இலங்கை முன்பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பாரிய நிதி நெருக்கடிகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி, தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.
தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத் மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் இன்று (17) புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கத்தின் முறைப்பாட்டு கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தற்போது 19,000 இற்கு நெருக்கமான முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அண்ணளவாக 40,000 ஆசிரியர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும் போது பிள்ளைகளுக்கு சிறந்தவற்றையே வழங்குவோம் எனக் கூறிய போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே தற்போதைய அரசு நடந்துகொள்கின்றது என்பது மிக தெளிவாகத் தெரிகின்றது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் அரசினால் வழங்கப்படும் ரூ. 6,000 கொடுப்பனவை பெருமளவான ஆசிரியர்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் இருந்து ரூ. 2,500 ஆக காணப்பட்ட இக்கொடுப்பனவு, 2022 ஆம் ஆண்டில் இருந்து ரூ. 5,000 வரை அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ. 6,000 ஆக மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும், தற்போது புதிய நடைமுறைகளின் கீழ் ஆசிரியர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னர் வடமேல் மாகாணத்தின் சகுரா நிறுவனம் மற்றும் மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு புனித ஜோர்ஜ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (பதிவு எண்: 054) ஆகியவற்றில் டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றிருந்தனர். இந்த புனித ஜோர்ஜ் நிறுவனமானது சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சில் பல வருடங்களாக பதிவு செய்யப்பட்டு, கடந்த வருடங்களிலும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும். ஆனால், தற்போது இந்த சான்றிதழ்கள் செல்லுபடியற்றவை எனக் கூறி, அரசாங்கம் பெயரிடும் நிறுவனங்களில் இருந்து மீண்டும் ஒரு புதிய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கடந்த 2 வருடங்களாக புதிய ஆசிரியர்கள் எவரும் பதிவு செய்யப்படவில்லை.
அத்துடன், மாதாந்தம் கிடைக்க வேண்டிய ரூ. 6,000 கொடுப்பனவை வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட திகதி கிடையாது. சில ஆசிரியர்களுக்கு 4 முதல் 6 மாதங்கள் வரை இந்த கொடுப்பனவு கிடைக்கவில்லை. மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கிடைக்க வேண்டிய ரூ. 6,000 கொடுப்பனவுக்காக, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அவர்களை வரவழைத்து, 4 அல்லது 6 மாத காலத்துக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டதாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகாரிகளினால் செலவுச் சான்றுகளில் (வவுச்சர்) கையொப்பம் பெறப்படுகின்றது. ஆனால், ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படுவதில்லை. இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதிகள் இருந்தும், அதனை வழங்குவதற்கு அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் சில ஆசிரியர்களுக்கு 1 வருடம் அல்லது 2 வருடங்களாக இக்கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறான புதிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக 2027 ஆம் ஆண்டாகும் போது 50% ஆன முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்காமல் போகும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் 10 முதல் 25 வருடங்கள் வரை நீண்ட அனுபவமிக்க முன்பள்ளி ஆசிரியர்கள் நடுத்தெருவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. முன்பள்ளி கட்டிடங்களை அமைப்பதற்காக வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள், முன்பள்ளியின் மாதாந்த வாடகை, தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் என்பன மிக அதிகமாகக் காணப்படும் பின்னணியில், ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவை கிடைக்காமல் செய்ய முற்படுவது அவர்களின் மனித உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.
எனவே, இந்த விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து அவர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொடுத்து நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.