← முகப்பு செய்திகள்

‘விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த பூவே உனக்காக’ – ஆர்.பி. சௌத்ரியின் 12 பிரபல படங்கள்

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 64 பார்வைகள்
‘விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த பூவே உனக்காக’ – ஆர்.பி. சௌத்ரியின் 12 பிரபல படங்கள்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் 'சூப்பர்குட் பிலிம்ஸ்' ஆர்.பி.செளத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று காலமானார்.

தனது உறவினர் திருமணத்துக்காக ஜோத்பூர் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்கு உள்ளானபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் அவரின் சூப்பகுட் பிலிம்ஸ் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 99 படங்களை தயாரித்து இருந்தார். இப்போது விஷால் நடித்து இயக்கும் மகுடம் அவரின் 99வது படம். 100 படத்தை தயாரிக்கும் கனவோடு இருந்தார்.

பல வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன், கே. எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, சசி, பேரரசு, ஏழில், பாலசேகன், ராஜகுமாரன், பிருந்தாசாரதி, ரவிமரியா, ரமணா என பலரும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே.

விஜய்க்கு பூவே உனக்காக என்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் இவர்தான்.

பின்னர் சூப்பர்குட் பிலிம்சில் ஷாஜகான், ஜில்லா, துள்ளாதமனமும் துள்ளும், என பல வெற்றி படங்களில் நடித்தார் விஜய்.

ராஜஸ்தானில் பிறந்த ரத்தன்லால் பகத்ராம் செளத்ரி, சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி 1990ல் புது வசந்தம் படத்தை தயாரித்தார்.

அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குபின் தென்னிந்தியாவில் முன்னணி தயாரிப்பாளராக மாறினார். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவா இவரின் மகன்கள். இவர்களை தவிர இன்னும் 2 மகன்கள் அவருக்கு உள்ளனர்.

அவர் மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி

'அவர் போட்ட பிச்சை'

தனது முதல் படமான புதுவசந்தம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி குறித்து இயக்குனர் விக்ரமன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''நான் அந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து நிலை குலைந்து போய் இருக்கிறேன். நான் இன்றைக்கு நன்றாக இருக்க அவர்தான் காரணம். என்னை நம்பி என் அப்பா கூட பணம் கொடுக்கலை.அந்த காலத்தில் புதுமுகமான என்னை நம்பி பல லட்சம் கொடுத்தார். என்னை இயக்குனர் ஆக்கினார். நான், என் குடும்பம் சாப்பிடுவது அவர் போட்ட பிச்சை. 15 நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசினார். சூர்யவம்சம் 2 படம் ஸ்கிரிப்ட் அனுப்பி, அந்த படத்தை நீங்கதான் இயக்க வேண்டும் என்றார்'' என கூறினார்.

தனது முதல் படமான புதுவசந்தம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி குறித்து இயக்குனர் விக்ரமன் பிபிசி தமிழிடம் பேசுகையில் ‘நான் அந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து நிலை குலைந்து போய் இருக்கிறேன் என்றார்.

உதவி இயக்குனர்களின் நம்பிக்கை

சொல்லாமலே படத்தின் மூலம், ஆர்.பி.செளத்ரியால் இயக்குனர் ஆக்கப்பட்டவர் சசி.

அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில் ''அந்த காலத்தில் உதவி இயக்குனர்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு. அவர்கள் கனவுகளுடன் ரூமில் கதை பேசிக்கொள்ளும்போது, 'நம்மை அமைதிப்படுத்த இளையராஜா இருக்கிறார். வாழ்க்கை கொடுக்க செளத்ரி சார் இருக்கிறார். நாம நல்ல கதை பண்ண வேண்டும்.அவரை சந்திக்க வேண்டும். அது போதும்' என நம்பிக்கையுடன் சொல்வார்கள் செளத்ரிசார் மாதிரியான தயாரிப்பாளர், ஜென்டில்மனை பார்க்க முடியாது. அனுபவம், தோற்றம் பார்க்காமல் நல்ல கதை இருந்தால் வாய்ப்பு கொடுப்பார்.'' என கூறினார்

''சொல்லாமலே கதை கேட்டவுடன், இது வெற்றி பெறும் என கணித்து பட வேலைகளை தொடங்கினார். நான் புதியவன் என்றாலும் என்னை நம்பினார். நான் கதை சொல்போது ஹீரோ நாக்கு அறுக்கும் கிளைமாக்ஸ் சொல்லவில்லை. கொஞ்ச நாள் கழித்து சார் இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும், அதுக்கு 3 மாதம் ஆகும் என்றேன். அவர் மறுப்பு சொல்லாமல் ஓகே என்றார்.''

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஆனந்தம் திரைப்படம்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

'என் பாணி அல்ல, ஆனால் ஓடும்'

''திருப்பாச்சி படத்தின் என்னை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் ஆர்.பி.செளத்ரி, அவரை வாழ்நாளில் மறப்பேனா'' என்று கலங்கியபடி பிபிசி தமிழிடம் பேச ஆரம்பித்தார் இயக்குனர் பேரரசு.

''அதுவரை சூப்பர் குட் பிலிம்ஸ் குடும்பபாங்கான படங்களை எடுத்து வந்தது. திருப்பாச்சி படத்தின் கதையை கேட்டவுடன், இது எங்கள் பாணி அல்ல. ஆனால், படம் ஓடும். இந்த பார்மூலா விஜய்க்கு சரியாக இருக்கும் என்று கணித்து என்னை இயக்குனர் ஆக்கினார். அனைவரையும் மரியாதையாக நடத்துவார். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பார். அதேசமயம், தேவைக்கு செலவு தயங்க மாட்டார்.'' என கூறினார் பேரரசு.

''பல உதவி இயக்குனர்களின் கதைக்கு, கனவுக்கு உயிர் கொடுத்தவர். அதிலும் பலர் புதுமுகங்கள். வெற்றி அடைந்தவர் பின்னால் போகாதவர்.''

''அவருக்கு அது பிஸினஸ் என்றாலும் அவரால் பலன் பெற்றவர்களுக்கு வாழ்க்கை. இத்தனை கோடி முதலீடு செய்தவர் அடிக்கடி படப்பிடிப்புதளம் வரமாட்டார். எந்த குறுக்கீடும் செய்யமாட்டார். இயக்குனர் கதையை நம்பி எடுக்கிறேன். அவருக்கும் பொறுப்பு இருக்கும். நான் நம்புகிறேன் என்பார். இந்த மனசு யாருக்கும் வரும். எப்போதும் அவர் அபீஸ் வாசலில் ஒரு கூட்டம் நிற்கும்.'' என கூறினார் பேரரசு

''இங்கே படம் பண்ணினால் நமக்கு வாழ்க்கை கிடைக்கும் என்பார்கள். அவர் பிசியாக இருந்தாலும் அவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டாம். அவர் ப்ரீயாக இருக்கும்போது கதை கேட்பார். அனைவரையும் மரியாதையாக நடத்துவார். உதவி இயக்குனர்களின் சொர்க்கபூரி அந்த திநகர் ஆபீஸ்'' என்றார் பேரரசு.

ஜீவா நடித்த தம்பி தலைவர் தலைமையில் படத்தின் இயக்குனர் நிதேஷ் சகாதேவ் பிபிசி தமிழிடம் ''நான் மலையாளத்தில் இருந்து வந்த புது இயக்குனர். அவர் மகன் ஜீவா நடித்த என் படம் ஹிட். ஆனாலும், மற்றவர்களிடம் படத்தின் வெற்றிக்கு காரணம் இயக்குனர், கதைதான் என்று சொன்னார். மலையாள சினிமாவில் கூட அவரை பற்றி, அவர் திறமைகள் பற்றி பேசுவோம்'' என்கிறார்

ஆர் பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக திரைப்படம்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த பிரபல படங்களில் சில

1) புது வசந்தம்

சூப்பர்குட்பிலிம்ஸ் தயாரித்த முதல் படம் (1990) விக்ரமனுக்கும் முதல் படம்.

காதல் இல்லாமல் ஆண், பெண் நட்பாக இருக்க முடியும் என்ற கருத்தை சொன்னது. முரளி, சித்தாரா நடிப்பும், பாடல்களும் படத்தை இன்னும் பிரபலமாக்கின. இந்த படத்தின் வெற்றியால் சூப்பர்குட் என்ற நிறுவனம் 35 ஆண்டுகளாக நடைபோட்டு, 99 படங்களை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தது. ஏ.எஸ்.ராஜ்குமாரின் 'பாட்டு ஒன்ணு பாடட்டுமா' பாடல் ஒலித்துகொண்டே இருக்கிறது.

2) பூவே உனக்காக

தந்தை இயக்கத்தில், வேறு மாதிரியான கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த விஜயின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் விஜய்க்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் ஆனார்கள். தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை கொடுத்த படம். விக்ரமன் இப்படத்தை இயக்கினார். 1996ல் வந்த இந்த படம், கடந்த 30 ஆண்டுகளாக கோலிவுட்டில் கொடி நாட்டி விஜய்க்கு அடிதளம் ஏற்படுத்திக் கொடுத்தது.

3) நாட்டாமை

சரத்குமாரின் வாழ்க்கையில் முக்கியமான படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தின் சீன்கள், பாடல்கள், காமெடி இன்றைக்கும் பிரபலம். தெலுங்கில் ரஜினிகாந்த், மோகன்பாபு நடித்தனர். நாட்டாமைக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான சொல்லாமலே திரைப்படம்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

4) துள்ளாதமனமும் துள்ளும்

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த மாறுபட்ட காதல் கதை. அப்போது கவர்ச்சி ரோலில் நடித்து வந்த சிம்ரனுக்கு இந்த படத்தின் கதை, கேரக்டர் மூலமாக நல்ல பெயர் கிடைத்தது. பாடல்களும், கிளைமாக்சும் படத்துக்கு பிளஸ்.

5) லவ்டுடே

பாலசேகரன் இயக்கத்தில் விஜய், சுவலட்சுமி நடித்த காதல் படம். இன்றைக்கும் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்சும் வித்தியாசமாக இருக்கும். 100நாட்களுக்கு ஓடி வெற்றி பெற்ற படம்.

6) சொல்லாமலே

தமிழ் சினிமாவில் சிறந்த கிளைமாக்சில் இந்த படத்தை தவிர்க்க முடியாது. கடைசியில் காதலுக்காக நாக்கை வெட்டிய லிவிங்ஸ்டன் கேரக்டர் குறித்து இன்றும் மக்கள் பேசுகிறார்கள். இன்றைக்கும் பல அழுத்தமான படங்களை கொடுக்கும் சசியை இயக்குனர் ஆக்கினார் செளத்ரி.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான நாட்டாமை திரைப்படம்

பட மூலாதாரம், SuperGoodFlims/Youtube

7)ஆனந்தம்

லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, ஸ்ரீவித்யா நடித்த கூட்டுக்குடும்பத்தின் மதிப்பை சொன்ன கதை. தமிழில் மம்முட்டி நடித்த சிறந்த படங்களின் ஒன்று.

இந்த படத்தின் மூலம் பிற்காலத்தில் கமர்ஷியல் இயக்குனராக மாறிய லிங்குசாமியை இயக்குனர் ஆக்கினார் செளத்ரி.,

8) சுந்தர புருஷன்

சபாபதி இயக்கத்தில் லிவிங்ஸ்டன், ரம்பா, வடிவேலு நடித்த படம். கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை கமர்ஷியலாக சொன்னது.

9)சூரிய வம்சம்

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி நடித்த குடும்ப பாங்கான கமர்ஷியல் படம். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இன்றைக்கும் இந்த படத்தின் மீம்ஸ், பாடல்கள் பிரபலம். பல மொழிகளில் ஹிட்டானது.

10) புன்னகை தேசம்

ஷாஜகான் இயக்கத்தல் தருண், குணால், சினேகா, பிரீத்தா விஜயகுமார், அம்சவர்தன் நடிக்க, காதலை கொண்டாடிய படம்.

அந்த காலத்தில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் படமாகவும், கமர்ஷியல் படமாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.

11) திருப்பாச்சி

பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா, மல்லிகா நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான படம். விஜய்க்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், சண்டைக் காட்சிகளுக்காக பேசப்பட்டது.

12) நீ வருவாய் என

ராஜகுமாரன் இயக்குனராக அறிமுகமான படம். பார்த்திபன், தேவயானி, அஜித் நடித்து இருந்தனர். மாறுபட்ட காதல் படமாக இருந்தாலும் அந்த காலத்திலேயே கண் தானம் பற்றி பேசியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net