அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் உத்தி மற்றும் திட்டங்களுக்கான துணைத் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் கோர்னேலியா மே 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது இந்த விஜயமானது, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான தரைப்படை பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ மற்றும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு பணிகள், இராணுவ பொறியியல் கூட்டுறவு , இராணுவ மருத்துவப் பயிற்சிகள் போன்ற முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பேரிடர் கால ஆயத்த நிலை, சவால்களை எதிர்கொள்ளும் பின்னடைவுத் திறன் மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கையுடன் பங்காளியாகச் செயற்படுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது என இந்த விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.