மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று (ஜூன் 11) மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடங்குகின்றன. இத்தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், பிபா அமைப்பு கொண்டு வந்துள்ள புதிய ‘தண்ணீர் இடைவேளை’ விதிமுறை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, ஆட்டத்தின் ஒவ்வொரு பாதியிலும் சரியாக 22வது நிமிடத்தில் நடுவர் ஆட்டத்தை நிறுத்துவார். அப்போது வீரர்களுக்கு 3 நிமிடங்களுக்கு கட்டாய தண்ணீர் இடைவேளை வழங்கப்படும். ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் வெயில் கொளுத்தினாலும் அல்லது ஏசி வசதி கொண்ட குளுகுளு மைதானமாக இருந்தாலும் இந்த 3 நிமிட இடைவேளை கட்டாயம் என பிபா அறிவித்துள்ளது. இந்த இடைவேளையின் போது வீணாகும் நேரம் ஆட்டத்தின் இறுதியில் கூடுதல் நேரமாக சேர்க்கப்படும் என போட்டி இயக்குனர் மனோலோ சுபிரியா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வீரர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிபா கூறுகிறது. கடந்த 2025 கிளப் உலகக் கோப்பை போட்டியின் போது 38 டிகிரி வெயிலில் விளையாட முடியாமல் வீரர்கள் திணறியதையும், பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் இது குறித்து புகார் அளித்ததையும் பிபா சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், ரசிகர்கள் மற்றும் கால்பந்து வல்லுநர்கள் பிபாவின் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. 45 நிமிடங்களுக்கு எவ்வித இடைவேளையும் இன்றி தொடர்ந்து விறுவிறுப்பாக நடக்கும் கால்பந்து போட்டியை, அமெரிக்க விளையாட்டுகளான எம்பிஏ மற்றும் என்எப்எல் போல விளம்பரத்திற்காக பிரிக்கவே பிபா இந்த தந்திரத்தை கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த 3 நிமிட இடைவேளையின் போது தொலைக்காட்சிகள் 2 நிமிடம் 10 விநாடிகளுக்கு விளம்பரங்களை ஒளிபரப்ப பிபா அனுமதி அளித்துள்ளது. அல்லது டிவி திரையை இரண்டாகப் பிரித்து விளம்பரம் காட்டப்படும். இதனால் ஆட்டம் 4 பகுதிகளாக (ஒரு பகுதிக்கு 22 நிமிடம்) பிரிக்கப்பட்டு கால்பந்தின் விறுவிறுப்பு முற்றிலும் கெட்டுப்போகும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
உலகக்கோப்பையில் ரோஹித், விராட் கோலி ஆடுவது இவங்க கையில் தான் உள்ளது.. அஸ்வின் ஓபன் டாக்
சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் 18 டிகிரி குளிர்ச்சியான வானிலை நிலவிய போதும் நடுவர் கட்டாய தண்ணீர் இடைவேளை அளித்தார். வீரர்கள் குளிரில் நடுங்கியபடி மைதானத்தில் நின்று தண்ணீர் குடித்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பிபாவின் விளம்பர தாகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
இன்று (ஜூன் 11) நடக்கும் முதல் ஆட்டத்தின் போது 22வது நிமிடத்தில் ஆட்டம் நிறுத்தப்படும் போது இதன் தாக்கம் முழுமையாக தெரியவரும். இது கால்பந்து விளையாட்டின் அழகை சிதைக்கும் ஒரு முயற்சி என்றே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.