ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதியாக விளங்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ‘பெடரேஷன் வாலோனியா-பிரஸ்ஸல்ஸ்’ நாடாளுமன்றத்தில், கல்வித்துறையில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டுவரும் புதிய சட்டவரைவு மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த புதிய சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், பிரெஞ்சு மொழி கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை (Tuition Fees) கணிசமாக உயர்த்தவும், ஆசிரியர்களின் பணிச்சுமையை 10% வரை அதிகரிக்கவும் பெல்ஜியம் அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்பினர் ஒட்டுமொத்தமாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்த மாணவர்களின் போராட்டம், பிரஸ்ஸல்ஸ் மத்திய ரயில் நிலையம் (Brussels Central Station) அருகே நெருங்கியபோது திடீரென வன்முறையாக மாறியது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு எதிரான சட்டம் விவாதிக்கப்படுவதை அறிந்து ஆத்திரமடைந்த முகமூடி அணிந்த தீவிர போராட்டக் குழுவினர், வீதிகளில் இருந்த சைக்கிள் ஸ்டாண்டுகள் மற்றும் தடுப்புகளை இழுத்து வந்து சாலையின் நடுவே போட்டு தீ வைத்தனர். மேலும், போலீசாரை நோக்கி ஆபத்தான பட்டாசுகளையும், வெடைகளையும் வீசி எறிந்ததோடு, அங்கிருந்த பொது சொத்துக்களையும், வீடுகளின் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி நாசப்படுத்தியதால் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
இந்த கடுமையான வன்முறை மற்றும் மோதலைத் தொடர்ந்து, பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க கொனிங்ஸ்ட்ராட் வழியிலான பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதோடு, பார்க் மெட்ரோ ரயில் நிலையமும் உடனடியாக மூடப்பட்டது. போலீசார் சுமார் 15-க்கும் மேற்பட்ட கலகத் தடுப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரமாகப் போராடி, மாலை 6 மணியளவிலேயே கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசின் இந்த கல்வி வெட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர்களின் தார்மீகக் கோபம், தற்போது பெல்ஜியத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.