பட மூலாதாரம், Getty Images
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் புலனாய்வாளர்கள், இறுதி அறிக்கையை வெளியிட இன்னும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், விபத்துக்கான உண்மைக் காரணம், யாருடைய தவறு விபத்துக்கு வழிவகுத்தது போன்ற கேள்விகளுக்கான தெளிவான தகவலை அறிய இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் விமான விபத்துகளை விசாரிக்கும் முகமையான விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB), ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புதிய தகவலை வெளியிட்ட இந்தியாவின் விமான விபத்து விசாரணை வாரியம், விமான விபத்து தொடர்பான ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதில் சில "குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்" ஏற்பட்டு இருப்பதாகவும், ஆயினும் விசாரணை செயல்முறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் வழங்கப்பட்டிருந்த சில விவரங்களில் இறுதி அறிக்கை எப்போது வெளியிடப்படலாம் என்ற தகவலும் அடங்கியிருந்தது.
கடந்த 2025 ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னணியில் உள்ள துல்லியமான காரணங்கள் குறித்துப் பல ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்திய விமான விபத்து விசாரணை வாரியம், தனது சமீபத்திய அறிக்கையில், "கடந்த ஓராண்டில், விசாரணைக் குழு விபத்துடன் தொடர்புடைய அனைத்து தொழில்நுட்ப, செயல்பாட்டு, நிறுவன மற்றும் மனித காரணிகள் குறித்து ஆழமான விசாரணையை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், "விமான அமைப்புகள், விமானப் பதிவுத் தரவுகள், இஞ்சினுடன் தொடர்புடைய பாகங்கள், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுப் பதிவுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பல்வேறு விசாரணைகளின் முடிவுகள் தற்போது முழுமையாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன."
"அனைத்து விசாரணை நடைமுறைகளும், தேவையான சர்வதேச மறுஆய்வு மற்றும் ஆலோசனைகளும் முடிந்த பின்னரே இறுதி அறிக்கை வெளியிடப்படும். விபத்தின் ஒவ்வோர் அம்சமும் மிகவும் கவனமாக ஆராயப்படும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AAIB
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது அன்பிற்கு உரியவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கிய விஷயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, "விபத்து விசாரணையின் ஒரே நோக்கம், இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, பாதுகாப்புப் பரிந்துரைகளைக் கண்டறிந்து விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதுதானே தவிர, யார் மீதும் குற்றத்தையோ அல்லது பொறுப்பையோ சுமத்துவது அல்ல."
சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடையும்போது விமான விபத்து விசாரணை வாரியம் ஒரு புதிய தகவலை வெளியிட வேண்டும்.
ஒருவேளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அது உறுதியான முடிவை வழங்கியிருக்குமா என்பது குறித்து ஏற்கெனவே சந்தேகங்கள் இருந்தன. கடந்த மே மாதம், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து விசாரணை அதன் "இறுதி" கட்டத்தில் உள்ளதாகவும், இறுதி அறிக்கை பெரும்பாலும் ஒரு மாதத்திற்குப் பிறகு வரக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.
பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்
ஓராண்டுக்கு முன்பு, ஜூன் 12ஆம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 171 விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பறக்கத் தொடங்கிய ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரகத்தைச் சேர்ந்தது. இது ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தது.
கேப்டன் சுமித் சபர்வால் விமானத்தை இயக்க, கிளைவ் குந்தர் முதல் அதிகாரியாக அவருடன் இருந்தார். இவர்கள் இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். விபத்து நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் அவர்கள் ஆமதாபாத் வந்தடைந்திருந்தனர்.
விபத்துக்கு முன்னதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மேடே மேடே மேடே' என்ற அவசர உதவிக்கான சமிக்ஞையை விமானி அனுப்பிய சில விநாடிகளில், மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை மருத்துவர்களுக்கான விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட கட்டடத்தின் மீது விமானம் மோதியது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பயணிகள், விமானிகள் மற்றும் பணிக் குழுவினர் உள்பட மொத்தம் 260 பேரும், தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர்; ஒரு பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார்.
அந்த விமானத்தில் 169 இந்திய குடிமக்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்ச்சுகீசிய குடிமக்கள், ஒரு கனேடியர் மற்றும் 12 பணிக் குழுவினர் பயணம் செய்தனர்.
அதே ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், UGC
விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் கிடைத்தது என்ன?
விமான விபத்துகளை விசாரிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள சர்வதேச விதிகளின்படி, விபத்து நடந்த ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபத்து நடந்த தேதியில் இருந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் விசாரணையின் விரிவான இறுதி அறிக்கையை வழங்க வேண்டும்.
ஒருவேளை ஓராண்டிற்குள் விசாரணையை முடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், இறுதி அறிக்கை தயாராகும் வரை, விபத்து நிகழ்ந்த தேதியைக் கணக்கில் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த விபத்து நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, 2025 ஜூலை 12 அன்று முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. விமானத்தில் இரண்டு விமானிகளுக்கு இடையிலான உரையாடலையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. இந்த உரையாடல், விமானத்தின் காக்பிட் குரல் பதிவுக் கருவி மூலம் செய்யப்பட்ட பதிவிலிருந்து பெறப்பட்டது.
அந்த அறிக்கைப்படி, "விமானத்தின் இரு விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் வெளிவந்தன. இந்த உரையாடல்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் பதிவிலிருந்து பெறப்பட்டவை. இந்த உரையாடலின் போது இரண்டு விமானிகளும் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதை அந்த அறிக்கை விரிவாகக் காட்டியது."
ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பி பறக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே விமானத்தின் இன்ஜினுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டது முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி, "ஏன் நிறுத்தினீர்கள்?" என்று கேட்பது கேட்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அதற்கு மற்றொரு விமானி, "தான் அப்படிச் செய்யவில்லை" என்று பதிலளித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
விமானத்தின் எரிபொருள் சுவிட்சுகள் ஆஃப் ஆனது எப்படி?
விமான தரவுப் பதிவின்படி, விமானம் ஓடுதளத்தில் இருந்து பறக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே, காக்பிட்டில் இருந்த இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஒரு நொடி இடைவெளியில், 'இயங்கும் (ஆன்)' நிலையில் இருந்து 'நிறுத்தும் (ஆஃப்)' நிலைக்குச் சென்றன.
பொதுவாக இந்த சுவிட்சுகள், விமானம் தரை இறங்கிய பிறகு இன்ஜின்களை அணைப்பதற்காக அல்லது இன்ஜினில் தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் மட்டுமே அணைக்கப்படும், விமானம் புறப்படும்போது அணைக்கப்படுவதில்லை.
இந்த சுவிட்சுகள் ஆஃப் ஆனதன் காரணமாக, இரண்டு இன்ஜின்களும் காற்றில் உயரே பறப்பதற்குத் தேவையான உந்துவிசையை இழந்துவிட்டதாக விசாரணை அறிக்கை கூறுகிறது.
காக்பிட்டில் கடும் குழப்பம் நிலவியதும் பதிவாகியுள்ளது. அதில் ஒரு விமானி மற்றொரு விமானியிடம் "ஏன் எரிபொருள் விநியோகத்தை ஆஃப் செய்தீர்கள்?" என்று கேட்க, மற்றவர் தான் அப்படிச் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
இருப்பினும், அந்தப் பதிவில் கேட்கும் குரல்களில் எது யாருடைய குரல் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. இந்த விமானத்தின் முதன்மை விமானியாக கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் துணை விமானியாக கிளைவ் குந்தர் இருந்தனர்.
அதன் பிறகு, எரிபொருள் சுவிட்சுகள் மீண்டும் அவற்றின் இயல்பான இன்-பிளைட் நிலைக்குத் திரும்பின. இதனால் இன்ஜின்கள் தானாகவே மீண்டும் இயங்கத் தொடங்கும் செயல்முறை ஆரம்பித்தது.
அதில் ஒரு இன்ஜினால் தனது உந்துவிசையை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால், வேகமாகக் குறைந்து கொண்டே வந்த விமானத்தின் வேகத்தை அதனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
கீழே விழுந்த விமானம், மருத்துவர்களின் குடியிருப்புக் கட்டடத்தின் மீது மோதி வெடிப்பதற்குச் சில நொடிகள் முன்புதான், விமானிகளில் ஒருவர் 'மேடே, மேடே, மேடே' என்ற அவசரக் கால அழைப்பை அனுப்பியுள்ளார்.
விமானம் புறப்படுவதற்கு முன் இரு விமானிகளுக்கும் "போதிய ஓய்வு நேரம்" கிடைத்திருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குப் பறவைகள் மோதியது காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் முன்பு சந்தேகம் எழுப்பியிருந்தனர். ஆனால், விமானம் பறந்த பாதையைச் சுற்றி "குறிப்பிடத்தக்க அளவில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் இல்லை" என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பக்கட்ட அறிக்கைக்குப் பிறகு வேறு என்ன விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது?
அந்த அறிக்கையில் பரிசோதனைகள் தொடர்பான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவை:
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு