← முகப்பு செய்திகள்

நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் – பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன ‘மந்திரம்’

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் – பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன ‘மந்திரம்’

பட மூலாதாரம், FIDE

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.

அதேநேரத்தில், அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வென்று வெஸ்லி சோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா தனது இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வெஸ்லி சோ சாம்பியன் ஆகியிருப்பார். ஃபிரோஸ்ஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நடப்பு உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் குகேஷை வீழ்த்தியதன் மூலம் நார்வேயைச் சேர்ந்த முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

மகளிர் பிரிவைப் பொருத்தவரை, ஒரு சுற்று மீதமிருக்கையிலேயே கடந்த வியாழக்கிழமை பிபிசாரா அசாவுபயேவா சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிட்டார். இருப்பினும் அதன் பிறகு நடந்த ஆட்டங்களை வீராங்கனைகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் நடந்த மூன்று கிளாசிக்கல் ஆட்டங்களிலும் முடிவுகள் கிடைத்தன. இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை வீழ்த்தி ஜூ ஜினர் இரண்டாவது இடத்தையும், இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை வீழ்த்திய அன்னா முசிச்சுக் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மகளிர் உலக சாம்பியனான ஜூ வென்ஜுன், இத்தொடரின் வெற்றியாளரான பிபிசாரா அசாவுபயேவாவை வீழ்த்தி நான்காவது இடத்தைப் பிடித்தார்.

கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்த பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா ஆறாம் இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். அதாவது, ஆறாம் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை (11.5)விடவும் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பின்தங்கியிருந்தார்.

அதன் பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 12-க்கு 12 என்ற வகையில் முழுமையான புள்ளிகளை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகள் சேர்த்த அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். கடைசி சுற்றுக்கு முன்பு வரையிலும் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை விட இறுதியில் அவர் ஒரு புள்ளி அதிகம் பெற்று மகுடம் சூடினார்.

இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்தும் கிளாசிக்கல் செஸ் முறையிலேயே தீர்மானிக்கப்பட்டன. வெஸ்லி சோ தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், பிரக்ஞானந்தாவுக்குப் பதிலாக அவரே பட்டத்தை வென்றிருப்பார்; ஆனால் அவரால் 'ஆர்மகெடன்' (armageddon) சுற்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பிரக்ஞானந்தா, நார்வே செஸ், மேக்னஸ் கார்ல்சன்

பட மூலாதாரம், FIDE

பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன 'மந்திரம்'

ஆறாவது சுற்றில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்த போது, முதலிடத்தில் இருந்தவரை விட 5.5 புள்ளிகள் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, அதன்பின் மீண்டு வந்து சாம்பியனானது வியக்கத்தக்கது.

எதிர்பார்த்தபடியே, அந்த நேரத்தில் போட்டியில் வெற்றி பெறுவதைப் பற்றி தான் சிந்திக்கவில்லை என்று பிரக்ஞானந்தா கூறினார்.

சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அவர், "நான் செஸ் விளையாட மட்டுமே விரும்பினேன். ஆனால் எப்படியோ அனைத்தும் எனக்குச் சாதகமாக அமைந்தன. நான் அதிக கட்டுப்பாட்டுடன் விளையாடத் தொடங்கியதாக உணர்கிறேன்; அது எப்போதும் ஒரு நல்ல விஷயமாகும்." என்றார்.

பிரக்ஞானந்தா வேகமாக விளையாட முயன்றாலும், தன் தாயின் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

"அலிரேசாவுடனான ஆட்டத்திற்கு முன், ஜூன் ஒன்றாம் தேதி நான் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'இது ஒரு புதிய மாதம், நீ நன்றாக விளையாடுவாய்!' என்று கூறினார். அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று; ஆனால் அதன் பிறகு நான் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!" என்றார் பிரக்ஞானந்தா.

அதன் பிறகு நடந்த அனைத்துமே செஸ் உலகில் வியக்கத்தக்க ஒன்று. ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் மற்றும் கீமர் ஆகியோரை பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா, நார்வே செஸ், மேக்னஸ் கார்ல்சன்

பட மூலாதாரம், Mahmud HAMS / AFP via Getty Images

பிரக்ஞானந்தாவுக்கு கார்ல்சன் புகழாரம்

பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய மேக்னஸ் கார்ல்சன், " இது நம்ப முடியாத ஒன்று! மிக முக்கியமான தருணத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கான (clutch) ஒரு சிறந்த உதாரணம் இது. இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை என்னாலும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது; ஆனால் உண்மையில் இது வியக்கத்தக்கது. அவர் ஒரு அற்புதமான போராளி; அதற்கான பலனை அவர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று புகழாரம் சூட்டினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
IND vs AFG Test Toss, Playing XI: Left-Arm Spinner Manav Suthar Makes
06 Jun 2026
செய்திகள்
R. Praggnanandhaa created history by becoming the first Indian champion to win
06 Jun 2026
செய்திகள்
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட
18 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் ப
21 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்றதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி
31 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net