பல வழக்குகளுடன் தொடர்புடைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான கிறிஸ் கொடுக்கல் வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதியும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருந்து கொள்வனவு மோசடி வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதியும், சாமர சம்பத்துக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேர்வின் சில்வா, யோசித ராஜபக்ஷ உட்பட பலருக்கு எதிரான வழக்குகள் எதிர்வரும் மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதனை குறிப்பிடுவது எவ்வாறு நீதிமன்ற சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
எமது அரசாங்கத்தை போன்று நீதித்துறையை சுயாதீனப்படுத்திய எந்த அரசாங்கமும் கிடையாது. கடந்த காலங்களில் நீதித்துறையை மலினப்படுத்தியவர்கள் இன்று நிறைவேற்றுத்துறை நீதித்துறையை ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்கள் எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். தமக்கு ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கி, செலான் வங்கியின் தலைவரை பிரதம நீதியரசராக நியமித்தவர்கள் இன்று எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.
ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமைய நீதியரசர்கள் தற்போது நியமிக்கப்படுவதில்லை. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் தான் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அரசியலமைப்பின் 18 மற்றும் 20ஆம் திருத்தங்களில் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமைய நீதியரசர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதுவே நீதித்துறைக்கு விடுத்த பாரியதொரு அழுத்தமாகும்.
ஆணைக்குழுக்கள், நீதிமன்றங்கள் தற்போது சுயாதீனமாக செயற்படுவதால் ஊழல்வாதிகள் அச்சமடைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது எவ்வாறு ஜனநாயக உரிமை மீறலாகும்.
ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்னவென்பது என்று அறிந்துக் கொள்ளும் உரிமை ஜனாதிபதி உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு.
பல வழக்குகளுடன் தொடர்புடைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான கிறிஸ் கொடுக்கல் வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதியும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருந்து கொள்வனவு மோசடி வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதியும்,சாமர சம்பத்துக்கு எதிரான காசோலை மோசடி வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதேபோல் பல மோசடிகளுடன் தொடர்புடைய மேர்வின் சில்வா, யோசித ராஜபக்ஷ உட்பட பலருக்கு எதிரான வழக்குகள் எதிர்வரும் மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதனை குறிப்பிடுவது எவ்வாறு நீதிமன்ற சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்.நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இன்று நீதிமன்ற சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.