← முகப்பு செய்திகள்

தமிழக முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்பு – நேரு உள் விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தயார்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 62 பார்வைகள்
தமிழக முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்பு – நேரு உள் விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தயார்

பட மூலாதாரம், TVK

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்கிறார். விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

மே 13-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு விமானம் மூலம் வருகை தருகிறார்.

முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியமைக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தவெக அரசுக்கான ஆதரவு

விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. அதில், இரு தொகுதிகளில் வென்ற விஜய் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அதன் பலம் 107 ஆகிறது.

காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகளும் தலா 2 உறுப்பினர்கள் என மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது.

தவெக, விஜய், தமிழ்நாடு

பட மூலாதாரம், Lok Bhavan

5 நாள் நீடித்த இழுபறி

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியாகின. இதில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

”இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளைக் கூட்டணியில் இருந்து வெளியே வைக்க வேண்டும்” என்கிற நிபந்தனையுடன் தவெகவுக்கு முதல் கட்சியாக கடந்த 6-ஆம் தேதி ஆதரவளித்தது காங்கிரஸ். அக்கட்சி திமுக கூட்டணியில் 5 இடங்களை பிடித்திருந்தது.

தலா 2 இடங்களை பிடித்த திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை “நிலையான ஆட்சிக்கு” நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கடந்த 8-ஆம் தேதி தெரிவித்திருந்தன.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான விசிக தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்தது. 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள ஐயூஎம்எல் கட்சியும் தவெக ஆட்சியமைய நிபந்தனையற்ற ஆதரவளித்தது.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

த.வெ.க. தலைவர் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிப்பதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வழங்கினார். நேற்று தவிர்த்து, முன்னதாக இருமுறை ஆளுநரை சந்தித்திருந்தார் விஜய்.

இதனிடையே, திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடந்ததாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அக்கட்சிகளின் இரண்டாம்கட்ட தலைவர்கள் இதனை மறுத்தனர்.

டிடிவி தினகரன் புகார்

அமமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள ஒரே உறுப்பினரான காமராஜ் தவெக ஆட்சியமைக்க அதரவு தருவதாக ஆளுநரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, ஆளுநரை இருமுறை நேரடியாக சந்தித்த தினகரன், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net