அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அளவுக்கதிகமாக புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் கண்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பராமரிப்புக் கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அதையும் மீறுவோரின் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (7) அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறுவதிலும், ஏனைய ஆவணக் கொடுக்கல் வாங்கல்களிலும் கடும் தடைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கண்டி மாவட்டத்தின் கெட்டம்பே மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் நடமாடும் புகைப் பரிசோதனைப் பிரிவுகள் மூலம் கடந்த 6ஆம் திகதி முதல் நாளை வெள்ளிக்கிழமை (8) வரை விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாகனங்களில் இருந்து வெளியேறும் கறுப்புப் புகை என்பது ஒரு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமல்ல, அது சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் குற்றம் என சுட்டிக்காட்டியுள்ள திணைக்களம், வாகனங்களை உடனடியாக முறையாகப் பராமரிக்குமாறும் கோரியுள்ளது.
நிர்வாக மாற்றங்கள் காரணமாக சற்று மந்தகதியில் இருந்த இந்த வீதிப் புகைப்பரிசோதனை நடவடிக்கைகள், இம்மாதம் முதல் மீண்டும் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.