← முகப்பு செய்திகள்

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு, நெரிசலான பேருந்து அல்லது ரயில் பயணத்தின் முடிவில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பின் அல்லது கொளுத்தும் கோடை வெயிலில் நாள் முழுக்கச் செயல்படும் சூழலை எதிர்கொண்ட பிறகு என ஏதாவது ஒரு தருணத்திலாவது ஏறக்குறைய அனைவருமே இதை அனுபவித்து இருப்போம்.

இப்படியான சூழ்நிலைகளில் திடீரென அக்குள் பகுதியில் இருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வருவதை உணர்ந்திருப்போம். மேலும் அதற்கு நம் வியர்வையே காரணம் என்றும் பலர் கருதியிருப்போம். ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடலில் இருந்து வெளியேறும் வியர்வை பெரும்பாலும் மணமற்றதாகவே இருக்கிறது.

மறுபுறம், உடல் துர்நாற்றத்துடன் தொடர்புடைய அந்தக் குறிப்பிட்ட வாசனை, வியர்வை, சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், அக்குள் பகுதியின் தனித்துவமான சூழல் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள சிக்கலானதொரு இடைவினையின் விளைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"உடல் துர்நாற்றம் வியர்வையால் ஏற்படுவதில்லை, மாறாக சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டால் ஏற்படுகிறது" என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது.

அக்குள், பிறப்புறுப்புப் பகுதி உள்ளிட்ட உடலின் ஒரு சில பகுதிகள், பிற பகுதிகளைவிட வலுவான துர்நாற்றத்தை உருவாக்குவது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல தசாப்தங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அத்தகைய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள், மனித உடலின் சிறப்பு வாய்ந்த வியர்வைச் சுரப்பிகள், நுண்ணுயிரிக் குழுக்கள், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுவாரஸ்யமான கதையை வெளிப்படுத்துகின்றன.

உடலின் பிற பகுதிகளைவிட அக்குள் எந்த வகையில் வேறுபடுகிறது?

மனித உடலில் இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் இருப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி இணையதளத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதில் முதலாவது, எக்ரைன் சுரப்பிகள். இவை உடலின் பெரும்பான்மை பகுதிகளில் காணப்படுகின்றன. அவை முக்கியமாக நீர் மற்றும் உப்புகளாலான நீர்த்தன்மையுள்ள வியர்வையை உற்பத்தி செய்கின்றன. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதே அவற்றின் முதன்மையான பங்கு. அவ்வாறு உற்பத்தியாகும் வியர்வை ஆவியாகும்போது உடல் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்கிறது.

இரண்டாவது வகை சுரப்பி அப்போக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. இவை, அக்குள், இடுப்பின் கீழ் பகுதி போன்ற இடங்களில் செறிந்து காணப்படுகின்றன. இந்தச் சுரப்பிகள், ஒருவரின் பருவமடைதல் காலத்தில் செயல்படத் தொடங்கி, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் பிற கரிம சேர்மங்கள் நிறைந்த அடர்த்தியான திரவத்தை வெளியிடுகின்றன.

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெம்ஸ் மைக்ரோபயலாஜி இகாலஜி என்ற ஆய்விதழில், கோர்டான் ஜேம்ஸ் மற்றும் அவரது குழு வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையின்படி, அப்போக்ரைன் சுரப்பிகள் ஆரம்பத்தில் மணமற்றவையாகவே இருக்கின்றன. ஆனால், தோலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்தச் சேர்மங்களை ஆவியாகும் வேதிப் பொருட்களாக மாற்றுவதால் துர்நாற்றம் உருவாகிறது. இந்த வேதிப் பொருட்களைத்தான் மனிதர்கள் உடல் துர்நாற்றமாக உணர்கிறார்கள்.

பொதுவாக, நெற்றி, கைகள், முதுகு ஆகிய இடங்களில் சுரக்கும் வியர்வையைவிட அக்குளில் சுரக்கும் வியர்வை பெரும்பாலும் அதிக துர்நாற்றத்துடன் இருப்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது.

'ஃபெம்ஸ் மைக்ரோபயாலஜி இகாலஜி' என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரையின்படி, இயற்கையாகவே மணமற்ற நிலையில் சுரக்கும் திரவத்தை பாக்டீரியாக்கள் ஆவியாகும் வேதிம சேர்மங்களாக மாற்றும்போது உடல் துர்நாற்றம் உருவாகிறது.

அதோடு, அக்குள் பகுதியின் வெப்பமான, ஈரப்பதமான மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கிய சூழல், இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும் அடர்த்தியான நுண்ணுயிரிக் கூட்டங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனித சருமம் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. இவை கூட்டாக சரும நுண்ணுயிர்த் தொகுதி (skin microbiome) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை. இருப்பினும், சில நுண்ணுயிரிகள் அக்குள் துர்நாற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நேச்சர் ரிவியூஸ் மைக்ரோபயாலஜி, மைக்ரோபயோம் போன்ற ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், கோரினேபாக்டீரியம் (Corynebacterium), ஸ்டஃபைலோகாக்கஸ் (Staphylococcus) ஆகிய பாக்டீரியா பேரினங்களைச் சேர்ந்த வகைகளை இதற்கான முக்கிய பங்களிப்பாளர்களாக அடையாளம் கண்டுள்ளன.

ஆய்வின்படி, "இந்த நுண்ணுயிரிகள் அப்போக்ரைன் சுரப்பியில் இருந்து உற்பத்தியாகும் வியர்வையிலுள்ள சேர்மங்களைச் சிதைத்து, கந்தகம் கொண்ட சேர்மங்கள், குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்கள், ஸ்டிராய்ட் வேதிப்பொருட்கள் போன்றவை கலந்த ஆவியாகும் மூலக்கூறுகளை வெளியிடுகின்றன."

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

இந்த வேதிப்பொருட்களே உடல் துர்நாற்றத்துடன் தொடர்புடைய காரமான, வெங்காயம் போன்ற, கந்தக வாசனைகளுக்குக் காரணமாகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு, யார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஸ்டஃபைலோகாக்கஸ் ஹோமினிஸ் என்ற பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட நொதி அடையாளம் காணப்பட்டது. இந்த நொதி, மணமற்ற வியர்வை மூலக்கூறுகளைக் காரமான கந்தக சேர்மங்களாக மாற்றுகிறது.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புகள், "உடல் துர்நாற்றத்திற்குப் பின்னாலுள்ள உயிரியல் வழிமுறைகள் பல பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்" என்று குறிப்பிடுகின்றன.

யார்க் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளரும், இந்த ஆய்வுக் குழுவில் ஒருவருமான பேராசிரியர் கேவின் தாமஸ், "இந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் அக்குள் துர்நாற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வேதிம செயல்முறையை இனங்கண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

துர்நாற்றம் நபருக்கு நபர் வேறுபடுவது ஏன்?

உடல் துர்நாற்றத்தின் அளவும் தன்மையும் நபருக்கு நபர் கணிசமாக மாறுபடும். மரபியல் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு நன்கு அறியப்பட்ட உதாரணங்களில் ஒன்று, ஏபிசிசி11 எனப்படும் ஒரு மரபணு. கிழக்கு ஆசிய மக்களிடையே பொதுவாகக் காணப்படும் இந்த மரபணுவின் ஒரு குறிப்பிட்ட வகையைக் கொண்டவர்கள், அக்குள் துர்நாற்றத்துடன் தொடர்புடைய சேர்மங்களைக் குறைவாகவே உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

உடல் துர்நாற்றத்தின் மீது வலுவான மரபணுத் தாக்கங்களை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக ஏபிசிசி11 மரபணு கூறப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு 'நேச்சர் ஜெனடிக்ஸ்' ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, கிழக்கு ஆசிய மக்களிடையே குறிப்பாகப் பரவலாகக் காணப்படும் உலர்ந்த காதுக் குரும்பிப் பண்புக்கு (dry earwax trait) காரணமான ஒரு மரபணு மாறுபாட்டைக் கண்டறிந்தது.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதே மரபணு மாறுபாடு அக்குள் துர்நாற்றத்தைக் குறைப்பதுடனும் வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தன.

சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்த வகை மரபணுவைக் கொண்டுள்ளதாகவும், அதே நேரம் இது ஐரோப்பிய, ஆப்பிரிக்க மக்களிடையே மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதேபோல, ஹார்மோன் வேறுபாடுகளும் துர்நாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். பருவமடைதலின்போது, அப்போக்ரைன் சுரப்பிகள் முதல் முறையாகச் செயல்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, இளமைப் பருவத்தில் உடல் துர்நாற்றம் ஏறக்குறைய அதிகமாக உணரப்படுகிறது.

அதேநேரம், கர்ப்பம், மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் ஆகிய காரணங்களால் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாகவும் உடலின் வாசனை மாறக்கூடும்.

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

துர்நாற்றத்திற்கு உணவுமுறை காரணமாக அமையுமா?

உணவுமுறை உடல் துர்நாற்றத்தில் தாக்கம் செலுத்தக்கூடும் என்றாலும் அதன் விளைவு ஒவ்வொரு நபருக்கும் கணிசமாக மாறுபடும்.

இதுதொடர்பாக, கிளீவ்லேண்ட் கிளினிக்கின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, பூண்டு, வெங்காயம், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட கந்தக சேர்மங்கள் நிறைந்த உணவுகள், உடல் வாசனையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையவையாகப் பொதுவாக அறியப்படுகின்றன.

ஏனெனில், வியர்வை மூலமாகக் கந்தக சேர்மங்கள் வெளியிடப்படலாம். அதோடு, மது மற்றும் காரமான உணவுகளும் வியர்வையை அதிகரிப்பதன் மூலம் மறைமுகமாகப் பங்களிக்கக்கூடும் என்று கிளீவ்லேண்ட் கிளினிக்கின் தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி, இது உடல் துர்நாற்றத்திற்குக் காரணமான பாக்டீரியாக்களின் செயல்பாட்டிற்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

ஆயினும், தொடர்ச்சியான உடல் துர்நாற்றத்திற்கு உணவுமுறை மட்டுமே முதன்மைக் காரணமாக இருப்பது மிகவும் அரிது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் துர்நாற்றம் முற்றிலும் இயல்பானது. ஆனால், சில நேரங்களில் வாசனையில் ஏற்படும் திடீர் அல்லது அசாதாரண மாற்றம் ஓர் உள்ளார்ந்த மருத்துவ நிலையைக் குறிக்கக்கூடும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

உதாரணமாக, ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (அதீதமாக வியர்த்தல்), நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, சில வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளின் அறிகுறியாக அது இருக்கலாம் என்று கிளீவ்லேண்ட் கிளினிக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், டிரைமெதிலமினூரியா எனப்படும் ஓர் அரிதான பரம்பரை நிலை, சில நேரங்களில் "மீன் வாசனை நோய்க்குறி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால் டிரைமெதிலமைனை திறம்படச் சிதைக்க முடியாது. இது வியர்வை, சிறுநீர் மற்றும் சுவாசத்தில் ஒரு தனித்துவமான மீன் போன்ற வாசனையை ஏற்படுத்துகிறது என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது.

எனவே, உடல் துர்நாற்றம் திடீரென ஏற்பட்டாலோ, வழக்கத்திற்கு மாறாக வாசனை வலுவாக இருந்தாலோ அல்லது பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தாலோ மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுமாறு தேசிய சுகாதார சேவை மையம் அறிவுறுத்துகிறது.

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images

அக்குள் துர்நாற்றத்தைக் குறைப்பதற்கான வழிகள் என்ன?

ஆய்வுகளின்படி, பாக்டீரியாக்களே துர்நாற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், உடலைத் தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது வியர்வையைச் சிதைக்கக் கிடைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது வெப்பமான பருவநிலையில் சென்று வந்த பிறகு போன்ற சூழல்களில் தினமும் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய சுகாதார சேவை மையம் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, அக்குள், இடுப்புப் பகுதி, பாதங்களில் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வியர்வைத் தடுப்பான்களைப் பயன்படுத்துவதும் பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை, அலுமினியம் சார்ந்த சேர்மங்களைக் கொண்டு வியர்வை நாளங்களைத் தற்காலிகமாகத் தடுப்பதன் மூலம் உடல் வியர்ப்பதையே குறைக்கிறது.

இப்படியாக, வியர்வையின் அளவைக் குறைப்பது, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியா செயல்முறைகளைக் கட்டுப்படுத்துவதாக அமெரிக்க தோல் மருத்துவ அகாடெமி குறிப்பிடுகிறது.

அதேபோல, ஆடைகளில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் நிலைத்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், ஆடைகளைத் தவறாமல் மாற்றுவதும் அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில ஆய்வுகள், அக்குளில் இருக்கும் ரோமங்களை நீக்குவது அல்லது ட்ரிம் செய்வது துர்நாற்றத்தை ஓரளவுக்குக் குறைப்பதாகக் கூறுகின்றன.

ரோமங்கள், வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்து கொள்வதற்கான பரப்பளவை அதிகரிக்கின்றன. இது துர்நாற்றத்தை அதிகரிக்கக்கூடும்.

ஆனால், ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் டெர்மட்டாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, அக்குள் ரோமங்களை நீக்குவது, வெறுமனே அப்பகுதியைக் கழுவுவதால் கிடைக்கும் பலன்களைவிட அதிகமாக துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net