← முகப்பு செய்திகள்

இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்குவது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்குவது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமை தெலங்கானாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். செகந்திராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் நாட்டு மக்களிடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தார். அவற்றில் முக்கியமானது, ஓராண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும்.

தங்கம் என்பது பாரம்பரியம், சேமிப்பு மற்றும் குடும்பங்களுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ள இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், பிரதமர் மோதியின் இந்தக் கோரிக்கை முதல் பார்வையில் அசாதாரணமாகத் தோன்றலாம்.

ஆனால், இந்த அறிவிப்பிற்குப் பின்னால் ஒரு பெரிய பொருளாதாரக் கவலை ஒளிந்திருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அது, இரான் போர் காரணமாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஆகும். இந்த நெருக்கடி இந்தியாவின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாவதுடன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பலவீனமடைந்து வருகிறது.

பொருட்கள் விநியோகச் சங்கிலியை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் மோதி, "விநியோகச் சங்கிலியில் நெருக்கடி நீடித்தால், நாம் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். எனவே, இப்போது நாட்டை முதலிடத்தில் வைத்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாட்டிற்காக உயிரைத் துறப்பது மட்டுமே தேசபக்தி அல்ல; நாட்டிற்காக வாழ்வதும், தனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதும் கூட தேசபக்திதான்" என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "தங்கம் வாங்குவது நமது அந்நியச் செலாவணி பெருமளவில் செலவிடப்படும் மற்றொரு முக்கிய காரணியாகும். ஒரு காலத்தில் நாட்டிற்கு நெருக்கடி ஏற்படும்போது, மக்கள் தங்கத்தைத் தானமாக வழங்கினர். இன்று தானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாட்டின் நலன் கருதி, அடுத்த ஓராண்டு காலத்திற்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் தங்க நகைகளை வாங்குவதில்லை என்று நாம் உறுதி ஏற்க வேண்டும்," என்றார்.

"தங்கம் வாங்க மாட்டோம். நமது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகத் தேசபக்தி நமக்கு ஒரு சவாலை விடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

இந்தியபொருளாதாரத்தில் தங்கம் ஏன் முக்கியமானது?

தங்கம் இறக்குமதி, இந்திய பொருளாதாரம்,

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத் ஐஐடியில் இந்திய தங்க கொள்கை மையத்தின் தலைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி இது குறித்து பிபிசியிடம் பேசுகையில், "ஒவ்வோர் ஆண்டும் 600 முதல் 700 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஏற்றுமதி மிகவும் குறைவு என்பதால், இந்தத் தங்கம் அனைத்தும் வீடுகளிலேயே முடங்கிக் கிடைக்கிறது," என்றார்.

"இந்திய வீடுகளில் பெருமளவு தங்கம் உள்ளது. இதுகுறித்த பல்வேறு மதிப்பீடுகள் இருந்தாலும், பொதுவாக இந்திய வீடுகளில் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் டன் வரை தங்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது," என்று அவர் கூறினார்.

சுந்தரவள்ளி மேலும் கூறுகையில், "நாடு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 முதல் 800 டன் தங்கத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி வெறும் 1 முதல் 2 டன் அளவிலேயே உள்ளது. அதாவது, இந்தியா தனது தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது," என்றார்.

உலகத் தங்க கவுன்சிலின் (World Gold Council) தரவுகளின்படி, 2026 பிப்ரவரி நிலவரப்படி இந்திய அரசிடம் சுமார் 880 டன் தங்கம் கையிருப்பில் இருந்தது. இந்தத் தங்கக் கையிருப்பு வரிசையில் இந்தியா உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஐஎம்எஃப் , இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.

மற்ற பொருட்களைப் போலன்றி, தங்கத்தின் இறக்குமதி நாட்டின் தொழில் துறை உற்பத்திக்கு நேரடியாகப் பங்களிப்பதில்லை. இருப்பினும், இதனை இறக்குமதி செய்யப் பெருமளவு செலவிட வேண்டியுள்ளது. இது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 முதல் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியிருப்பதால், கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தக் கவலை இன்னும் அதிகரிக்கிறது. இரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 75 டாலரிலிருந்து 110 டாலர் வரை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் காரணமாக எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்ந்துள்ள சூழலில், இறக்குமதிச் செலவை அதிகப்படுத்தும் தேவையற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதில் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் மொத்த இறக்குமதிச் செலவில் தங்கத்தின் பங்கு சுமார் 9 சதவீதமாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாகத் தங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

விநியோக நெருக்கடி

தங்கம் இறக்குமதி, இந்திய பொருளாதாரம்,

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தங்கச் சந்தை ஏற்கனவே விநியோக நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில்தான் பிரதமரின் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

உலகத் தங்க கவுன்சிலின் 2026 மார்ச் 31 வரையிலான தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஆபரணத் தங்கத்திற்கான தேவை, கடந்த ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் குறைந்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 82 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 66 டன்னாகக் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வால் மட்டும் இந்த வீழ்ச்சி ஏற்படவில்லை; மாறாக, இறக்குமதி நடைமுறைகளில் உள்ள நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் செயல்பாடு ரீதியான தடைகளும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

எண்ணெய் நெருக்கடியின் போது தங்கம் ஏன் ஒரு சிக்கலாக மாறுகிறது?

தங்கம் இறக்குமதி, இந்திய பொருளாதாரம்,

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய ஒற்றுமை உள்ளது. இவை இரண்டின் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுவதுடன், இதற்கான பணத்தை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டியுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரிக்கும் அதே வேளையில் தங்கத்தின் இறக்குமதியும் அதிகமாக இருந்தால், இந்த இறக்குமதிக்கான தொகையைச் செலுத்த இந்தியாவிற்கு மிக அதிகமான டாலர் தேவைப்படும்.

இது அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான தேவையை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பிற்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே, இந்த ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 5 சதவீதம் வரை சரிந்து, அதன் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

தங்கம் இறக்குமதி இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

தங்கம் இறக்குமதி, இந்திய பொருளாதாரம்,

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார நிபுணர்கள் தங்கத்தை ஒரு சாதாரண நுகர்வுப் பொருளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகளுக்கு எரிபொருள் மிகவும் அவசியமானது. ஆனால், தங்க இறக்குமதியை ஒரு 'விருப்பத்தின் பேரில் செய்யப்படும் செலவு' (Discretionary spending) அல்லது ஒரு முதலீட்டு வாய்ப்பாகவே அவர்கள் கருதுகின்றனர்.

குடும்பங்கள் அதிக அளவில் தங்கம் அல்லது ஆபரணங்களை வாங்கும்போது, தங்க இறக்குமதிக்காகக் கூடுதல் டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. இது நாட்டின் 'நடப்புக் கணக்கு பற்றாக்குறையை' அதிகப்படுத்துகிறது. ஒரு நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை காட்டுகிறது.

அதிகரிக்கும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை பெரும்பாலும் இந்திய ரூபாயை பலவீனப்படுத்துகிறது. ஏனெனில், நாடு ஈட்டும் அந்நியச் செலாவணியை விடவும் அதிகமாகச் செலவிடுகிறது. இத்தகைய சூழல்களில்தான் அரசாங்கங்கள் தங்க இறக்குமதி விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.

பொருளாதார நெருக்கடி நிலவும் காலங்களில், தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா ஏற்கனவே எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளன. மேலும், 'தங்கப் பத்திரங்கள்' மற்றும் 'எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட்ஸ்' போன்ற மாற்று முதலீட்டு முறைகளை ஊக்குவித்துள்ளன. அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதும், இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருப்பதுமே இத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

ஒரு குடும்பம் தங்கம் வாங்குவது உண்மையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?

தங்கம் இறக்குமதி, இந்திய பொருளாதாரம்,

பட மூலாதாரம், Getty Images

ஒரு தனிப்பட்ட குடும்பம் நகை வாங்குவதைத் தள்ளிப்போடுவதால், இந்திய ரூபாயின் மதிப்பில் நேரடியாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்பது உண்மைதான். ஆனால், கோடிக்கணக்கான குடும்பங்களின் ஒட்டுமொத்தத் தேவை மற்றும் ஒவ்வோர் ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான டன் தங்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும்போது, அதன் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும்.

திருமண காலங்களிலும், பொருளாதார நிச்சயமற்ற சூழல்களிலும் தங்கத்திற்கான தேவை பெரும்பாலும் அதிகரிக்கிறது. ஏனெனில், இந்தியக் குடும்பங்கள் இன்றும் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகவே கருதுகின்றன.

தங்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அதன் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் அந்த நாட்டின் நாணய மதிப்பின் மீதும் நேரடிப் பாதிப்பை உண்டாக்குகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
IND vs AFG Test Toss, Playing XI: Left-Arm Spinner Manav Suthar Makes
06 Jun 2026
செய்திகள்
R. Praggnanandhaa created history by becoming the first Indian champion to win
06 Jun 2026
செய்திகள்
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட
18 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் ப
21 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்றதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி
31 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் – பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன ‘மந்திரம்’
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net