மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான பாராளுமன்ற செயற்குழு 03 மாத காலத்துக்குள் தனது விதப்புரை மற்றும் யோசனைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காமல் குழுவின் காலத்தை நீடித்தால் குழுவில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு செயற்குழுவின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், நிசாம் காரியப்பர் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளர்.
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்குரிய விசேட செயற்குழுவை நியமிக்கும் பிரேரணையை 2026.01.06 ஆம் திகதியன்று அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி,எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இயங்குகிறது.
தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானித்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கமைய மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரை மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் 11 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 2026.02.20 ஆம் திகதியன்று விசேட பாராளுமன்ற செயற்குழுவை நியமித்தார்.
முழுமையான அதிகாரமளிக்கப்பட்ட இந்த செயற்குழு 03 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதன் முதலாவது கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 07ஆம் திகதியன்று கூடியது.
இதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து குழுவின் உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் நான்கு அறிக்கைகளை கோரியுள்ளார்.
இதற்கமைய, செயற்குழு 03 மாதகாலத்துக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்காமல் குழுவின் காலத்தை நீடித்தால் குழுவில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு குழுவின் உறுப்பினர்களான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
பழைய முறைமைக்கு தற்காலிக ஏற்பாடு
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் இம்முறையில் நடத்துவதற்கு தற்காலிக ஏற்பாடு ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவை செயற்குழுவுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணைக்குழு எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பான அறிக்கை ஒன்றை செயற்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.