சென்னை: ஏரிகளில் குறையும் நீர்மட்டம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – நிலவரம் என்ன?

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார்.

திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அரசு வழங்கும் குடிநீர் கிடைக்கும். அதை அடுத்து இரண்டு நாட்களின் பயன்பாட்டுக்காக வீட்டில் உள்ள ட்ரம், பாத்திரங்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். குடிப்பதற்கு கேன் தண்ணீர் பயன்படுத்தும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் மற்ற எல்லா தேவைகளுக்கும் இந்த நீரையே நம்பியுள்ளனர்.

“எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக இருக்கும். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீர், போதிய அழுத்தம் இல்லாததால் எங்கள் பகுதி வரை வந்து சேரவில்லை என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கூறினார். எனவே இரண்டு நாட்கள் அனைவரும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அங்கும் மெட்ரோ வாட்டர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிலத்தடி நீரின் தரம் பரவாயில்லை,” என்றார்.

இந்த ஆண்டு பெங்களூரூ நகரில், தேர்தல் விவகாரமாக பேசப்படும் அளவுக்கு, கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட பெங்களூரூ நகரம் தனது குடிநீர் தேவையில் 60%-ஐ பூர்த்தி செய்ய காவிரி நீரையேச் சார்ந்துள்ளது.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்களூருவில் குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்

பெங்களூருவின் குடிநீர் பிரச்னை

காவிரி ஆற்றுப்படுகையில், மரங்கள் அழிக்கப்பட்டதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை காவிரி ஆற்றால் பூர்த்தி செய்யமுடியவில்லை, என்றும் அதிகரித்து வரும் கட்டடங்களால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது என்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரூ போன்றே சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மாநகரம் சென்னை. பெங்களூரு இன்று சந்திப்பது போன்ற வறட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை சந்தித்திருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை சென்னையில் வராது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அதிகரிக்கும் வெப்ப அலை, குறைந்து வரும் ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ஏரிகளிலும் வேகமாக குறையும் நீர்மட்டம்

ஏப்ரல் 30ஆம் தேதி தரவுகளின் அடிப்படையில், சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் 50% நீர் இருப்பே உள்ளது. சென்னையில் 1944-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் நீர்த்தேக்கம் பூண்டி. பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான பூண்டியில் அதன் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 27.79% மட்டுமே நீர் உள்ளது.

அதே போன்று 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் நீர் தேக்கத்தில் 9.99% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் அதன் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில் 89.7% நீர் இருப்பும் செம்பரம்பாக்கத்தில் 64.64% நீர் இருப்பும், தேர்வாய் கண்டிகையில் 76% நீர் இருப்பும் உள்ளது.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம், Vinay IAS

படக்குறிப்பு, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ்

காவிரி நீர் பற்றாக்குறையும் சென்னையை பாதிக்கிறது

இதைத் தவிர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் சோழ அரசர்களால் அமைக்கப்பட்டு, 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நீரை கொண்டு வந்து சேர்க்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், கடந்த 21 ஆண்டுகளாக சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வரும் வீராணம் ஏரி தற்போது வறண்டு கிடக்கிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில், ஏப்ரல் 30ஆம் தேதி நீர்வளத்துறை தரவுகளின் அடிப்படையில், 6,702 மில்லியன் கன அடி அதாவது 50.69% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “வீராணம் ஏரி வறண்டு போவதற்கு முன்பாக, அதிலிருந்து ஒரு நாளுக்கு 165 மில்லியன் லிட்டர் நீர் எடுப்போம். தற்போது வீராணத்துக்கு அருகில் உள்ள நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்று நீர், மற்றும் பரவனாற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது,” என்றார்.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம், Dr L Elango

சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர்

இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னை மாநகரம், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகும். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 முதல் 27,000 பேர் வரை வசிப்பதாக சென்னை மாநகராட்சி தரவுகள் கூறுகிறது. இது லண்டன் மாநகரத்தின் சராசரி மக்கள் அடர்த்தியை விட ஐந்து மடங்கு அதிகம்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவை தற்போது ஒரு நாளுக்கு 1,070 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 1,040 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குவதாகக் கூறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வழங்கலுக்கும் இடையிலான வித்தியாசம் வரும் நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐ.ஐ.டி-யின் பகுதி நேர பேராசிரியர் முனைவர் எல்.இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், “சென்னையில் 2030-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 2,365 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். அப்போது ஒரு நாளுக்கு 466 மில்லியன் லிட்டர் நீர் குறைபாடு இருக்கும்.

அதேபோன்று சென்னையில் 2040-ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 717.5 மில்லியன் லிட்டர் குறைவாக இருக்கும், மேலும் 2050-ஆம் ஆண்டு 962 மில்லியன் லிட்டர் நீர் ஒரு நாளுக்கு தட்டுப்பாடாக இருக்கும். சென்னையின் சராசரி மழை அளவு, நிலத்தடி நீர் என பல்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது,” என்றார்.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையிலுள்ள ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சென்னைக்குக் கை கொடுக்கும் ‘ஆபத்பாந்தவன்’ கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும்.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலை 110 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது.

நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கொண்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதியில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக அரசு கூறுகிறது.

இந்த ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுவதற்கு இந்த ஆலைகளே முக்கிய காரணம்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்

அதிகாரிகள் சொல்வது என்ன?

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ், “சென்னையின் ஏரிகளில் 50%-க்கும் குறைவான நீர் இருப்பு இருந்தாலும், மார்ச் மாதத்துக்கு முன் எவ்வளவு தண்ணீர் வழங்கப்பட்டதோ, அதே அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் ஏரிகளிலிருந்து ஒரு நாளுக்கு 42 மில்லியன் கனஅடி நீர் சென்னையின் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இப்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு நீர் வழங்க முடியும். கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளிலிருந்து 360 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு பெறமுடியும். தற்போது 250 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு அதிகரிக்கப்படும். எனவே செப்டம்பர் முதல் வாரம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை,” என்றார்.

இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று வைத்துக்கொண்டாலும், இது இந்த ஆண்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. வறட்சி, நீர் பற்றாக்குறை, மண்வளம் குறைதல், கடல் நீர் உட்புகுதல், காட்டுத் தீ, உயிரினங்கள் அழிவது, வெப்ப அசௌகரியம் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள காலநிலை செயல்திட்டம் கணித்துள்ளது. அதன்படி 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் ஆண்டுக்கான சராசரி வெப்பம் 3.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், மழை பொழிவு 9% குறையும்.

சென்னையில் மழை பற்றாக்குறையா?

காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு தான் மாறி வரும் மழைப்பொழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,200மி.மீ. மழை பெய்கிறது. இது சென்னை நகரத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு மழை ஆகும். எனினும், சில நேரங்களில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விடுகிறது. ஒரு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை முடிந்து தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள நாட்கள் ‘வறண்ட நாட்கள்’ என்று அழைக்கப்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் 150 வறண்ட நாட்கள் இருந்தன, அது 2019-ஆம் ஆண்டு 193 நாட்களாக அதிகரித்தது. இடையில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட 2015-ஆம் ஆண்டும் 193 வறண்ட நாட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது

பெருவெள்ளமும், கடும் வறட்சியும்

சென்னையில் 2005, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்ணீரே இல்லாத நிலையை குறிக்கும் ‘பூஜ்ஜிய நாள்’ அறிவிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டன. உணவக நேரம் குறைக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் தாண்ணீருக்காக அடிக்கடி கைகலப்புகள் நேர்ந்தன. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.

அதேபோல 2003-ஆம் ஆண்டும் மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நகரமயமாக்கல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி
படக்குறிப்பு, சென்னையில் நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் கோப்புப் படம்

‘சென்னையின் நீர் நிலைகள் சுருங்கிவிட்டன’

1893-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் 12.6 சதுர கி.மீ.-ஆக இருந்த சென்னை நீர் நிலைகளின் பரப்பளவு 3.2 சதுர கி.மீ.-ஆகச் சுருங்கியுள்ளது.

சென்னையில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,488 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டடங்கள் உள்ளன. இது 100 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ .டி நடத்திய ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமது எல்லா பிரச்னைகளுக்கும் காலநிலை மாற்றத்தின் மீது பழி போடக் கூடாது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தின் நீர் மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் முன்னாள் ஆய்வாளராகவும், பல்துறை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஜனகராஜன்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம், S Janakarajan

படக்குறிப்பு, எஸ்.ஜனகராஜன்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘Tank Memoirs’ என்ற ஆவணத்தின்படி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 3,600 நீர் நிலைகள் இருந்தன. இன்று இவற்றில் பல காணாமல் போய்விட்டன,” என்றார்.

மேலும், “ஏரிகள் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டவை. ஒன்று நிரம்பும் போது, அங்கிருந்து நீர் அடுத்த ஏரிக்குச் செல்லும். அந்த முறை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லவில்லை. அந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்கிறார்.

மாறி வரும் மழைப்பொழிவுக்கு ஏற்றாற் போல மழைநீர் சேகரிப்பு முறைகள் வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். “ஒரே நாளில் பெய்யும் கனமழை கடலில் கலப்பதற்கு முன்பாக அதைச் சேமிக்க நவீன வழிகள் இருக்கின்றன. பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டருக்கு கால்வாய்கள் அமைத்து நீரைச் சேமிக்கும் பல நாடுகள் இருக்கின்றன. போதிய மழை பெய்யும் சென்னையில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தேவை இல்லை. ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நவீன மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலே போதும்,” என்கிறார்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதைக் குடிக்க விரும்புவதில்லை

சென்னையில் கிடைக்கும் குடிநீர் தரமானதா?

மத்திய அரசு நடத்திய ‘பே ஜல் சர்வேக்ஷன்’ (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் எஸ் குமாரி, “எங்களுக்கு 24 மணி நேரமும் மெட்ரோ வாட்டர் கிடைக்கிறது. ஆனால் அந்த தண்ணீரில் கழிவுநீர் கலக்கலாம், தூசு கலக்கலாம் என்பதால் அதைக் குடிப்பதில்லை. தண்ணீர் கேன்கள் வாங்கிக் கொள்கிறோம்,” என்றார்.

ஐ.ஐ.டி-யின் ஆய்வை நடத்திய முனைவர் எல்.இளங்கோ, “குடிநீர் வாரியம் குடிநீரை எவ்வளவு தான் சுத்தப்படுத்தி வழங்கினாலும், குழாய்களில் இருக்கும் தூசு, வழியில் யாராவது கொண்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் நீரின் தரத்தை பாதிக்கின்றன. அதேநேரம் கேன்களில் நீரில் அதன் எல்லா தாது சத்துகளும் நீக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. குடிநீரில் 500 TDS இருக்க வேண்டிய சத்துகள் 50-க்கும் குறைவாகவே இருக்கின்றன. கேன்களில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் குறைந்தபட்ச தாதுக்களின் அளவை நிர்ணயிக்க வேண்டும்,” என்றார்.