பட மூலாதாரம், Agadez governorate/Facebook
சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், வடக்கு நைஜரில் தங்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையிலான முக்கிய எல்லைக் கடப்புப் பகுதியான அசாமாகாவிலிருந்து (Assamaka) மேற்கே 80 கிலோமீட்டருக்கும் (50 மைல்) அதிகமான தொலைவில் அந்தக் குழுவினர் சிக்கிக்கொண்டனர்; இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-அதா (பக்ரீத்) கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் தண்ணீர் தீர்ந்துபோனது.
"தீவிரமான வெப்பநிலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் இல்லாத சூழல் காரணமாக உயிர் வாழ்வது மிகவும் கடினமாக உள்ள பகுதியின் மையப்பகுதியில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்," என்று அகடேஸ் (Agadez) ஆளுநர் கூறினார்.
இதில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அவர்கள் பாலைவனத்தைக் கடந்து அசாமாகாவை அடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
"இது பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்த்துப் போராடி வரும் ஒரு விஷயம்," என்று உள்ளூர் அரசு சாரா அமைப்பின் தலைவரான செஹுவோ அஜிஸு பிபிசியிடம் கூறினார்.
"பாலைவனத்தைக் கடப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சமீபத்தில் நடந்த இந்தச் சம்பவம் ஒன்றும் புதிதல்ல; பொதுவாக, லிபியா அல்லது அல்ஜீரியா செல்லும் பாதையில் இத்தகைய நிகழ்வுகளை எங்களால் காண முடிகிறது."
சமீபத்திய இந்தச் சம்பவத்தில், மாலி நாட்டின் டெல்ஹாண்டெக் (Telhandek) நகரிலிருந்து புறப்பட்ட லாரி, தனது திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாக அகடேஸ் ஆளுநரின் அறிக்கை தெரிவித்தது.
ஓட்டுநரும் பயணிகளும் பல நாட்களாக வாகனத்தைப் பழுதுபார்க்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
"தண்ணீர் கிடைக்காததாலும், வாகனத்தைப் பழுது பார்க்க முடியாததாலும்" அவர்களில் பெரும்பாலோரால் உயிர் பிழைக்க முடியவில்லை என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
"நகராமல் நின்று கொண்டிருந்த அந்த வாகனத்தின் அடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள்; உள்ளூர் அதிகாரிகளால் அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட மீட்புக் குழுவினர் சடலங்களை அடக்கம் செய்தனர்.

பட மூலாதாரம், Agadez governorate/Facebook
மீட்புப் பணியை முடித்துத் திரும்பும்போது, பேட்டரி பழுது காரணமாக மூன்று நாட்களாக நின்றுகொண்டிருந்த, 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியை மீட்புக் குழுவினர் கண்டனர்.
நைஜர் எல்லையிலிருந்து 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள மாலி நகரமான ஹரூபாவிலிருந்து அந்த லாரி புறப்பட்டதாக ஆளுநர் தனது மற்றொரு அறிக்கையில் தெரிவித்தார்.
நைஜர் நாட்டுப் படையினர் அடங்கிய மீட்புக் குழுவினர், "மிகுந்த சோர்வுடனும் மன உளைச்சலுடனும் இருந்த பயணிகளுக்கு" குடிநீர் வழங்கியதுடன், வாகனத்தைச் சரிசெய்யவும் உதவினர்; இதனால் அவர்கள் தங்கள் பயணத்தை பாதுகாப்பாகத் தொடர முடிந்தது.
ஐரோப்பா செல்லும் நோக்கில் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதிலுமிருந்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு நைஜரில் உள்ள பாலைவன பகுதி ஒரு முக்கியப் போக்குவரத்துப் பாதையாகத் தொடர்ந்து விளங்குகிறது; இவர்கள் ஆபத்துகள் நிறைந்த இந்தப் பயணத்துடன் தொடர்புடைய இடர்பாடுகளை பொருட்படுத்தாமல் பயணிக்கின்றனர்.
அருகிலுள்ள நகரமான அகடேஸின் ஆளுநர் கூறுகையில், "பிழைப்புக்காகவோ அல்லது சிறந்த வாழ்க்கைச் சூழலைத் தேடியோ ஆபத்தான பகுதிகள் வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும், புலம்பெயர்வு மற்றும் எல்லை தாண்டிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களின் துயர நிலையை" இந்தத் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ் எவோகோர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு