← முகப்பு செய்திகள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு சீரழிக்கிறது – சஜித் குற்றச்சாட்டு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 46 பார்வைகள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு சீரழிக்கிறது – சஜித் குற்றச்சாட்டு

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமையளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது வேண்டுமென்றே நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை சீரழிப்பதற்கு முயற்சித்து வருகிறது. அனல் மின்நிலையம் மற்றும் எரிபொருள் மின்நிலைய மாபியாக்களின் பிடியில் அரசாங்கம் சிக்கியுள்ளதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த டிசம்பர் மாதம் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டிய 10 பில்லியன் ரூபாய் தொகையை அரசாங்கம் செலுத்தாது இழுத்தடித்து வருகின்றது. இதனால் மாதந்தோறும் 2.5 பில்லியன் ரூபாய் மேலதிகமாக இத்தொகையுடன் சேர்ந்துகொண்டே செல்கிறது.

அரசியல் மேடைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவோம் எனப் பரப்புரைகளைச் செய்த தற்போதைய அரசாங்கம், உண்மையில் இன்று எரிபொருள் மற்றும் அனல் மின்நிலைய மாபியாவின் கைக்கூலியாக மாறிவிட்டது.அரசியல் பகுப்பாய்வு

இதன் காரணமாக அனல் மின்நிலையங்களில் ஒரு மின் அலகு உற்பத்திக்கு 100 ரூபாய்க்கும் அதிகமான செலவு ஏற்பட்ட போதிலும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளால், கூரை மேல் சூரிய மின்சார திட்டங்களைத் தவிர, காற்றாலை, சிறு நீர்மின்சாரம், உயிரியல் பாகம் உள்ளிட்ட 389 திட்டங்கள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளன.

ஒட்டுமொத்த மின்சார கட்டமைப்பிற்கு 1,073 மெகாவோல்ட்டை பெற்றுத் தரும் இத்திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தரமற்ற நிலக்கரி ஊழல் திட்டத்தால் நாடு தினமும் பாரிய நிதி நட்டத்தைச் சந்தித்து வருகிறது.

அவ்வாறு இழந்த மின்சாரத்தை உயர் செலவில் எரிபொருள் மின்நிலையங்கள் வழியாக அரசாங்கம் உற்பத்தி செய்து வருகிறது. பகல் நேர மின் தேவையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானதை நிறைவேற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாட்டின் அந்நியச் செலாவணியையும் பாதுகாக்கிறது என்பதை அரசாங்கம் மறந்து செயல்படுகிறது.

உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தி வரும் வேளையில், அதற்கு முரணாக அனல் மின்நிலையங்களை மேம்படுத்தும் உலகின் ஒரே அரசாங்கமாக இந்த திசைகாட்டி அரசாங்கமே திகழ்ந்து வருகின்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்கள் வங்கிகளிடம் கடன்பட்டு தமது முதலீட்டு நம்பிக்கைகளையும் கைவிட்டுள்ளது. இதனால் முதலீடு செய்ய தயாராக இருந்த ஏனைய தொழில்முனைவோரும் சோர்வடைந்துபோயுள்ளனர்.

எனவே, அரசாங்கம் தனது தவறான செயலிலிருந்து இப்போதாவது விலக வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net