கழிவறை: விலை உயரும் காகிதம், மாற்றாக தாவர இலைகள் – வல்லுநர்கள் கூறுவது என்ன?

விலை உயரும் கழிவறை காகிதம் - இந்த தாவரம் தீர்வாக இருக்குமா?
  • எழுதியவர், சூ மின் கிம்
  • பதவி, பிபிசி நியூஸ்

விலையுயர்ந்த கழிவறை காகிதத்திற்கு (Toilet paper) போல்டோ (ஒருவகை தாவரம்) ஒரு நிலையான மாற்றாக இருக்கிறதா?

கென்யாவின் தேசிய அருங்காட்சியகத்தின் தாவரவியலாளர் மார்ட்டின் ஓதியம்போ ‘ஆம்’ என்று கூறுகிறார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே, ஆப்பிரிக்காவில் கழிவறை காகிதம் மற்றும் பல பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இது ஆப்பிரிக்க கண்டத்திலேயே தயாரிக்கப்பட்டாலும், அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் காகித கூழ் பொதுவாக இறக்குமதி செய்யப்படுகிறது.

பாரம்பரிய தாவரங்களில் நிபுணத்துவம் பெற்ற மார்ட்டின், விலை உயர்ந்து வரும் கழிவறை காகிதத்திற்கு ஒரு மாற்று இருப்பதாக நம்புகிறார்.

“பிளெக்ட்ராந்தஸ் பார்பேட்டஸ் (Plectranthus barbatus), போல்டோ அல்லது கோலியஸ் பார்பேட்டஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்காவின் கழிவறை காகிதம்” என்று அவர் கூறுகிறார்.

“இன்று பல இளைஞர்களுக்கு இந்த தாவரத்தைப் பற்றித் தெரியாது. ஆனால் இது கழிப்பறை காகிதத்திற்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருப்பதற்கு” சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மென்மையானது மற்றும் நறுமணம் கொண்டது

போல்டோ இலைகள் மென்மையாக இருக்கும், அவை புதினா வாசனையைக் கொண்டிருக்கும் என்கிறார் மார்ட்டின்.

இந்தத் தாவரம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மேலும் லத்தீன் அமெரிக்கா உட்படப் பல்வேறு பகுதிகளில் இது மிகவும் அணுகக்கூடிய ஒன்றாக உள்ளது.

அதன் இலைகள் கழிவறை காகிதத்தின் சதுர அளவைப் போலவே இருக்கும். மேலும், இவை நவீன கழிப்பறைகளில் பயன்படுத்தப்படலாம்.

விலை உயரும் கழிவறை காகிதம் - இந்த தாவரம் தீர்வாக இருக்குமா?
படக்குறிப்பு, பெஞ்சமின் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போல்டோவை பயன்படுத்துகிறார். மேலும் தனது வீட்டின் அருகே அந்தச் செடியை வளர்த்து வருகிறார்.

பெஞ்சமின் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போல்டோவைப் பயன்படுத்தி வருகிறார். மத்திய கென்யாவில் உள்ள நகரமான மேருவில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு முற்றத்தில் அதை வளர்க்கிறார்.

அவருடைய தாத்தா 1985இல் இந்தத் தாவரத்தை பெஞ்சமினுக்கு அறிமுகப்படுத்தினார். “அப்போதிருந்து நான் அதைப் பயன்படுத்துகிறேன்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் அதை அதிகமான மக்கள் பயன்படுத்த முடியுமா?

இதைப் பெரியளவில் உற்பத்தி செய்யும் நிலையை அடைவதற்கு நாம் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டும். ஆனால் அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் அதன் திறன் ஆராயப்படுகிறது.

“மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்”

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபின் கிரீன்ஃபீல்டு, ஐந்து ஆண்டுகளாக போல்டோ இலைகளைப் பயன்படுத்துவதாகவும், ஃப்ளோரிடாவில் உள்ள தனது நர்சரியில் நூற்றுக்கும் மேற்பட்ட போல்டோ செடிகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மக்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முயற்சியின் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்.

விலை உயரும் கழிவறை காகிதம் - இந்த தாவரம் தீர்வாக இருக்குமா?
படக்குறிப்பு, ராபின் கிரீன்ஃபீல்ட் தனது நர்சரியில் நூற்றுக்கும் மேற்பட்ட போல்டோ செடிகளை வளர்த்துள்ளார்.

“தாவரங்களைக் கழிப்பறை காகிதமாகப் பயன்படுத்துவதை வறுமையுடன் தொடர்புபடுத்தும் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் கழிப்பறை காகிதத்தைப் பயன்படுத்தும்போது, ​​​​அவர்களும் தாவரங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார்.

“இதில் வேறுபாடு என்னவென்றால், கழிப்பறை காகிதத்திற்கான வணிகம் பெரியளவில் உள்ளது” என்கிறார் அவர்.

ராபின் தனது முன்முயற்சியில் இணைந்தவர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகளைப் பெற்றதாகக் கூறுகிறார். இந்த மக்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை வளர்ப்பதன் நிலைத்தன்மையை மதிக்கிறார்கள் என்று அவர் உறுதியளிக்கிறார்.

“போல்டோவை கழிவறை காகிதமாகப் பயன்படுத்தத் தயங்குபவர்களிடம், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று நான் கூறுவேன். நான் நானாக இருக்கப் போகிறேன் என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்,” என்கிறார்.

“மிகவும் மென்மையான இலைகளால் என்னைத் தூய்மைப்படுத்தப் போகிறேன்,” என்று அவர் முடிக்கிறார்.