல் மட்டுமே குற்றப்பத்திரிக்கையில் கையெழுத்திட முடியும். எனவே குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது சவாலாக உள்ளது.”

தகவல்துறை அமைச்சர் செர்னார் பாஹ் இது ஒரு சரியான செயல்முறை அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் “நாங்கள் இந்தச் சட்ட நடைமுறையைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்” என்றும் கூறுகிறார்.

பாலியல் வல்லுறவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் சூழல் சிறிதும் மாறவில்லை என்று பலர் நம்புகிறார்கள். இதை ஒப்புக் கொண்ட அமைச்சர் “சில பகுதிகளில் மக்கள் அப்படி நினைக்கிறார்கள்” என்றார். ஆனால் ஒட்டுமொத்தமாக எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கருத்தை அவர் நிராகரிக்கிறார்.

“நாங்கள் நடைமுறைப்படுத்திய முறையான சீர்திருத்தங்கள் உள்ளன. புதிய சட்டங்கள் உள்ளன. அவை, 2019இல் இருந்த அந்த இருண்ட நாட்களில் இப்போது நாம் இல்லை என்ற உணர்வுக்கு வழிவகுத்தது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் தீர்க்கமாக.

மீண்டும் மகேனிக்கு வந்த அனிதாவிற்கு, அவரது குழந்தை வல்லுறவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. காவல்துறையிடம் இருந்து அவருக்குப் புதிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால், குற்றவாளியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“இந்த நபரைத் தேட மக்கள் எனக்கு உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் வேதனை இன்னும் தீரவில்லை. என் குழந்தைக்கு நடந்தது, வேறு எந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது,” என்று பதிவிட்டுள்ளார்.