திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த மற்றும் தெளிவான பதிலொன்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பில் எமது அமைப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மூன்று நாட்களாகியும் முறையான பதில் கிடைக்கவில்லை என தினன தகுண கூட்டிணைவு விசனம் வெளியிட்டுள்ளது.
தினன தகுண கூட்டிணைவினால் வியாழக்கிழமை (7) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலே அக் கூட்டிணைவின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, நதீஷ டி சில்வா மற்றும் ஊடகப் பேச்சாளர் துஷார வீரரத்ன ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அவ் அறிக்ககையின் ஊடாக மேலும் தெரிவிக்கையில்,
திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டை குடியுரிமை குறித்து நாம் கேள்வி எழுப்பி இன்றுடன் மூன்று தினங்கள் கடந்துவிட்டன. எனினும், செயலாளர் தரப்பிலிருந்து இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித சான்றுப் பத்திரங்களோ அல்லது தெளிவுபடுத்தல்களோ முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘முன்னாள் நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைப் பிரஜையல்ல என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்’ எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த கூற்று ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.
இருப்பினும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அந்தப் பதிலை எம்மால் ஒரு பொறுப்பு வாய்ந்த பதிலாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டச் சான்றிதழ் தொடர்பிலும் அரசாங்கத் தரப்பிலிருந்து இவ்வாறே பொறுப்பற்ற பதில்கள் வழங்கப்பட்டன. ஆனால், இறுதியில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ரன்வல தனது சபாநாயகர் பதவியிலிருந்து விலக நேரிட்டது என்பதை நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
சமூகத்தில் நேரடியாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிற்குப் பதிலாக, பிற நபர்கள் அரசியல் நோக்கில் வெளியிடும் கூற்றுக்களை நாம் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை. எனவே, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த பாரதூரமான குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்கு, கலாநிதி சூரியப்பெரும தகுந்த ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் கூடிய விளக்கத்தை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தினன தகுண கூட்டிணைவு மீண்டும் வலியுறுத்துகின்றது.
Politics