நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷன சூரியபெரும ஒரு கள்ளத்தோணி . இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொண்ட இவர் அரசியலுக்கு வருவதற்காக அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துச் செய்துள்ளார்.அவ்வாறாயின் அவர் நாடற்றவராகவே கருதப்படுவார். இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழலுக்கு எதிராக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஊழலையே முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. உண்மையில் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். ஊழலுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறது என்று குறிப்பிட்டு தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.இது தான் ஆரம்பம் என்று அரசாங்கம் நினைத்துக் கொள்ள வேண்டும்.
நிதியமைச்சின் செயலாளரான ஹர்ஷன சூரியபெரும நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளார்.அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு நிதியமைச்சின் மேலதிக செயலாளர்கள் மூவரை அனுப்பி வைப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டார் . ஆனால் ஒருவரை கூட அவர் அனுப்பி வைக்கவில்லை.
திறைசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. திறைசேரியின் 16 அதிகாரிகளின் கையொப்பத்தை பெற்றுவிட்டா, ஹேக்கர்கள் நிதியை மோசடி செய்வார்கள்.இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையாக செயற்படவில்லை.
இந்த மோசடி தொடர்பில் திறைசேரியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. ஆகவே அவர் அரசியலமைப்பில் 148,149 மற்றும் 150 ஆகிய உறுப்புரிமைகளை மீறியுள்ளார். நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு. பாராளுமன்றமே நிதி விவகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அதிகாரத்தை திறைசேரியின் செயலாளர் மலினப்படுத்தியுள்ளார்.
திறைசேரியின் செயலாளரின் இரட்டை குடியுரிமை பற்றி தற்போது கேள்வியெழுப்பப்படுகிறது. இவர் அவுஸ்ரேலிய பிரஜை. அரசியலுக்கு வருவதற்காக இலங்கையில் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது முதல் குடியுரிமையான அவுஸ்ரேலிய குடியுரிமை உரித்தை இரத்துச் செய்துள்ளார். அவ்வாறாயின் இவர் ஒரு கள்ளத்தோணி என்றே குறிப்பிட வேண்டும்.
நாட்டின் நிதி அமைச்சின் செயலாளர் நாடற்றவராகவே தற்போது உள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். நாடற்ற நபர் எவ்வாறு நாட்டின் நிதியமைச்சின் செயலாளராக பதவி வகிக்க முடியும் என்றார்.